புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் அவலம் நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை-கவர்னர் ஆய்வுக்கு பிறகும் மாற்றமில்லை

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் உள்ளிட்டவர்களின் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் மருந்து, மாத்திரைகளின் பற்றாக்குறை மற்றும் படுக்கை வசதி இல்லாததால் உரிய மருத்துவ வசதி கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கதிர்காமல் அரசு மருத்துவ கல்லூரி மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், அரசு பொது மருத்துவமனை கண்டுகொள்ளப்படுவதில்லை.

மேலும் அரசு பொது மருத்துவமனையில் பல ஆண்டுகளாக எம்ஆர்ஐ ஸ்கேன் மெஷின் பழுதாகியுள்ளது. கதிர்காமம் மருத்துவமனைக்கு சென்றுதான் ஸ்கேன் செய்ய வேண்டும். அவசரம் என்றால் ஏழை நோயாளிகள் ரூ.7000 வரை கொடுத்து வெளியே ஸ்கேன் செய்யும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது போதிய படுக்கை வசதி இல்லாததால், நோயாளிகளை நடைபாதையில் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவல நிலை தொடர்கிறது. இதனால் நோயாளிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

தொடர் புகாரையடுத்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது, அரசு மருத்துவமனையில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் உடனடியாக சரிசெய்யப்படும் என உறுதியளித்துவிட்டு சென்றார். ஆனால் ஆய்வு செய்து 8 மாதங்களுக்கு மேலாகியும் அரசு மருத்துவமனையில் இதுவரை எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. புதுச்சேரி அரசு இனியும் மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்களிடம் கேட்டபோது: முத்து(முதலியார்பேட்டை): புதுச்சேரி அரசு மருத்துவமனையின் செயல்பாடு தற்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தின் தரத்துக்கு வந்துவிட்டது. உயர்தர சிகிச்சைகள் ஏதும் இங்கு அளிக்கப்படுவதில்லை. மூளை, இதய பாதிப்புகளுக்கு சிகிச்சைக்கு வருவோர், தங்களின் தனிப்பட்ட ரிஸ்க் எடுத்துதான் மருத்துவமனையில் அனுமதிக்கலாம். மற்றபடி உயிரை காப்பாற்றிவிடுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. குறிப்பாக நரம்பியல் பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்கும் வார்டு, அரசு பொதுமருத்துவமனையில் உள்ளது. ஆனால் இதற்கான முக்கிய பரிசோதனைகள் மேற்கொள்ளும் எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் கதிர்காமத்தில் உள்ளது. எனவே நரம்பியல் சிகிச்சைகள் அனைத்தையும் அங்கு மாற்றிவிட வேண்டும் என்றார்.

ரமேஷ்(வில்லியனூர்): துணை நிலை ஆளுநர் அரசு பொதுமருத்துவமனையில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டார். மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது புதிய அறுவை சிகிச்சை கூடங்கள், கூடுதல் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறைகள் என அனைத்தும் களையப்படும் என கூறியிருந்தார். ஆனால் இது எதுவும் செயல்பாட்டுக்கு வரவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த மருத்துமனை தற்போது ஒரு கைகாட்டி மருத்துவமனையாக மாறிவிட்டது.

பிரபாகரன்(நெட்டப்பாக்கம்): எலும்பு முறிவு சிச்சைபிரிவில் போதிய இடம் இருக்கிறது. ஆனால் படுக்கை வசதிகள் செய்துதரப்படவில்லை. இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், தரையில் பாயில் படுக்க வேண்டிய நிலை உள்ளது. அரசு மருத்துவமனையில் முதலில் செய்யப்பட வேண்டியது. எந்த வார்டுகளிலும் மக்கள் தரையில் படுக்க கூடாது. எனவே இட நெருக்கடியை சமாளிக்க கூடுதலாக ஒரு தளம் அமைக்க வேண்டும்.

மருத்துவமனை சுகாதாரம் படுமோசமாக உள்ளது. இரவு நேரத்தில் பெருச்சாளிகள் வார்டுக்குள் ஓடுகிறது. படுக்கைகள் போதிய இடைவெளியில் துவைப்பது கிடையாது. பெரிய மருத்துவ உபகரணங்கள் வாங்குவதைவிட அத்தியாவசியமான படுக்கைகள், சுகாதாரம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்றார்.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு