புதுக்கோட்டை அருகே நூதன போட்டி ஒரு மணி நேரத்தில் 10 பீர் குடித்தால் ரூ.5,024 பரிசு: வாந்தி எடுத்தால் அவுட்

கறம்பக்குடி: புதுகை அருகே வரும் 17ம் தேதி நடைபெற இருக்கும் பீர் குடிக்கும் போட்டியில் ஒருவர் 10 பீரை ஒரு மணி நேரத்தில் குடித்தால் ரூ.5,024 ரொக்கப்பரிசு வழங்கப்படுவதாகவும், வாந்தி எடுத்தால் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு, வழுக்கு மரம் ஏறுதல், பானை உடைத்தல், சைக்கிள் ரேஸ், மிசிக்கல் சேர் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி துவங்கி தொடர்ந்து 4 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த வாணக்கன்காடு ஊராட்சி, வாண்டான்விடுதி வத்துராயர் சார்பில் மாபெரும் முதலாமாண்டு ‘பீர் குடிக்கும்’ போட்டி வரும் 17ம் தேதி பொது இடத்தில் நடத்த உள்ளதாக அறிவித்து முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், போட்டிக்கு நுழைவு கட்டணம் ரூ.1000 செலுத்த வேண்டும். 36 பேருக்கு மட்டுமே அனுமதி. ஒரு மணி நேரத்துக்குள் 10 பீர் குடிக்க வேண்டும். சைடிஷ் மீன் வருவல், 10 பீர் குடிப்பவருக்கு ரூ.5,024, ஒன்பதரை பீர் குடித்து 2வது இடம் பிடிப்பவருக்கு ரூ.4,024, 9 பீர் குடிப்பவருக்கு 3வது பரிசு ரூ.3,024, 8 பீர் குடிப்பவருக்கு 4வது பரிசு ரூ.2,024 வழங்கப்படும். குமட்டல், வாந்தி எடுத்தால், ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுவர். பாதியில் வெளியேறுபவர் குடித்த பீருக்கு பணம் செலுத்தி விட்டு செல்ல வேண்டும். கலந்துகொள்ளும் அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த விநோதமான போட்டியை வரவேற்றும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒருசிலர் போட்டியில் கலந்து கொள்வதாகவும் பதிவிட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்பத்தி வருகிறது.

Related posts

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது..!!

ரூ.822 கோடி குத்தகை பாக்கி; உதகை குதிரை பந்தய மைதானத்துக்கு சீல்: வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடி

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது