புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் பாலுடன் பிஸ்கட், பழம் மாலையில் சிறுதானிய சிற்றுண்டி: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு காலையில் பாலுடன் பிஸ்கட், பழம் மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா, கருவடிக்குப்பம் இசிஆர் சாலையில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் 21 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கினர்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், ‘பள்ளிகளில் மாணவர்களுக்கு முன்பு கொடுத்த மாதிரி பாலுடன் தினமும் வேறு, வேறுவிதமான பிஸ்கெட், பழம் கொடுங்கள். இதற்கு தேவையான நிதி கொடுக்கப்படும் என கூறியுள்ளேன். ஒன்றிய அரசு கூறியுள்ளபடி மாலை நேரத்தில் பிள்ளைகளுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும்’ என்றார்.

‘பாரதம்’ என அழைப்பது பெருமை கவர்னர், முதல்வர் வரவேற்பு
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ‘சனாதனம் என்றால் தர்மத்தின் படி வாழும், வாழ்வியல் முறை. ஜி20 அழைப்பிதழில் பாரதம் என அச்சடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிதான். பாரத தேசம் என தோள் தட்டுவோம் என பாரதியார் பாடினார். கேரளம் கேரளாவானது. பாம்பே மும்பை என்பதுபோல் இன்று பாரத தேசம் என்று சொன்னால், நமக்கு பெருமை சேர்க்கும். ஆங்கிலேயர்களின் சாயலை கொஞ்சம், கொஞ்சமா நீக்குவோம் என்று பிரதமர் சொன்னார். அதற்கு ஏற்ப பாரத தேசம் என அழைப்பது மகிழ்ச்சிதான்’ என்றார்.

முதல்வர் ரங்கசாமி, ‘பாரதம் குறித்து ஆளுநர் கூரிய கருத்தே சரியானது. பாரதம் என்பது பழமையான சொல். நாட்டில் ஏற்கனவே ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. எனவே ஒரே நாடு, ஒரே தேர்தலில் உடன்பாடு உண்டு, வரவேற்கத்தக்கது என்றார்.

மருத்துவ கல்வியில் 10% உள்ஒதுக்கீடு ஒன்றிய அரசு ஒப்புதல்
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதேபோல், புதுச்சேரியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10% உள்ஒதுக்கீடு வழங்க அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் வலியுறுத்தின. புதுச்சேரி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய அரசு இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த 10% இடஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு நனவாகும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதையடுத்து புதுவையில், மருத்துவ கலந்தாய்வு நடத்த மேலும் சில நாட்கள் ஆகும் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related posts

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு

சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து

நீட் தேர்வை எதிர்த்து திமுக இன்று ஆர்ப்பாட்டம்