புதுக்கோட்டை புவனேஸ்வரி

பூர்வாசிரமத்தில் சதாசிவபிரம்மேந்திரர் எனும் நாமத்துடன் நீதிபதியாகப் பதவி வகித்தவர், சாட்சிகளின் வாதம் காரணமாக தன் மனநிலைக்கு மாறாக தீர்ப்பு கூற நேரிடுமோ என அஞ்சி பதவியைத் துறந்து,
அவதூதராக மாறி இத்தலத்தில் சித்தியடைந்தார்.

1921ம் வருடம் மதுரைக்கு அருகிலுள்ள சிற்றூரில் பிறந்த சுப்ரமண்யம் என்பவர் பின்னாளில் சாந்தானந்தர் எனும் தவயோகியாக மாறினார். அவரை ஜட்ஜ் சுவாமிகள், சுயம்பிரகாச சுவாமிகள் போன்ற குருவருளோடு, புவனேஸ்வரி தேவியின் திருவருளும் ஆட்கொண்டது.

இந்தக் கோயிலில் புவனேஸ்வரி தேவி பூரண மகாமேருவுடன் மூலக் கருவறையில் வீற்றிருந்து அருள்கிறாள். இத்தலம் நவசாலபுரி என்றும் போற்றப்படுகிறது.

ஹ்ரீம் பீஜத்தில் உறைபவள் இத்தேவி. ‘ஹ்ரீம் ஹ்ரீம்’ என்று யார் ஜபம் செய்கிறார்களோ அவர்களுக்கு மகாலட்சுமி மாலை போட்டு தன வரவைப் பொழிவாள் என புவனேஸ்வரி கல்பத்தில்
கூறப்பட்டுள்ளது.

சுயம்பிரகாச சுவாமிகள் எனும் சதாசிவ பிரம்மேந்திரரின் சீடர், புதுக்கோட்டையில் அவருக்கு அதிஷ்டானத்தை அமைத்தார். அதனால் இத்தலம் ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம் என்றும் அழைக்கப்படுகிறது.

சாந்தானந்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பூரண மகாமேருவும்
புவனேஸ்வரி தேவியும் இங்கே அருள்கிறார்கள்.

புவனேஸ்வரி பஞ்சரத்தினம் என்ற இந்தக் கோயில் தேவியின் துதியை பாராயணம் செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் இந்த புவனேஸ்வரியே பதினான்கு புவனங்களையும் காக்கிறாள் எனக்
கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானம், சேலம் ஸ்கந்தாஸ்ரமம், சென்னை தாம்பரம் ஸ்கந்தாஸ்ரமம் ஆகிய மூன்றும் சாந்தானந்த சுவாமிகளின் திருவருளால் நிர்மாணிக்கப்பட்டு, பூஜை முறைகளும் ஒரே மாதிரி நடைபெறுவதும் குறிப்பிடத் தக்கதே.

புவனேஸ்வரி தேவி தசமகாவித்யா வடிவங்களுள் ஒருவளாக போற்றப் படுபவள். வட இந்தியாவில் உள்ள காமாக்யாவில் இத்தேவி பிண்ட வடிவமாக அருள்கிறாள்.

இத்தலத்தில் ஆண்டிற்கு ஒருமுறை உலக நன்மைக்காக யாகம் நடைபெறுகிறது. அது முடிந்தவுடன் நிச்சயம் மழை பொழியும் அற்புதம் இன்றும் இத்தலத்தில் நிகழ்கிறது.

புவனேஸ்வரி தேவிக்கு நேர் எதிரே அஷ்டதசபுஜ மகாலட்சுமி அருள்கிறாள். இந்த
அன்னைக்கு மடிசார் புடவை அணிவித்திருப்பது விசேஷம்.

ஆலயத்தில் அர்ச்சனை எதுவும் கிடையாது. கற்பூர ஆரத்தி மட்டுமே. அதுவும் அதற்காகக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே செய்யப்படுகிறது.

புவனேஸ்வரி எனில் புவனங்கள் அனைத்திற்கும் ஈஸ்வரி என்று பொருள். எப்படி ஈசனுக்கு கைலாசமோ, திருமாலுக்கு வைகுண்டமோ அதே போல் புவனேஸ்வரி தேவி மணித்வீபம் எனும் அகில உலகங்களுக்கும் மேலான ஸ்தலத்தில் அமர்ந்து உலகை பரிபாலிக்கிறாள் என்பது ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தின் நம்பிக்கை.

இத்தலத்தில் கிடைக்கும் புவனேஸ்வரி தசாங்கமும் குங்குமமும் கோயில் நிர்வாகத்தினராலேயே தயாரிக்கப்படுவதால், சுத்தமானதாகக் கருதப்படுகிறது.

ஆலயத்தில் பன்னிரெண்டு அடி உயரத்திலும் பத்து திருக்கரங்களுடனும் பிரமாண்டமாகத் திகழும் ஹேரம்ப கணபதி வரப்ரசாதியாக அருள்கிறார்.

ஞானவடிவான சரஸ்வதியும் கிரியா வடிவான மகாலட்சுமியும் இச்சா வடிவான மகாகாளியும் இத்தலத்தில் ‘சாமுண்டீஸ்வரி புவனேஸ்வரி’யாக அருள்வதாக ஐதீகம்.

திருச்சி மாவட்டம் புதுக்கோட்டை நகரின் மையத்தில் உள்ளது இந்த அற்புதக் கோயில்.

நாகலட்சுமி

 

Related posts

ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை

ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?

கிறிஸ்தவம் காட்டும் பாதை