புதுச்சேரியில் கூட்டணிக்குள் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது முதல்வர்-பாஜ எம்எல்ஏக்கள் மோதல் உண்மைதான்: மேலிட பொறுப்பாளர் ஒப்புதல்

புதுச்சேரி: ‘கூட்டணிக்குள் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. முதல்வர்-பாஜ எம்எல்ஏக்கள் மோதல் உண்மைதான். முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விரைவில் சரி செய்யப்படும்’ என்று புதுச்சேரி பாஜ மேலிட பொறுப்பாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு எதிராகவும், பாஜ அமைச்சர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் பாஜ எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது போன்ற பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி தனியார் மண்டபத்தில் பாஜ மாநில சிறப்பு செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.

புதுச்சேரி மாநில பாஜ தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான செல்வகணபதி தலைமை தாங்கினார். பாஜ மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ெஜ. சரவணன்குமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார், சிவசங்கர், வெங்கடேசன், அசோக்பாபு, வி.பி.ராமலிங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட
னர். சிறப்பு விருந்தினராக ஒன்றிய சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டி கலந்து கொண்டு பேசுகையில், ‘புதுச்சேரியில் உள்ள பாஜ நிர்வாகிகள் 2026ம் ஆண்டு தேர்தலுக்கான பணிகளை இப்போதிருந்து தொடங்க வேண்டும்.

புதுச்சேரியில் கட்சிக்குள் சிறுசிறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது என்பது தலைமைக்கு தெரியும். தேசிய தலைவர் நட்டா, பிரதமர் மோடி ஆகியோர் வழிகாட்டுதலில் இப்பிரச்னைகள் களையப்படும். ஒன்றிய அரசு புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். பிரதமர் மோடி புதுச்சேரி மீது தனிக்கவனமும், அக்கறையும் கொண்டுள்ளார்’ என்றார்.

மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசுகையில், ‘ஒன்றிய, மாநில அரசின் திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்ட பயன்களை பிரசாரமாக கொண்டு சேர்ப்பதில் பின் தங்கியுள்ளோம். எனவே நாம் தீவிரமாக செயல்பட்டு நம்மை தக்க வைத்து கொள்ள வேண்டும்.  கூட்டணிக்குள் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய எதிர்பார்ப்புகளை கூட்டணி கட்சி தலைவர் ரங்கசாமியிடம் பேசி சரி செய்வோம், முதல்வருடன், கட்சி தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அமர்ந்து பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண்பார்கள்’ என்றார்.

Related posts

வாட்ஸ்அப் வழியாக களமிறங்கிய மோசடிக்கும்பல் ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்த ‘ஆப்’களை பதிவிறக்கம் செய்யவேண்டாம்: மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை

எஸ்எஸ்எல்வி- டி3 ராக்கெட் வெற்றி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

ஓசி பஸ்சில் சென்னை தப்பி வந்தவர் ரூ.525 கோடி சுருட்டல் மன்னன் தேவநாதன் யார்? பின்னணி தகவல்கள் வெளியாகி பரபரப்பு