ஆர்பிஐ-யின் கட்டுப்பாட்டை கடந்தது சில்லறை பணவீக்கம் தக்காளியை தொடர்ந்து பருப்பு விலை மேலும் அதிகரிக்கும்: ஒன்றிய அரசின் நடவடிக்கை கைகொடுக்குமா?

புதுடெல்லி: ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டைக் கடந்து சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதால் தக்காளி, வெங்காயத்தை தொடர்ந்து பருப்பு விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த சில மாதங்களாக தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி விலை கடுமையாக உயர்ந்ததற்கு முக்கிய காரணம், சில்லறை பணவீக்கம் என்கின்றனர். நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறை பணவீக்கமானது, கடந்த ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமாக அதிகரித்தது. இதன்மூலம் சில்லறை பணவீக்கம் கடந்த 15 மாதங்களில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. கடந்த ஜூன் மாதம் பதிவான 4.87 சதவீதம் சில்லறை பணவீக்கத்தை ஒப்பிடுகையில் ஜூலை மாதத்தில் மிகமிக அதிகரித்துள்ளது. பணவீக்கமானது 2 முதல் 6 சதவீதம் வரை இருக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கட்டுப்பாட்டைக் கடந்து சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

காய்கறிகள் மட்டுமின்றி அரிசி, கோதுமை உள்ளிட்ட தானியங்களின் விலை ஏற்றமும், சில்லறைப் பணவீக்கம் உயர்வுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு காரணம் பருவம் தவறிய மழை, வறட்சி ஆகிய காரணங்களால் பயிர்கள் சேதமடைந்து விலைவாசி உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு சில நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த வகையில் நேபாளத்தில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ய உள்ளதாக அறிவித்தது. வெங்காயத்திற்கு 40% ஏற்றுமதி வரி விதித்தது. துவரம் பருப்பு இருப்பு மீதான வரம்புகள் விதிக்கப்பட்டன. இந்த ஆண்டு 12 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறக்குமதியை காட்டிலும் இது 35% அதிகமாகும்.

ஜூலை மாதத்தில் காய்கறி விலை 37% உயர்ந்த நிலையில், பருப்பு வகைகளின் விலை ஜூன் மாதத்தில் 10.6% ஆக இருந்த நிலையில், கடந்த ஜூலையில் 13.3% ஆக உயர்ந்துள்ளது. இம்மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் மற்ற பருப்பு வகைகளின் விலை முறையே 34.1%, 9.1% ஆக உயர்ந்தது. உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் குறைவான அளவே மழை பெய்தால் பயிர் சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது. நாடு முழுவதும் அணைகளின் நீர்த்தேக்க அளவுகள் கடந்த பருவத்தில் 76% ஆக இருந்த நிலையில், கடந்த 17ம் தேதி மொத்த கொள்ளளவில் 62% ஆக குறைந்துள்ளது. எனவே காய்கறிகளை தொடர்ந்து பருப்பு விலைகள் மேலும் உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்