புதுச்சேரியில் சமரச பேச்சுவார்த்தை தோல்வி; பாஜ மேலிட பொறுப்பாளரை சந்திக்க மறுத்த ரங்கசாமி: தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கும் குழப்பம்

புதுச்சேரி: முதல்வருக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி வந்த பாஜ மேலிட பொறுப்பாளரை முதல்வர் ரங்கசாமி சந்திக்க மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் பாஜ- என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்தல் தோல்விக்கு முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடுகளே காரணம் என குற்றம்சாட்டி, கூட்டணியில் இருந்து வெளியேற பாஜ மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் 7 பேர் கல்யாணசுந்தரம் தலைமையில் டெல்லி சென்று தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து வலியுறுத்தினர்.

இந்நிலையில் புதுச்சேரியில் நிலவி வரும் அரசியல் குழப்பத்தை சரிசெய்ய பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நேற்று புதுச்சேரி வந்தார். அப்போது பாஜ தலைவர், அமைச்சர்கள், சபாநாயகர், முக்கிய நிர்வாகிகளிடம் தனித்தனியாக கருத்துகளை கேட்டறிந்தார். அதிருப்தி எம்எல்ஏக்களிடமும் தனியாக ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்கள் முதல்வர் ரங்கசாமி மீது குற்றம் சாட்டியதோடு, ஆட்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தனர். மேலும், ரங்கசாமியுடனான கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

அப்போது நிர்மல்குமார் சுரானா இவ்விவகாரம் குறித்து கட்சித் தலைமை சரியான நேரத்தில் முடிவு எடுக்கும். அதுவரை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் இதை ஏற்க மறுத்த பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதற்கிடையே நேற்று பிற்பகல் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா நேரம் கேட்டிருந்த நிலையில், அவரை சந்திக்க ரங்கசாமி மறுத்துவிட்டார். மேலும் உங்கள் (உள்கட்சி) பிரச்னைகளை முடித்துக் கொண்டு பிறகு சந்திக்கலாம் என கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் வேறுவழியின்றி நிர்மல் குமார் சுரானா பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே இவ்விவகாரத்தில் சமாதானம் ஆகாத அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக ஓரிரு தினங்களில் டெல்லி செல்ல உள்ளனர். இதே நிலை நீடித்தால் குறித்த நேரத்தில் இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்பதும் கேள்விக்குறியாகி உள்ளது. அதேவேளையில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகளும் இருப்பதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பேட்டி

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பொறியியல் பிரிவு காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அரசாணை வெளியீடு..!!