பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இமாலய இலக்கை அடித்து நொறுக்கியது சன்ரைசர்ஸ்

ஐதராபாத்: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இமாலய இலக்கை துரத்தி 8வது வெற்றியை வசப்படுத்தியது. ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அதர்வா டெய்டே, பிரப்சிம்ரன் சிங் இணைந்து பஞ்சாப் இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 9 ஓவரில் 97 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.

அதர்வா 46 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி நடராஜன் வேகத்தில் சன்விர் வசம் பிடிபட்டார். அடுத்து பிரப்சிம்ரன் – ரைலீ ரூஸோ ஜோடி 2வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தது. 34 பந்தில் அரை சதம் அடித்த பிரப்சிம்ரன் 71 ரன் (45 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி வியாஸ்காந்த் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கிளாஸன் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷஷாங்க் சிங் 2 ரன் எடுத்து ரன் அவுட்டாக, ரூஸோ 49 ரன் (24 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் வெளியேறினார். அசுதோஷ் 2 ரன் எடுத்து நடராஜன் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் ஜிதேஷ் ஷர்மா அதிரடியில் இறங்க, பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன் குவித்தது. ஜிதேஷ் 32 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் சிங் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் நடராஜன் 2, கம்மின்ஸ், வியாஸ்காந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா இணைந்து சன்ரைசர்ஸ் துரத்தலை தொடங்கினர். அர்ஷ்தீப் வீசிய முதல் பந்திலேயே ஹெட் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. எனினும், அபிஷேக் – ராகுல் திரிபாதி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 29 பந்தில் 72 ரன் விளாசி வெற்றி நம்பிக்கை அளித்தனர். திரிபாதி 33 ரன் (18 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வெளியேறினார். அபிஷேக் – நிதிஷ் குமார் இணைந்து அதிரடியாக 30 பந்தில் 57 ரன் சேர்த்தனர்.

அபிஷேக் 66 ரன் (28 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), நிதிஷ் குமார் 37 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஷாபாஸ் அகமது 3, கிளாஸன் 42 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். சன்ரைசர்ஸ் 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 215 ரன் எடுத்து அபாரமாக வென்றது. அப்துல் 11, சன்விர் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப், ஹர்ஷல் தலா 2, ஹர்பிரீத், ஷஷாங்க் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அபிஷேக் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை