புண்ணியம் தரும் புரட்டாசியும் முன்னோர்கள் வந்தருளும் மஹாளயமும்

1. முன்னுரை

சிறப்புகள் தரும் மாதம் சித்திரை. வளம் தரும் மாதம் வைகாசி. அற்புதங்கள் நிகழும் மாதம் ஆனி. அம்பாளின் ஆசிகள் தரும் மாதம் ஆடி. ஆன்ம பலம் தரும் மாதம் ஆவணி என்று வரிசையாக ஒவ்வொரு மாதத்தின் சிறப்பையும் சொல்லிக் கொண்டே வந்தால், புண்ணியம் தரும் மாதம் புரட்டாசி என்று புரட்டாசி மாதத்தின் பெருமையைச் சொல்லலாம். தமிழ் மாதத்தில் ஆறாவது மாதம் புரட்டாசி மாதம்.

கன்னி ராசியில் சூரியன் பிரவேசிக்கும் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் தான் மஹாளயபட்சம் வருகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஒரே ஒரு தினம் மட்டும் நம்முடைய முன்னோர்கள் நம்மிடையே வந்து நாம் தரும் உபசாரங்களை ஏற்று ஆசி வழங்கிச் செல்லுகின்றார்கள். இந்த மகாளயபட்சத்தில் 15 நாட்கள் நம்மோடு தங்கியிருந்து நமக்கு ஆசி வழங்குகிறார்கள் என்பது புரட்டாசி மாதத்திற்கு உரிய ஏற்றம். அதைப்போலவே மகாளயபட்சம் முடிந்த அடுத்த நாளிலிருந்து நவராத்திரி உற்சவம் ஆரம்பமாகிறது.

2. முதலில் நீத்தார் கடன்,பின் தெய்வ வழிபாடு

கடன்களில் இரண்டு கடன்கள் முக்கியம். ஒன்று நீத்தார் கடன். அடுத்து தெய்வ கடன். இந்த இரண்டு கடன்களும் அடைபட வேண்டும் என்பதற்காகத்தான் புரட்டாசி மாதம். இது ஆறாவது மாதம். ஜோதிட சாஸ்திரத்தில் ஆறாவது ராசி என்பது ருணபாவம் என்பார்கள். அதாவது கடன்களைக் குறிக்கும் ராசி என்பார்கள். அதனால் இந்த மாதம் கடன்கள் அடையும் மாதம் எனலாம். முன்னோர்கள் கடனை முடித்துவிட்டுத் தான் தெய்வ வழிபாட்டுக்கு வர வேண்டும்.

இந்த சாஸ்திர உண்மையை விளக்கும் மாதம் புரட்டாசி. இந்த மாதத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளையும் உற்சவங்களையும் பற்றி விரிவாகக் காண்போம். முதலில் முன்னோர்கள் வழிபாடாகிய மகாளயபட்சத்தின் சிறப்புகளை பார்த்துவிட்டு பிறகு புரட்டாசிக்கு உரிய மற்ற சிறப்புகளையும் தெய்வ வழிபாட்டு நிகழ்வுகளையும் பற்றி இத்தொகுப்பில் காண்போம்.

3. பிதுர் தோஷம் என்ன செய்யும்?

ஜாதக தோஷங்களிலேயே மிகவும் கடுமையான தோஷம், பிதுர் தோஷம் என்பார்கள். மற்ற தோஷங்கள் மிக எளிதான பிராயச்சித்தங்களுக்கு கட்டுப்படும். ஆனால், பிதுர்தோஷங்கள் அவ்வளவு எளிதாகக் கட்டுப்படாது. அவை குடும்பத்தில் பலவிதமான பிரச்னைகளை உண்டாக்கிக் கொண்டே இருக்கும். அதற்கு அடையாளமாக எத்தனை முயன்றும் குடும்பம் விருத்திக்கு வராதது, எந்த நல்ல காரியத்திலும் கடைசி நேரத்தில் தடை ஏற்படும், வாழ்வதில் திருப்தி இருக்காது. சரியான வருமானம் இல்லாமல் இருக்கும். தொழில்கள் தொடர்ந்து நஷ்டமடையும். உடல்நிலை அவப்பொழுது சீர்கெடும். தாம்பத்தியம் முறையாக இல்லாமல் இருக்கும்.

4. துர்கடன் அடைக்க வேண்டும்

இப்படிப்பட்ட விளைவுகள் எல்லாம் பிதுர் தோஷத்தின் விளைவுகள் என்றுதான் சொல்கிறார்கள். இது தலைமுறை தலைமுறையாகக் கூட சில குடும்பத்தில் இருப்பதை நாம் பார்க்கின்றோம். தெய்வ வழிபாடு இருந்தாலும் கூட இந்த பிதுர் தோஷம் அல்லது பிதுர் சாபம் நீங்காத வரை, இப்படிப்பட்ட இடை யூறுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருப்பதையும் பார்க்கின்றோம். எனவேதான், எந்தக் கடனை கழித்தாலும் கழிக்காவிட்டாலும் பிதுர் கடனை கழிக்காமல் விடாதே என்று பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள். குறைந்தபட்சம் ஒவ்வொரு அமாவாசை அன்றும் எள்ளும் நீரும் இறைத்து தென்புலத்தில் வசிக்கும் முன்னோர்களின் தாகத்தையும் பசியையும் தீர்க்க வேண்டும்.

5. திருவள்ளுவர் சொல்வது

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” என்றார் திருவள்ளுவர். நம் குடும்பத்தில் தோன்றி மறைந்தவர் நினைவுகளைப் பாதுகாப்பதும், அவர்களுக்கான வழிபாடு நிகழ்த்துவதும் தென்புலத்தார் ஓம்பல் ஆகும். இதற்குத்தான் அம்மாவாசை வழிபாடு, சிராத்தம் எல்லாம். அமாவாசையன்று மறந்தாலும், வருடாந்திர சிராத்தத்தை மறந்தாலும் இதற்கென்று இருக்கக் கூடிய சிறப்பான பட்சமான மகாளயபட்சத்தை (பட்சம் என்றால் பருவம் -15 நாள்கள்) மட்டும் மறக்காதே என்று சொல்லி இருக்கின்றார்கள். மறந்தவருக்கு மகாளயம் என்கிற வழக்கு இப்படித்தான் வந்தது. மஹாளயத்தில் மறக்காமல் முன்னோர்களை முறையாக வணங்க வேண்டும்.

6. மஹாளயம் என்றால் என்ன?

மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம். அதாவது மறைந்த நமது முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலங்களை மகாளயபட்சம் என்று கூறுகிறோம். புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை. அதற்கு முந்தைய பிரதமை ஆரம்பித்து 15 நாட்களும் முன்னோர்களை வழிபட பல்வேறு புண்ணிய பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கும் ஒரு பலன் உண்டு.

முன்னோர்களின் ஆசியால் செல்வம், புத்திர பாக்கியம், பகையற்ற வாழ்க்கை, கல்வி, புகழ் ஆகியன கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள். இந்தப் பதினைந்து நாட்களும் வீட்டில் சுபகாரியங்கள் செய்ய மாட்டார்கள். வீடுகளில் இந்த நாட்களில் முன்னோர் வழிபாடுகளை முடித்த பின்னே கோலமிடுதல் விளக்கேற்றுதல் போன்ற வழக்கமான கடமைகளைச் செய்வார்கள். இந்தப் பதினைந்து நாட்களும் உணவில் எளிமை வேண்டும். அசைவ உணவுகள் கூடாது. ஆடம்பர விழாக்களைத் தவிர்க்க வேண்டும். கிடைக்கும் நேரங்களில் இறைவழிபாடு, நாம ஜபம் செய்துவர வேண்டும்.

7. மஹாளயம் குறித்து கீதையும் கருட புராணமும்

பகவத் கீதை: மஹாளய பட்சத்தின்போது பக்தியுடன் முன்னோர்களுக்கு வழிபாடு செய்து உபசாரங்களை வழங்குவது ஒரு புனிதமான கடமையாகும், இது ஆன்மிக வளர்ச்சியையும் அவர்களிடம் நமக்கு உள்ள நன்றியையும் வளர்க்கிறது’’ என்கிறது.மநுஸ்மிருதி: ‘‘மஹாளயத்தின் பதினைந்து நாட்களில் செய்யும் சடங்குகள் மூலம் நமது குல முன்னோர்களை வரவேற்று கௌரவிக்கிறோம். இது கடந்த கால மற்றும் தற்போதைய தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும். அவர்களது ஆசியைப் பெற்றுத் தரும்’’ என்கிறது.கருட புராணத்தில்: ‘‘மஹாளயபட்சத்தின்போது சிராத்தத்தைச் செய்வது, இறந்த ஆத்மாக்களுக்கு அமைதியையும் நற்கதியையும் வழங்குகிறது, மேலும், அவர்கள் உயர்ந்த நிலையை அடைய உதவுகிறது’’ என்று மஹாளயபட்சம் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது.

8. மற்ற நூல்கள் கூறுவது என்ன? – பகுதி – 1

1. யாக்ஞவல்கிய ஸ்மிருதி: ‘‘மஹாளய பட்ச சிராத்தங்களைக் கடைப்பிடிப்பது முன்னோர்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும், இணக்கமான வாழ்க்கைக்கு அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும் ஒரு வழியாகும்.’’

2. விஷ்ணு ஸ்மிருதி: ‘‘மஹாளய காலத்தில் முன்னோர்களுக்கு பிரசாதம் வழங்குவது முன்னோர்களின் ஆசீர்வாதங்களை அளிக்கிறது, இது நம் வாழ்வுக்கும் மற்றும் அவர்களின் விடுதலைக்கும் வழிவகுக்கும்.’’

3. அக்னி புராணம்: ‘‘தூய இதயத்துடன் செய்யப்படும் மஹாளய சிரார்த்தங்கள், முன்னோர்களை கர்ம பந்தங்களில் இருந்து விடுவித்து, அவர்களை விடுதலையை நோக்கி உயர்த்த உதவுகின்றன.’’

4. பத்ம புராணம்: ‘‘மஹாளயாவின் பதினைந்து நாட்களில் செய்யப்படும் ​​சிரத்தா சடங்குகள் மூலம் நினைவின் சுடர் பிரகாசமாக எரியட்டும், நம்
பரம்பரையுடன் நம்மை இணைக்கட்டும்.’’

9. மற்ற நூல்கள் கூறுவது என்ன? – பகுதி 2

5. ஸ்காந்த புராணம்: ‘‘மஹாளய பட்சா என்பது ஒரு புனிதமான சந்தியாகும், அங்கு மூதாதையர்களுக்கு பிரசாதம் வழங்குவது நம் லௌகீக வாழ்வுக்கும் ஆன்மிக வாழ்வுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது.’’

6. நாரத புராணம்: ‘‘பக்தியுடன் மேற்கொள்ளப்படும் மஹாலய சிராத்தங்கள், இறந்த ஆத்மாக்களை மதிக்கின்றன மற்றும் முக்தியை நோக்கிய அவர்களின் நித்திய பயணத்தை உறுதிப்படுத்துகின்றன.’’

7. தர்ம சாஸ்திரம்: ‘‘மஹாளய பட்சத்தின்போது, ​​முன்னோர்களுக்கு பிரசாதம் வழங்குவது நன்றியுணர்வு, மரியாதை மற்றும் வாழ்க்கை வட்டத்தில் தொடர்ச்சியைக் குறிக்கிறது.’’

8. தைத்திரீய உபநிடதம்: தெய்வங்களுக்கும், முன்னோர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நீங்கள் புறக்கணிக்கக் கூடாது.

9.மார்கண்டேயர்: சூரியன் கன்யா ராசியில் நுழையும் போது 15 நாட்கள் சிராத்தம் செய்ய வேண்டும். இது உங்கள் கடமை.

10. கர்ணன் கதையும் மஹாளயமும்

மஹாளய பட்சம் குறித்து செவி வழிக் கதைகள் நிறைய உண்டு. அதன் தத்துவம், உணர்த்தும் செய்தியைக் கொண்டு கவனித்தால், முன்னோர்கள் வழிபாடும் அதனையொட்டி பிறருக்கு அன்னதானம் செய்வதன் முக்கியமும் சொல்லப்படுகிறது. மகாபாரதத்தில் கர்ணன் இறந்தபிறகு அவன் நேரடியாக நரகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். அவன் செய்த புண்ணிய பலன்களுக்காக அவனுக்கு சாப்பிடுவதற்கு தங்கம், நகைகள் போன்றவை உணவாக வழங்கப்பட்டது.

தங்கத்தை சாப்பிட முடியுமா? பசி அடங்குமா? கர்ணன் தனக்கு உணவு தரவில்லை என எம தர்மராஜாவிடம் சென்று கேட்டான். எமதர்மராஜா, ‘‘கர்ணா, நீ வாழும் காலத்தில் பெரிய கொடை வள்ளலாக, வாரி வழங்கியவனாக இருந்திருக்கலாம். ஆனால், கடைசிவரை உன்னுடைய முன்னோர்கள் யார் என்று தெரியாததால் நீ வாழ் நாளில் ஒருமுறை கூட உன்னுடைய முன்னோர்களுக்கு பிண்ட தர்ப்பணம் அளித்து, அவர்களை திருப்திபடுத்தவில்லை. அதனால் தான் நீ பெரும் புண்ணியம் செய்திருந்தாலும் உனக்கு சொர்க்கத்தில் இடம் அளிக்கப்படவில்லை என்றார்.

11. என்ன தர்மம் செய்தாலும் பிதுர் வழிபாடு முக்கியம்

கர்ணன் வருந்தினான். ‘‘இதற்கு என்ன பிராயச்சித்தம்?” என்று கேட்டான். அப்போது எமதர்மராஜன் சொன்னான். ‘‘கர்ணா, உனக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து, பூமிக்கு செல்ல அனுமதி வழங்குகிறேன். அங்கே உன் முன்னோர்களை கண்டறிந்து முறையான நீத்தார் கடன் செய்து விட்டு வா’’ என்று அனுப்பி வைத்தான். பூமிக்கு வந்த கர்ணன் தன்னுடைய முன்னோர்கள் யார் என்பதை அறிந்து கொண்டான். அவர்களுக்கு தர்ப்பணம் அளித்து, சிரார்த்த காரியங்களை நிறைவாக செய்தான்.

பிதுர் கடன் அடைபட்டதும் கர்ணனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்தது. கர்ணன் பூமியில் வந்து தங்கி இருந்து, முன்னோர் தர்ப்பணம் செய்த காலத்தையே மகாளயபட்சம் என்கிறோம். இதன் சாரமான செய்தி இதுதான். ஒருவன் வாழும் காலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து அவர்களை திருப்திப்படுத்தினால் மட்டுமே அவனுக்கு பித்ருலோகத்தில் சுகமான வாழ்க்கை கிடைக்கும்.

12. எப்போது தொடங்கி எப்போது நிறைவடையும்?

இந்த ஆண்டு மகாளயபட்சம் செப்டம்பர் 18ம் தேதி புதன்கிழமை துவங்குகிறது. அக்டோபர் 02ம் தேதி மகாளய அமாவாசை வருகிறது. செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 02 வரையிலான 15 நாட்களும் மகாளயபட்சம் காலமாக சொல்லப்படுகிறது. மகாளயபட்ச காலத்தில் காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு சென்றும், வீட்டிலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடலாம். சிலர் 15 நாட்களுமே தர்ப்பணம் கொடுப்பார்கள். அல்லது முக்கியமான நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்வார்கள். இதுவரை முன்னோர்களை வழிபட தவறியவர்கள், பித்ரு சாபம் மற்றும் தோஷத்தால் வாடுபவர்கள் மகாளயபட்ச காலத்தில் முன்னோர்களை மனதார வழிபட்டு, அவர்களின் ஆசியைப் பெறலாம்.

13. ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கும் பலன் – பகுதி 1

இந்தப் பதினைந்து நாட்களும் முன்னோர் வழிபாடே பிரதானம். எல்லா நாட்களும் முன்னோர்களை வழிபட்ட பிறகே வழக்கமான பூஜைகளைச் செய்ய வேண்டும். தர்ப்பணம் செய்பவர்கள், தினமும் தர்ப்பணம் செய்த பிறகே வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிப் பிற பணிகளைத் தொடங்க வேண்டும். இந்த ஆண்டு மகாளயபட்ச நாட்களில் முக்கிய திதிகள் எவை? செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவை என்னென்ன என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

மகாளயபட்சத்தின் முதல் நாளான பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும். இரண்டாம் நாளான துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் சிறப்பாக இருக்கும். மூன்றாம் நாளான திருதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். நான்காம் நாளான சதுர்த்தி திதியில் தர்ப் பணம் செய்வதால் எதிரிகளின் தொல்லை இல்லாமல் வாழலாம்.

14. ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கும் பலன் – பகுதி 2

ஐந்தாம் நாளான பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்வதால் செல்வம் சேரும், நியாயமான சொத்துக்கள் கிடைக்கும். மேலும் வீடு, நிலம் முதலான சொத்துக்களை வாங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம். ஆறாம் நாளான சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்வதால் பேரும், புகழும் கிடைக்கும். ஏழாம் நாளான சப்தமி திதியில் தர்ப்பணம் செய்வதால் உத்யோகத்தில் தலைமை பதவி கிடைக்கும், தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். எட்டாம் நாளான அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும். ஒன்பதாம் நாளான நவமி திதியில் தர்ப்பணம் செய்வதால் திருமணத்தடை நீங்கும். சிறந்த வாழ்க்கை துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அல்லது மருமகன் அமைந்து புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

15. ஒவ்வொரு நாள் வழிபாட்டிற்கும் பலன் – பகுதி 3

பத்தாம் நாளான தசமி திதியில் தர்ப்பணம் செய்வதால் நீண்ட நாட்களாக இருந்துவந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பதினொன்றாம் நாளான ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலைகளில் வளர்ச்சி அடைவார்கள். பன்னிரண்டாம் நாளான துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்க நகைகள் சேரும். விலை உயர்ந்த ஆடை சேர்க்கை உண்டாகும்.

பதிமூன்றாம் நாளான திரயோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும். பதினான்காம் நாளான சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மைகள் உண்டாகும். பதினைந்தாம் நாளானது மகாளய அமாவாசை. மகாளயபட்சத்தில் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

16. மகாபரணி, மத்யாஷ்டமி, துவாதசி

மகாபரணி (21.9.2024 – சனிக்கிழமை) மற்றும் மத்யாஷ்டமி (25.9.2024 – புதன்கிழமை) தினங்கள் மிகவும் முக்கியமானவை. இறந்த முன்னோர்கள் திதிகள் எதுவென்று அறியாதவர்கள் இந்த நாட்களில் பித்ரு காரியங்களைச் செய்யலாம். இதன் மூலம் உரிய ஆத்மாக்களுக்கு இதன் பலன் சென்றடையும். இந்த ஆண்டு மகாபரணி திதி 21.9.2024 அன்றும் மத்யாஷ்டமி 25.9.2024 அன்றும் வருகின்றன.

எனவே, இந்த நாட்களில் தவறாமல் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். குடும்பத்தில் யாரேனும் சந்நியாசம் பெற்று இறந்திருந்தால் அவர்களுக்குத் தர்ப்பணம் முதலிய கர்ம காரியங்களைச் செய்யும் நாள் துவாதசி திதி (29.9.2024-ஞாயிறு). இந்த நாளை “ஸன்யஸ்த்த மஹாளயம்” என்பார்கள். இன்று தர்ப்பணம் செய்யும் கர்த்தாவுக்குப் புண்ணியப் பலன்கள் கூடி சகல செல்வங்களும் சித்திக்கும்.

17. தானம் முக்கியம்

எந்த விரதமோ, பண்டிகையோ, வழிபாடோ, என எது செய்தாலும் அதன் நிறைவாக தானம் அளித்தல் முக்கியம். மாதம்தோறும் செய்யும் அமாவாசையிலும், ஏதாவது தானம் தந்தால் தான் சிராத்த தர்பணாதிகள் பூர்த்தியாகும். பூர்ண பலன் கிடைக்கும். அதற்குத்தான் இரண்டு மூன்று பேருக்காவது சாப்பாடு போட வேண்டும் என்றார்கள். அது அன்னதானம் அல்லவா! மஹாளயத்திலும் தானம் முக்கியம்.

மகாளய தானம் மகத்தான தானம்’ என்பார்கள். இந்நாளில் வஸ்திர தானம், அன்ன தானம், குடை, காலணி, போர்வை ஆகியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் நம் இல்லத்தில் இல்லாமை நீங்கி செல்வ வளம் சேரும். மேலும், கோதானம் செய்வது, பசுக்களுக்கு உணவு வழங்குவது ஆகியன அவசியம் செய்ய வேண்டும். நம் முன்னோர்கள் நாம் செய்யும் தானங்களைப் பார்த்து மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள்.

18. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள்

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளயபட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இதில் முக்கியம் மஹாளயம்.

19. பித்ரு பூஜையில் தூய்மை அவசியம்

மகாளயபட்சத்தில் வீடு தூய்மையாக இருக்க வேண்டும். அதைவிட மனத்தூய்மை முக்கியம் வீட்டில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகுவதை நம் வீட்டுக்கு விருந்தினராக வரக்கூடிய நம்முடைய குல முன்னோர்கள் விரும்புவார்கள். மஹாளய காலத்தில் தாம்பத்ய உறவு கொள்வது கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. வீட்டு வாசலை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும். இந்த நேரத்தில் கோலம் போடக் கூடாது. நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டோ, கருத்து வேறுபாடுகள் கொண்டோ, வேண்டா வெறுப்பாகவோ, செய்யக்கூடாது எந்த அளவு ஒற்றுமையோடு நாம் இருக்கிறோமோ, அந்த அளவு நமக்கு முன்னோர்களின் ஆசி தவறாது கிட்டும்.

20. மஹாளயத்தில் செய்யமுடியாவிட்டால் வேறு என்று செய்வது?

மஹாளயத்திலும் அமாவாசையிலும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நிற்கிறார்கள். தங்களுக்குத் தரப்படும் தர்ப்பணத்தை (எள் கலந்த தண்ணீரை) பெற்றுக் கொண்டு நல்லாசி வழங்குகிறார்கள். அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கான வழிபாடு இல்லை எனில் அவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். மஹாளய பட்சத்தில் ஒவ்வொரு நாளும் செய்யும் பித்ரு சிராத்தமானது, கயா சிராத்தத்திற்கு சமமான பலன் என்றும், மஹா பரணியை 5 மடங்கு பலன் அதிகமாகவும், வ்யதீபாதம் 10 பங்கு அதிக மாகவும் மத்யாஷ்டமி 20 மடங்கு அதிகமாகவும், த்வாதசி புண்ய காலத்தை 100 மடங்கு அதிகமாகவும் மஹாளய அமாவாசையை 1000 மடங்கு அதிகமாகவும் புண்ணியத்தை கொடுக்கக் கூடியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு காரணத்தினால், மஹாளயபட்சத்தில், மஹாளய சிராத்தம் செய்ய முடியாவிடில், பிறகு அடுத்த பஞ்சமிக்குள் செய்வதாய் இருந்தால், பிரதமை, சஷ்டி, ஏகாதசி, சதுர்த்தசி, வெள்ளிக்கிழமை கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

21. காருணீக பித்ருக்கள்

அமாவாசை தர்ப்பணத்தில் இல்லாத சிறப்பு மகாளய தர்ப்பணத்தில் உண்டு. “உபய வம்ச காருண்ய பித்ரூன் ஆவாஹயாமி” என்று சொல்லி, அதில் காருணிக பித்ருக்களுக்கும் தர்ப்பணம் செய்கிறோம். பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகை. அதாவது தந்தை வகையைச் சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம். தாயார் வகையைச் சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம்.

சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் முதலானோர் காருணீக பித்ருக்கள் எனப்படுவார்கள். பெரியப்பா, சித்தப்பா, அண்ணா, தம்பி, பிள்ளைகள், அப்பாவுடன் கூட பிறந்த தமக்கை, தங்கைகள், மாப்பிள்ளைகள், அக்கா, தங்கைகள், மனைவி, மாமனார், மருமகள், மைத்துனன், குரு, ஆச்சாரியன், காப்பாற்றிய யஜமானன், நண்பர்கள் கோத்திரம், பெயர் சொல்லி “வர்கத்துவயா வசிஷ்டான் ஸர்வான் காருண்ய பித்ரூன் ஸ்வதா நமஸ்- தர்பயாமி’’ என்ற மந்திரம் சொல்லி தர்பணம் செய்யலாம்.

22. சங்கல்பத்தில் காருணீக பித்ருக்கள் பெயர் – விபரம் – 1

1. மாற்றாந்தாய் – ஸபத்னீமாதரம்
2. பெரியப்பா – ஜ்யேஷ்டபித்ருவ்யம்
3. சித்தப்பா – கனிஷ்டபித்ருவ்யம்
4. சகோதரன் – ப்ராதரம்
5. மகன்கள் – புத்ரம்
6. அத்தை – பித்ருஷ்வஸாரம்
7. தாய்மாமன் – மாதுலம்
8. தாய்வழி – ஸஹோதரி மாத்ருஷ்வஸாரம்
9. வளர்ப்புத் தாய் – தாத்ரிம்
10. சகோதரி – பகினீம்
11. பெண் – துஹிதரம்
23. சங்கல்பத்தில் காருணீக
பித்ருக்கள் பெயர் விபரம்-2
12. மனைவி – பார்யாம்
13. மாமனார் – ச்வசுரம்
14. மாமியார் – ச்வச்ரூம்
15. சகோதரி புருஷன் – பாவுகம்
16. நாட்டுப்பெண் – ஸ்னுஷாம்
17. மச்சினன் – ஸ்யாலகம்
18. ஒன்று விட்ட சகோதரன் – பித்ருவ்யபுத்ரம்
19. மாப்பிள்ளை – ஜாமாதரம்
20. மருமான் – பாகினேயம்
21. குரு – குரூன்
22. ஆசார்யன் – ஆசார்யான்
23. தோழன் – ஸகீன்.
24. புரட்டாசியில் சனிக்கிழமை

இதுவரை முன்னோர்கள் பூஜையைக் குறித்து பல செய்திகளைத் தெரிந்து கொண்ட நாம், இனி இந்த மாதத்தின் சிறப்பான தெய்வ வழிபாடு குறித்தும் தெரிந்து கொள்வோம். புரட்டாசியில் மஹாளயபட்சம் போலவே சனிக்கிழமையும் முக்கியம். இந்த மாதத்தில் சனிக்கிழமைகளில் விளக்கேற்றி வைத்து பெருமாளுக்கு பூஜை செய்வது போன்றவைகளெல்லாம் வீட்டிலும் நடைபெறும். கோயில்களிலும் நடைபெறும்.

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகும். அதிலும், புரட்டாசி சனிக்கிழமை மிகவும் உகந்த நாளாகும். புரட்டாசி சனிக்கிழமையில்தான் சனி பகவான் அவதரித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த மாதத்தில் சனிக்கிழமை பெருமாளுக்கு விரதம் இருந்து மகாவிஷ்ணுவிடம் வேண்டினால், நாம் கேட்பது அனைத்தும் கிடைக்கும். சனிபகவானால் ஏற்படும் தோஷங்களும் விலகும்.

25. இந்த ஆண்டு புரட்டாசி தளிகை

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் பொதுவாக பெருமாள் பக்தர்கள், நெற்றியில் திருமண் சூர்ணம் அணிந்து, சர்க்கரைப் பொங்கல் மற்றும் பெருமாளுக்கு பிடித்தமான வடை, சுண்டல், புளியோதரை, தயிர்சாதம் பானகம் செய்து பெருமாளை வழிபடுவர். கையில் உண்டியல் ஏந்தி கோவிந்தா, கோபாலா, நாராயணா என்று பெருமாளின் நாமங்களை கோஷமிட்டபடி வீடு வீடாகச் சென்று பணம், அரிசி ஆகியவற்றைப் பெறுவதும் உண்டு. பின், பணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாகச் செலுத்துவார்கள்.

தானமாகப் பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து பிரசாதமாக வழங்குவார்கள். இந்த ஆண்டு புரட்டாசியில் நான்கு சனிக்கிழமை வருகிறது. முதல் சனிக்கிழமை புரட்டாசி 5 (21-9-2024) அன்றும், இரண்டாவது சனிக்கிழமை பூட்டாசி 12 (28-9-2024) அன்றும் வருகிறது. இரண்டும் மகாளயபட்சத்தில் வருகிறது. அடுத்து இரண்டாவது சனி ஏகாதசியில் வருகிறது. அந்த நாட்களில் தளிகை இட்டால் பிரசாதத்தை நம்மால் சாப்பிட முடியாது. அதனால், மூன்றாவது மற்றும் நான்காவது சனிக் கிழமைகளில் புரட்டாசி வழிபாடு செய்யலாம்.

26. எப்படி செய்வது?

சனிக்கிழமை அன்று அதிகாலை எழுந்து வீட்டை நன்கு தூய்மைப்படுத்தி மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். வாசலிலும் பூஜையறையிலும் வண்ணக் கோலங்கள் இடவேண்டும். வீட்டிலுள்ள பெருமாளின் படத்தை நன்கு சுத்தம் செய்து, மஞ்சள் குங்குமம் வைத்து, ஒரு மனைப் பலகையில் கோலம் போட்டு அதன் மீது வைக்க வேண்டும். குத்து விளக்கு ஏற்ற வேண்டும். துளசி, சம்பங்கி, சாமந்தி, தாமரை, முல்லை என மலர்களால் பெருமாளின் படத்தை அலங்கரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு குலதெய்வத்தை நினைத்து, பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.

27. புரட்டாசி மாவிளக்கு

பிறகு, பெருமாள் படத்திற்கு முன் மூன்று இலைகள் போட்டு ஐந்து வகை சாதத்தை நிவேதனமாகப் படைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் அல்லது நெல்லிக்காய் சாதம், தேய்காய் சாதம், தயிர் சாதம், வெங்காயம் சேர்க்காமல் மிளகு மட்டும் போட்டு செய்யும் உளுந்து வடை, (சிலர் நெய் வடை வைப்பார்கள்) சுண்டல், பானகம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். சிலர் இந்த சாதங்களைக் கொண்டு பெருமாளின் திருமுகத்தை வரைவார்கள். பெருமாளை குலதெய்வமாகக் கொண்டுள்ள சில குடும்பங்களில் புரட்டாசி மாதத்தில் வரும் ஒரு சனிக்கிழமையில் தளிகை போடுவது உண்டு.

அன்று மாவிளக்கு ஏற்றி வணங்குவதும் வழக்கம். இடித்த பச்சரிசி, அச்சு வெல்ல பாகு, ஏலக்காய் ஆகியவற்றை கலந்து, அந்த மாவை அகலாக வடித்து, அதில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றி பெருமாளை வழிபடுவார்கள். தீப, தூப ஆராதனை காட்டி கோவிந்தநாம கோஷம் போட்டு, உறவு நட்புகளை அழைத்து, குடும்பமாக பெருமாளை வணங்கி, பிறகு, தளிகையில் வைக்கப்பட்ட பிரசாதத்தை அனைவரும் அமர்ந்து சாப்பிடுவார்கள். அதுவரை எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள்.

28. புரட்டாசி திருமலை பிரமோற்சவம்

புரட்டாசியின் அடுத்த விசேஷம் நவராத்திரி. அது குறித்து அடுத்த இதழில் விரிவாகக் காண்போம். புரட்டாசியில் நம் நினைவுக்கு வரும் பிரசித்தி பெற்ற உற்சவம் திருப்பதி பிரமோற்சவம். திருமலையில் பொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறும். நான்காண்டுக்கு ஒருமுறை இரண்டு பிரமோற்சவம் நடைபெறும். திருமலையப்ப சுவாமியின் அவதார திருநட்சத்திரமான திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு இந்த உற்சவம் நடைபெறும். இதை திருமழிசை ஆழ்வார் “ஓணப் பெருவிழா” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாடியிருக்கிறார். இதை பின்வரும் பாசுரம் நமக்குத் தெரிவிக்கும்.

காணல் உறுகின்றேன் கல் அருவி முத்து உதிர
ஓண விழாவில் ஒலி அதிர பேணி
வரு வேங்கடவா என் உள்ளம் புகுந்தாய்
திருவேங்கடம் அதனைச் சென்று (நான்முகன் திருவந்தாதி)

29. இந்த ஆண்டு பிரம்மோற்சவம்

‘‘திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேரும், நம் விருப்பம் கூடும்’’ என்பதற்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் திருமலைக்கு வந்து, எம்பெருமானை சேவிக்கிறார்கள். அதுவும் பிரம்மோற்சவம் என்றால் சொல்ல வேண்டியதில்லை. அவ்வளவு கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் குறித்த பல்வேறு தகவல்களை வாசகர்களுக்காக கீழே அட்டவணையாகத் தருகிறோம். திருமலை திருப்பதி தேவஸ்தானம் வாரி பிரம்மோத்ஸவம் 4 அக்டோபர் 2024 (வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபர் 12, 2024 (சனிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

30. என்றைக்கு என்ன வாஹனம்?

3 அக்டோபர் 2024 – வியாழன்
இரவு: 7 மணி முதல் 8 மணி வரை – அங்குரார்ப்பணம்

4 அக்டோபர் 2024 – வெள்ளி – நாள் 1
பிற்பகல்: 3.30 மணி முதல் 5.30 மணி வரை – பங்காரு திருச்சி உற்சவம்
மாலை: சுமார் 6 மணி – த்வஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்)
இரவு: 9 மணி முதல் 11 மணி வரை – பெத்த சேஷ வாகனம்

5 அக்டோபர் 2024 – சனி – நாள் 2
காலை: 8 மணி முதல் 10 மணி வரை – சின்ன சேஷ வாகனம்
மதியம்: 1 மணி முதல் 3 மணி வரை – ஸ்னபன திருமஞ்சனம் (அதாவது, உற்சவருக்கு அபிஷேகம்)
இரவு: 7 மணி முதல் 9 மணி வரை – ஹம்ச வாகனம்

6 அக்டோபர் 2024 – ஞாயிறு – நாள் 3
காலை: 8 மணி முதல் 10 மணி வரை – சிம்ம வாகனம்
மதியம்: மதியம் 1 மணி முதல் 3 மணி வரை – ஸ்னபன திருமஞ்சனம் (அதாவது, உற்சவருக்கு அபிஷேகம்)
இரவு: 7 மணி முதல் 9 மணி வரை – முத்யால பல்லகி வாகனம் (முத்யாபு பாண்டிரி வாகனம்)

7 அக்டோபர் 2024 – திங்கள் – நாள் 4
காலை: 8 மணி முதல் 10 மணி வரை – கல்ப வ்ருக்ஷ வாகனம்
மாலை: 7 மணி முதல் 9 மணி வரை – சர்வ பூபால வாகனம்

8 அக்டோபர் 2024 – செவ்வாய் – நாள் 5
காலை: 8 மணி முதல் 10 மணி வரை – மோகினி அவதாரம்
இரவு: சுமார் 7 மணி முதல் 12 மணி வரை – கருட வாகனம்

9 அக்டோபர் 2024 – புதன் – நாள் 6
காலை: 8 மணி முதல் 10 மணி வரை – ஹனுமந்த வாகனம்
மாலை: 4 மணி முதல் 5 மணி வரை – ஸ்வர்ண ரதத்ஸவம் (தங்க ரதம்)
இரவு: 7 மணி முதல் 9 மணி வரை – கஜ வாகனம்

10 அக்டோபர் 2024 – வியாழன் – நாள் 7
காலை: 8 மணி முதல் 10 மணி வரை – சூர்ய பிரபா வாகனம்
இரவு: 7 மணி முதல் 9 மணி வரை – சந்திர பிரபா வாகனம்

11 அக்டோபர் 2024 – வெள்ளி – நாள்
8 காலை: சுமார் 6 மணி – ரதோத்ஸவம் (தேர், தேர் திருவிழா)
மாலை: 7 மணி முதல் 9 மணி வரை – அஸ்வ வாகனம்

12 அக்டோபர் 2024 – சனி – நாள் 9
அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை – பல்லகி உற்சவம் & திருச்சி உற்சவம்
காலை: 6 மணி முதல் 9 மணி வரை – ஸ்னபன திருமஞ்சனம், சக்ர ஸ்நானம்

மாலை: சுமார் 7 மணி – த்வஜாவரோஹணம் (பிரம்மோற்ஸவம் முடிந்தது)
புண்ணியம் தரும் புரட்டாசியில் முன்னோர் வழிபாடு முறையாக நடத்தி, சனிக் கிழமை தளிகை போட்டு, திருமலை பிரமோற்சவத்தில் கலந்து கொண்டு, பிதுரர்கள் ஆசியையும், பெருமாளின் ஆசியையும் பெறுவோம்.

எஸ். கோகுலாச்சாரி

Related posts

புண்ணியங்களை புரட்டித் தரும் புரட்டாசிப் படையல்

காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள்.!!

ஜோதிட ரகசியங்கள்