புதுக்கோட்டை அருகே மீண்டும் பரபரப்பு குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம் கலப்பு

*அதிகாரிகள் நேரில் விசாரணை

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை அருகே குடிநீர் தொட்டியில் மாட்டுசாணம் கலக்கப்பட்டதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவண்டான் தெருவில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது.

இது கடந்த 2013-2014ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தால் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் தெருவில் வசிக்கும் ரவிக்குமார் (37) என்பவருக்கு குடிநீர் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் அருகிலுள்ள திருவோணம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீரில் மாட்டு சாணம் கலந்து வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஆதிதிராவிடர் தெருவில் இருக்கும் இளைஞர்கள் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏறி பார்த்தனர். அப்போது குடிநீர் தொட்டிக்குள் மாட்டு சாணம் கிடந்துள்ளது. இதுதொடர்பாக கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் ஆணையர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், கல்லாக்கோட்டை வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, கிராம நிர்வாக அலுவலர் சுபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஆணையர், பொதுமக்களிடம் இது குறித்து முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் தொட்டியில் இருந்த மாட்டு சாணத்தை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி மாட்டு சாணம் தானா என கண்டறியப்படும்.

அது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து குடிநீர் விநியோகம் செய்ய ஆணையர் உத்தரவிட்டார். வருவாய் ஆய்வாளர் பிரியதர்ஷினி, இதுதொடர்பான அறிக்கையை தாசில்தார் விஜயலட்சுமிக்கு அனுப்பி வைத்தார்.

Related posts

சிலாவட்டம் ஊராட்சியில் புதிய குளம் வெட்டும் பணி மும்மரம்

மாணவன் மாயம்

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்