புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கான கட்டணமில்லா ஆன்மிக பயணம்: மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவ கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கை: 2024-25ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், “ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களுக்கும் இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சம் அரசு நிதியாக வழங்கப்படும்“ என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை நிறைவேற்றிடும் வகையில், சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் உள்ள முக்கிய வைணவ கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி (உணவு உள்பட) அழைத்துச் செல்லப்பட உள்ளனர். புரட்டாசி மாத வைணவ கோயில்களுக்கான ஆன்மிக பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது 21.9.2024, 28.9.2024, 5.10.2024, 12.10.2024 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன.

சென்னை மண்டலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், காஞ்சிபுரம் மண்டலத்தில் காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில், காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில், காஞ்சிபுரம் பாண்டவதூத பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், விழுப்புரம் மண்டலத்தில் விழுப்புரம் ஆஞ்சநேயர் சுவாமி கோயில், விழுப்புரம் வைகுண்ட பெருமாள் கோயில், கோலியனூர் வரதராஜ பெருமாள் கோயில், பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மண்டலங்களில் கும்பகோணம் சக்கரபாணி பெருமாள் கோயில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் கோயில், உப்பிலியப்பன் கோயில், வெங்கடாசலபதி கோயில், நாச்சியார்கோயில், ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், திருச்சேறை, சாரநாத பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், திருச்சி மண்டலத்தில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், உத்தமர் கோயில், புருஷோத்தம பெருமாள் கோயில், அன்பில் சுந்தராஜ பெருமாள் கோயில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், கோவிலடி அப்பகுடத்தான் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், மதுரை மண்டலத்தில் அழகர்கோயில், கள்ளழகர் கோயில், ஒத்தக்கடை யோக நரசிம்ம பெருமாள் கோயில், திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயில், மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டலங்களில் பெருங்குளம் மாயக்கூத்தர் கோயில், இரட்டை திருப்பதி அரவிந்தலோசனர் கோயில், கள்ளபிரான் தேவர்பிரான் கோயில், இரட்டை திருப்பதி கோயில், நத்தம் விஜயாசன பெருமாள் கோயில், திருப்புளியங்குடி காய்சினி வேய்ந்த பெருமாள்கோயில், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோயில், ஆழ்வார் திருநகரி ஆதிநாத ஆழ்வார் கோயில், திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில், கள்ளபிரான், வைகுண்ட பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளன.

ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்தகுடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை அறநிலையத்துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in < http://www.hrce.tn.gov.in >-லிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து 19.9.2024க்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இதுதொடர்பான விவரங்களுக்கு அறநிலையத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 1757, சென்னை மண்டலத்திற்கு 044-29520937, 9941720754, காஞ்சிபுரம் மண்டலத்திற்கு 044-29592380, விழுப்புரம் மண்டலத்திற்கு 04146-225262, மயிலாடுதுறை மண்டலத்திற்கு 04364-299258, 8807756474, தஞ்சாவூர் மண்டலத்திற்கு 04362-238114, திருச்சி மண்டலத்திற்கு 0431-2232334, மதுரை மண்டலத்திற்கு 0452-2346445, தூத்துக்குடி மண்டலத்திற்கு 0461-2341144, திருநெல்வேலி மண்டலத்திற்கு 0462-2572783 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களுக்கும் இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர்.

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!