நோக்கம் என்ன?

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், இம்மாதம் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என ஒன்றிய பாஜ அரசு அறிவித்துள்ளது. இச்சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் 2018ம் ஆண்டு முதல் பாஜ அரசு கொண்டுவர விரும்பும் `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்னும் நடைமுறையை அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது வரை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் என மூன்று வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, அரசுகள் கவிழும் பட்சத்திலும், கட்சித்தாவல்களாலும், வேட்பாளர்கள் மறைந்தாலும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான சட்ட விதிகளை உருவாக்குதல், அதை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒன்றிய அரசு குழு ஒன்றை நேற்று அமைத்துள்ளது.

நாட்டில் கடந்த 1967ம் ஆண்டு வரை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே காலக்கட்டத்தில்தான் நடத்தப்பட்டு வந்தன. ஆட்சி கலைப்பு உள்ளிட்டவைகளால் தேர்தல்கள் நடத்தப்படும் காலங்கள் மாறின. இந்நிலையில், மீண்டும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக யோசித்து வருவது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டும் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் ஆகியவை சுமார் ரூ.60 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளன. இதேபோல், சட்டமன்ற தேர்தலுக்கும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட அளவில் செலவு செய்கிறது.

எனவே, இந்த 2 தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தினால் இந்த செலவுகளை குறைக்க முடியும் என்றும், 2 தேர்தல்களை சேர்த்து நடத்துவதன் மூலம் நிர்வாக திறனை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் ஒன்றிய பாஜ அரசு கூறியுள்ளது. மேலும், ‘‘ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், சட்டமன்ற தேர்தலின்போது அந்தந்த மாநிலத்தில் அமல்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. தேர்தலை ஒன்றாக நடத்தினால் இதுபோன்ற இடையூறுகள் ஒருமுறை மட்டுமே ஏற்படும். அனைத்திற்கும் மேல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையானது வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும்’’ என்றும் ஒன்றிய அரசு கூறுகிறது. ஒன்றிய அரசின் இந்த முயற்சிக்கு அதிமுக உள்ளிட்ட பாஜ கூட்டணி கட்சிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றன.

எனவே இதன் பின்னணியில் வேறு நோக்கம் இருப்பதாகவும், ஏராளமான குளறுபடிகள் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக, ஒரே தேர்தல் நடத்துவதன் மூலம், மாநில பிரச்னைகளுக்கு ஒன்றிய அரசு முக்கியத்துவம் தராது. மாநிலத்தின் தனித்தன்மையை பாதுகாக்க இயலாமல் போய்விடும் என்ற வலுவான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ளன. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், தேசிய பிரச்னைகளுக்கான முக்கியத்துவம்தான் அதிகரிக்கும். மாநில அரசின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்பட மாட்டாது. இதன்மூலம் மாநிலங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒன்றிய பாஜ அரசு துடிக்கிறது. இந்த சூட்சுமத்துக்கு யாரும் அடிபணிந்து விடக்கூடாது என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருக்கின்றன. வெல்வது யார்? காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.

Related posts

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தலைவர்கள், வேட்பாளர்கள் வீதிவீதியாக ஓட்டு வேட்டை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவு

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை: சென்னை, கரூரில் 7 இடங்களில் சிபிசிஐடி அதிரடி, மனைவியிடமும் விசாரணை