புனே கார் விபத்தில் 2 ஐ.டி. ஊழியர்கள் பலியான விவகாரம்: சிறுவனுக்கு ஜாமின் வழங்கிய சிறார் நீதி வாரிய உறுப்பினர்களை விசாரிக்க குழு

புனே: மகாராஷ்டிராவில், குடிபோதையில் கார் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான சிறுவனுக்கு, 15 மணி நேரத்தில் ஜாமின் வழங்கிய சிறார் நீதி வாரிய உறுப்பினர்களின் செயல்பாடுகளை விசாரிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் புனேயில், கடந்த 19ம் தேதி அதிகாலை சொகுசு கார் மோதிய விபத்தில் 2 ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையில், காரை ஓட்டியது ரியல் எஸ்டேட் அதிபர் விஷால் அகர்வாலின், 17 வயது மகன் வேதாந்த் என்பதும், அவர் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதும் தெரிந்தது. அவருடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

அவர் மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அச்சிறுவனை சிறார் நீதி வாரியத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 300 வார்த்தைகளில் சாலை விபத்து தொடர்பான கட்டுரை எழுத வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் சிறுவனுக்கு ஜாமின் வழங்கினார். விபத்து நடந்து 15 மணி நேரத்தில் ஜாமின் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் போலீசார் மேல்முறையீடு செய்ததில், அச்சிறுவனை சிறார் சீர்திருத்த இல்லத்தில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சிறுவனின் தந்தை மற்றும் சிறுவர்களுக்கு மது வழங்கிய 2 மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள் உட்பட 5 பேரை போலீசார் கடந்த 21ம் தேதி கைது செய்தனர். மேலும் காரை ஓட்டியதாக போலீசாரிடம் ஒப்புக்கொள்ளும்படி, தங்கள் வீட்டு கார் டிரைவரை மிரட்டிய வழக்கில் அச்சிறுவனின் தாத்தாவையும் போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணையின் போது, விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியை குப்பை தொட்டியில் வீசி விட்டு, வேறு ஒருவரின் ரத்த மாதிரியை சோதனை செய்து அறிக்கையை மாற்றி, மோசடியில் ஈடுபட்ட 2 அரசு டாக்டர்களையும் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் அடங்கிய குழு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், சிறுவனுக்கு ஜாமின் வழங்கிய சிறார் நீதி வாரியத்தின் உறுப்பினர்களின் செயல்பாடுகள் தொடர்பாகவும், விசாரணை நடத்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் துணை கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி தலைமையிலான 5 பேர் குழுவை மாநில அரசு நியமித்துள்ளது. இந்த குழுவினர், வாரிய உறுப்பினர்களின் செயல்பாடுகள் பற்றி ஆராய்ந்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்