Thursday, September 19, 2024
Home » புண்ணியங்களைப் புரட்டித் தரும் புரட்டாசிமாதம்

புண்ணியங்களைப் புரட்டித் தரும் புரட்டாசிமாதம்

by Nithya

ஒரு மனிதன் நன்றாக வாழவேண்டும் என்று சொன்னால், அவரிடத்தில் செல்வம் இருக்கவேண்டும். உலகியலில், ஒருவன் பணம் தேவை என்று சொல்லுகின்ற பொழுது, ஒரு வார்த்தையை சொல்லுவது வழக்கம்.

‘‘நாளைக்கு எனக்கு ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. என்னிடம் இல்லை. யாரிடமாவது கேட்டுப் புரட்டிக் கொள்ள வேண்டும்’’ என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.
இங்கே புரட்டி கொள்ளுதல் என்றால், உள்ளவர்களிடமும் கேட்டு சேகரித்துக் கொள்ளுதல் என்று அர்த்தம். ஆசிகளைப் புரட்டித் தரும் மாசம். எல்லாச் செல்வங்களும் வைத்திருப்பவன் இறைவன். அவன் திருவருள், “மங்கள ஆசி” களாகக் கிடைத்துவிட்டால், வாழ்வில் எல்லா வளங்களும் சேர்ந்துவிடும். துன்பங்கள் மாறி புதிய வாழ்க்கை பிறந்துவிடும். செல்வத்தை, தேவைக்குப் புரட்டுவது போல, இறைவனுடைய ஆசிகளை புரட்டுவதற்கு (சேகரிப்பதற்கு) என்றே ஒரு மாதத்தை நம்முடைய முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள்.

ஆசிகளைப் “புரட்டித் தரும் மாசம்” என்பதால் இந்த மாதத்திற்கு “புரட்டாசி” மாதம் என்று பெயர்.

புரட்டாசி சனிக்கிழமை படையல் ஏன்?

புரட்டாசி மாதம் என்று சொன்னாலே நமக்கு மூன்று விஷயங்கள் நினைவுக்கு வரும்.

1) புரட்டாசி சனிக் கிழமை. சனிக் கிழமையில் போடப்படும் படையல், (தளியல் அல்லது தளிகை)
2) மங்களகரமான மஞ்சள் ஆடைகளை அணிந்துகொண்டு திருப்பதியை நோக்கிச் செல்லுகின்ற யாத்திரை.
3) விண்ணை முட்டும் அளவுக்கு ஓங்கி ஒலிக்கின்ற “கோவிந்த” நாம கோஷம்.

இந்து சமயத்தை சேர்ந்த பலருக்கும் குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ, வரம் தரும் தெய்வமாக விளங்குகின்ற பெருமாள் திருப்பதிப் பெருமாள். திருப்பதிப் பெருமாளுக்கு என்றே ஒதுக்கப்பட்ட மாதம் புரட்டாசி மாதம். புரட்டாசி மாதத்தில், திருவோண நட்சத்திரம் தான் அவருடைய அவதார திருநட்சத்திரம், அதை ஒட்டித்தான் திருமலையில் பிரம்மோற்சவம் நடக்கும். உலகெங்கிலுமிருந்து திருப்பதிக்கு லட்சக்கணக்கான மக்கள் உற்சவம் காண கூடுவார்கள். இந்த புரட்டாசி மாதத்தை ‘‘விரத மாதம்” என்று சொல்லும் வழக்கம் உண்டு.

அசைவம் சாப்பிடுகிறவர்கள்கூட, பெரும்பாலும் இந்த புரட்டாசி மாதத்தை விலக்கி விடுவார்கள். பல குடும்பங்களில் புரட்டாசியில், ஒவ்வொரு சனிக் கிழமைகளிலும், காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, விரதமிருந்து, மதியம் தலைவாழை இலை போட்டு, சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், பாயசம், தளிகை (பெருமாள்) வடை, என்று அலங்காரமாக, பலவிதமான பிரசாதங்களைச் செய்து படைப்பார்கள். அன்றைய நாளில் பெரும்பாலும் “சித்ரான்னங்கள்” என்று சொல்லப்படும் புளியோதரை, எலுமிச்சம்பழ சாதம், எள் கலந்த சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் என்று பல வகை வகையான சாதங்களைப் படைத்து, தேங்காயை உடைத்து, மாவிளக்கு போட்டு, தூப தீபங்கள் காட்டி வழிபடுவார்கள். சாம்பிராணி புகையைப் போட்டு, மணி அடித்து, வீட்டில் உள்ள அவ்வளவு பேரும் ஏக கோஷமாக கோவிந்த கோஷத்தைப் போடுவார்கள்.

அன்றைக்கு யாரேனும் அதிதிகள் வந்தாலோ, விருந்தினர்கள் வந்தாலோ, அவர்களுக்கு விருந்து கொடுத்து ஆசிர்வாதம் பெறுவார்கள்.

திருப்பதி உண்டியல்

பல குடும்பங்களில், வருடத்திற்கு ஒரு முறையோ, மூன்று அல்லது ஐந்து வருடத்திற்கு ஒரு முறையோ, திருப்பதி யாத்திரை சென்று வருவதை வழக்கமாக வைத்துக்கொண்டு, அதற்கென்றே “திருப்பதி உண்டியல்” என்று தனி உண்டியலை வைத்து, அவ்வப்பொழுது அதில் காசு போடுவார்கள். இதை இரண்டு விதமாக செலவு செய்வார்கள்.

இந்த உண்டியல் பணத்திலிருந்து ஒரு வழிச் செலவாக திருப்பதி யாத்திரையை மேற்கொள்வார்கள். அல்லது திருப்பதி யாத்திரை மேற்கொண்டு, ஆனந்த நிலையத்தை வலம்வந்து, உண்டியலில் இந்த பணத்தை அவனுக்கு உண்டியலோடு காணிக்கையாகச் செலுத்திவிட்டு, புதிய உண்டியல் வாங்கிவந்து, மஞ்சள் துணி முடிந்து, சனிக்கிழமையில், மறுபடியும் தளிகை போட்டு, காணிக்கை சேர்க்க ஆரம்பிப்பார்கள். இன்றைக்கும் கிராமங்களில் பல குடும்பங்களில் இந்த திருப்பதி உண்டியல் வழக்கம் உண்டு.

“மன்னிப்பு கேட்டால் மன்னிப்பான்
மறைத்து விட்டால் தண்டிப்பான்’’

பெரும்பாலான மக்களுக்கு திருப்பதி ஏழுமலையானிடம் பயமும் பக்தியும் உண்டு. தவறு செய்துவிட்டால், கண்டிப்பாக தண்டிப்பான் என்கின்ற உணர்வு பெரும்பாலான மக்களுக்கு உண்டு. அதனால் மனரீதியாக தவறு செய்ய மாட்டார்கள். அப்படித் தவறு செய்துவிட்டால், அவனிடத்திலே சென்று, மன்னிப்பு கேட்டு நேர்த்திக்கடன் செய்து, உடனடியாக பிராயச்சித்தம் செய்து கொள்வார்கள். இதுவும் இன்றும் கிராமங்களில், குறிப்பாக தென்தமிழகத்தில் காணலாம். இதை கவியரசு கண்ணதாசன் அழகான பாடலில் சொல்லியிருப்பார்.

‘‘ஊருக்கு மறைக்கும் உண்மைகள்
எல்லாம் வேங்கடம் அறியுமடா!
நீ உண்மையைச் சொல்லி,
நன்மையைக் கேட்டால், உன் கடன் தீருமடா’’

கடன் என்றால் பாபங்கள் என்று அர்த்தம். கலிகாலத்தில் நம்முடைய கடன்களை, தீர்த்து வைப்பதையே தன் கடனாகக் (கடன் = கடமை) கொண்ட அவன் ஏழுமலையில் இருக்கிறான். உலகத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அவனை நம்புகின்றார்கள். நம்பி ‘‘கை’’ தொழுகின்றார்கள். அந்த நம்பி, (இறைவன்) நமக்கு ‘‘கை’’ தருகின்ற மாதம்தான் புரட்டாசி மாதம்.

புரட்டாசி யாசகம்

புரட்டாசி தளிகையில் எவ்வளவு கோடீஸ்வரனாக இருந்தாலும், தன் வீட்டு அரிசியை வைத்து, சனிக்கிழமை பிரசாதத்தைச் செய்யமாட்டார்கள். சனிக் கிழமை காலையில், ஒரு பாத்திரத்திற்கு திருநாமம் இட்டு, துளசி மாலை சாத்தி, பல வீடுகளில் ‘‘நாராயண கோவிந்த’’, என்ற கோவிந்த நாமத்தைச் சொல்லி, பிச்சை பெற்று, அதைக் கொண்டு பிரசாதம் படைப்பார்கள்.

புரட்டாசியில் இது மிகவும் முக்கியம்.

இதன் மூலமாக எந்தச் சூழலும் மனிதனுக்கு வரலாம். அச்சூழலை அவன் எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்கின்ற மனநிலை வளரும். கோடீஸ்வரனாக இருந்தாலும்கூட, அதுவும் அவன் இட்ட பிச்சைதான் என்று எண்ணுவதன் மூலம் அகங்காரம் ஒழியும். “அகங்காரத்தை நீக்கி கொள்வதற்கு ஒரு நாளாவது மற்றவர்களிடம் யாசித்து கேள். பக்தியோடு யாசித்து கேள்’’

இதன் மூலமாக இரண்டு நன்மைகள் ஏற்படும்.
1. அகங்காரம் குறையும்.
2. நம்மிடம் இருக்கக்கூடிய செல்வமெல்லாம் எந்த நேரத்திலும் மாறும் என்கின்ற உணர்வு பிறக்கும்.

நான், எனது என்கின்ற உணர்வுகள் தொலைந்துவிட்டால் இறைவனுடைய பேரருள் எளிதாக கிடைத்துவிடும். இதைத்தானே திருவள்ளுவரும்,

“யான்எனது என்னும்செருக்கு
அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்’’ என்றார்.

அந்த உயர்ந்த உலகம் என்பது திருமலை. அதனால்தான் அவன் இருக்கக்கூடிய திருமலையை “வைகுந்த வாசல்” என்று சொல்லுகின்றார்கள். அதை நோக்கித் தான் நம்மைப்போன்ற மனிதர்களும், வானில் உள்ள தேவர்களும், புரட்டாசி மாதத்தில் வந்து வழிபடுகின்றனர். புரட்டாசி மாதத்தில் கோவிந்த நாமம் சொல்லி, அடுத்த பதினோரு மாதங்களுக்குத் தேவையான நல்லாசிகளைப் புரட்டிக் கொள்வோம்.

You may also like

Leave a Comment

2 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi