புஞ்சைபுளியம்பட்டியில் பைக் திருட்டை காட்டி கொடுத்த கேமரா; வசமாக சிக்கிய வாலிபர்

சத்தியமங்கலம் : புஞ்சை புளியம்பட்டியில் பைக் திருடியபோது சிசிடிவி கேமரா காட்சியில் வசமாக சிக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் அதே பகுதியில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு பனியன் நிறுவனத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சத்தியமூர்த்திக்கு சொந்தமான பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கம்பெனி முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இருவரது உருவம் பதிவாகி இருந்தது. கொள்ளையர்கள் 2 பேர் பைக் திருடிச் செல்லும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவில் பனியன் நிறுவனம் முன்பாக நோட்டமிட்டுச் செல்லும் 2 பேர் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருடிச் செல்கின்றனர். இது குறித்து சத்தியமூர்த்தி அளித்த புகாரின்பேரில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு பைக்கை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவான உருவ ஒற்றுமையுடன் இருக்கும் நபர் புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ரோகித் (20) என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பனியன் நிறுவனத்தில் பைக் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ரோகித்தை கைது செய்த போலீசார் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பைக் திருடிய 20 வயதான ரோகித் மீது ஈரோடு, கோவை மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது