பழவேற்காடு-காட்டுப்பள்ளி இடையே கடல் சீற்றத்தால் சாலை துண்டிப்பு : 40 கி.மீ. தூரம் சுற்றிச்செல்லும் அவலம்

பொன்னேரி: கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின் போது பழவேற்காடு, காட்டுப்பள்ளி இடையே கருங்காலி பகுதியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு சாலையில் கடல்நீர் பாய்ந்தது. இதன்காரணமாக சாலை முழுவதுமாக மணல் தூர்ந்து திட்டுகளாக மாறியதால் பழவேற்காட்டில் இருந்து எண்ணூர் காமராஜர் துறைமுகம், அதானி, எல் அண்ட் டி மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களுக்கு செல்லும் பணியாளர்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதன்பின்னர் பாதையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், தற்போது திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் அந்த சாலை மீது கடல் நீர்வெளியேறி வருவதால் சாலை முழுவதும் கடல் நீர் மற்றும் மணல் திட்டகளாக மாறியுள்ளது. இதனால் வாகனங்களை ஓட்டமுடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடல் கொந்தளிப்பு அதிகமாகும்போது சாலை முற்றிலுமாக துண்டிக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த சாலைக்கு குறுக்கே பாலம் கட்டவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இருப்பினும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். சாலை துண்டிக்கப்பட்டதால் வியாபாரம், வேலை மற்றும் பள்ளி, கல்லூரிக்கு செல்கின்றவர்கள் என பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மீஞ்சூர் வழியாக 40 கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையை உடனடியாக சீரமைத்து பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது