பஞ்சாப் வழக்கை மேற்கோள் காட்டி வாதாட திட்டம் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு நல்ல பதில் வரும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். சென்னை,கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ‘‘நிறுவனங்களின் நாயகர்- கலைஞர்’’ என்ற தலைப்பில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார். கண்காட்சியில், கலைஞர் ஆட்சி பணிகளை விளக்கும் விதமாக 41 அரசு நிறுவனங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி குறித்த புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் ரகுபதி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன், நகராட்சித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், ஊராட்சி துறை இயக்குநர் பொன்னையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி: முதல்வர் தரப்பில் இருந்து 10 மசோதாக்கள் ஆளுநர் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த மசோதாக்கள் மீதான பதில்கள் இன்னும் வரவில்லை. நிச்சயமாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தின் அடிப்படையில், நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பினால், நாங்கள் மீண்டும் அவருக்கு அனுப்பும் போது அதற்கு அனுமதி தர வேண்டும் என குறிப்பிட்டு உள்ளோம். எனவே மசோதாக்களை 2வது முறை மறுப்பதற்கு வாய்ப்பு கிடையாது. மேலும் பஞ்சாப் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள கருத்தை மேற்கோள் காட்டி, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன் வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். மசோதாக்களை இரண்டாவது முறை மறுப்பதற்கு வாய்ப்பு கிடையாது.

Related posts

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை

இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு மெரினாவில் நாளை விமான சாகசம்: போக்குவரத்தில் மாற்றம்: 6500 போலீசார் பாதுகாப்பு

எங்களை என்றும் இளமையாக இயக்குவது திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு