புதுச்சேரி பாஜ கூட்டணியில் உச்சகட்ட மோதல் டெல்லியில் பிரதமர் மோடி கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்தது ஏன்? பரபரப்பு தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ், பாஜ கூட்டணியில் உச்சகட்ட மோதலின் வெளிப்பாடாக டெல்லியில் நேற்று மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. இதில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கும் 8 மாநில முதல்வர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

அதேசமயம் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்குமாறு நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சி நடந்த ேபாதிலும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துவிட்டார். கடந்த காலங்களில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலத்தின் பிரதிநிதியாக அமைச்சர் லட்சுமி நாராயணன் பங்கேற்ற நிலையில் இம்முறை அவரையும் அனுப்பவில்லை.

முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்றதில் இருந்து 4வது முறையாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து உள்ளார். முதல்வர் ரங்கசாமி சமீபகாலமாகவே டெல்லி பயணத்தை முற்றிலும் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்திலும் முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை. இதற்கு பாஜ தலைமை மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியே காரணம் என கூறப்படுகிறது. முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றதில் இருந்தே பாஜவின் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முக்கிய இலாகாக்கள் வேண்டும் என்று கெடுபிடி கொடுத்தனர்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஏற்கவில்லை. ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் கூட்டத்தை நடத்தவும் இழுபறி நிலையில்தான் ஒன்றிய பாஜ அரசு ஒப்புதல் வழங்கி வந்தது. ஆளுநராக தமிழிசை இருந்த போது அவர் மூலம் பல்வேறு பிரச்னைகள் கொடுப்பதாகவும், முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும், முதல்வராக இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் ரங்கசாமி கண்ணீர் வடித்தார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜவுக்கு தான் சீட்டு வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி அமைச்சர் நமச்சிவாயத்தை வேட்பாளராக நிறுத்தினர்.

இதனால்தான் மாநில ஆட்சியை தன் வசம் வைத்திருந்தும் தேஜ கூட்டணி படுதோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழகம், புதுவையில் 40க்கு 40 என இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது என்று என்ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி கருதினார். இதைத்தொடர்ந்து என்ஆர் காங்கிரஸ், பாஜ இடையே புகைச்சல் அதிகரித்தது. அதோடு அமைச்சர்களை மாற்ற வேண்டும், வாரிய தலைவர்கள் பதவி வேண்டுமென அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜவில் தனி கோஷ்டியாக செயல்பட தொடங்கினர். மேலும் சுயேச்சை எம்எல்ஏக்கள் மட்டுமின்றி பாஜ எம்எல்ஏக்களும் போர்க்கொடி தூக்கியதால் முதல்வர் ரங்கசாமி கடும் அதிருப்தி அடைந்தார்.

இந்த நிலையில் புதுச்சேரி பட்ஜெட் கூட்டம் வரும் 31ம் தேதி துவங்க உள்ளது. அதற்கு முன்பாக பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் 5 பேர் டெல்லியில் 3 தினங்கள் முகாமிட்டு முதல்வர் ரங்கசாமியை மாற்ற வேண்டும், அமைச்சர்களை மாற்ற வேண்டும், ஊழல், முறைகேடுகள் அதிகரித்துவிட்டது என்றெல்லாம் குற்றம் சாட்டினர். ஆனால், மேலிடம் அவர்களை சமாதானம் செய்து, பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி திருப்பி அனுப்பியது. இதை தொடர்ந்து ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எதிர்க்கட்சி மாநிலங்களை புறக்கணித்தது போலவே கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு அரசு எதிர்பார்த்த நிதியையும் அளிக்கவில்லை.

மேலும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்த நியமன எம்எல்ஏக்கள் மீதும் பாஜ மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலை நீடித்தால் 2026ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் என்ஆர். காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறுவது சந்தேகம், அதனால் இப்போதே பாஜ கூட்டணியில் இருந்து விலகி நிற்பதுதான் எதிர்காலத்திற்கு நல்லது என்ற முடிவுக்கு முதல்வர் ரங்கசாமி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் டெல்லி நிதி ஆயோக் கூட்டத்தை ரங்கசாமி கடைசி நேரத்தில் தடாலடியாக புறக்கணித்துள்ளார். அவரது இந்த முடிவு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* பாஜ அழைப்பு?
பிரதமரின் கூட்டத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புறக்கணித்தது பாஜ தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொள்ளலாம், டெல்லிக்கு வாருங்கள் என்று ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தபிறகு முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், அப்போது பிரதமரையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து கூட்டணியில் தனக்கு ஏற்பட்டுள்ள நெருடல்களை தெரிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

* அரசுக்கு எதிராக குரல் கொடுத்த நியமன எம்எல்ஏக்கள் மீதும் பாஜ மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலை நீடித்தால் 2026ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் என்ஆர். காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறுவது சந்தேகம், அதனால் இப்போதே பாஜ கூட்டணியில் இருந்து விலகி நிற்பதுதான் எதிர்காலத்திற்கு நல்லது என்ற முடிவுக்கு முதல்வர் ரங்கசாமி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

* முதல்வர் ரங்கசாமி பொறுப்பேற்றதில் இருந்து 4வது முறையாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து உள்ளார். முதல்வர் ரங்கசாமி சமீபகாலமாகவே டெல்லி பயணத்தை முற்றிலும் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

* கூட்டணியில் அதிருப்தி காரணமாக சமீபத்தில் டெல்லியில் மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தையும் முதல்வர் ரங்கசாமி புறக்கணித்து உள்ளார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை