புதுச்சேரியில் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தால் நேரு வீதியில் கடைகள் அடைப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் நகரப் பகுதியில் உள்ள பெரிய மார்க்கெட்டை இடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதால் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியின் முக்கிய பகுதியான நேரு வீதியில் பெரிய மார்க்கெட் என்ற பகுதியில் குபேர் அங்காடி உள்ளது. இங்கு 1400க்கு மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. மல்லிகை பொருட்கள், காய்கறி வகைகள், பழ வகைகள், மீன், கறி, பூக்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு 4000க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசு திடீரென்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மார்க்கெட்டை முழுமையாக இடித்துவிட்டு புதிய மார்க்கெட் கட்டுவதற்கு ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 8 மாதத்தில் கட்டுமான பணியை முடித்து வியாபாரிகளிடம் கடைகளை ஒப்படைத்து விடுவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வியாபாரிகள் அனைவரும் மார்க்கெட்டை காலி செய்து கொண்டு அரசு சொல்லும் இடத்தில் தற்காலிக கடை அமைத்து கொள்ளும்படி அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் வியாபாரிகள் இந்த முடிவை ஏற்காமல், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் கடைகளை ஒட்டுமொத்தமாக காலி செய்யவேண்டாம் என்றும் ஒவ்வொரு பகுதியாக சீரமைத்து கடைகளை கட்டிக்கொடுக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசாங்கம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் வியாபாரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . இந்நிலையில் நேற்று அனைத்து கடைகளையும் வியாபாரிகள் மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.

மேலும், இரவு மாநகராட்சி சார்பில் அனைத்து கடைகளிலும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கடைகள் இடிக்கப்படுவதாக ஒவ்வொரு கடை வாசலிலும் நோட்டீசை ஒட்டி சென்றுள்ளனர். இன்று காலை கடையை திறக்க வந்த வியாபாரிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வியாபாரிகள் ஒன்றுகூடி நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடைகளை அனைத்தையும் மூடிவிட்டு திடீரென்று நேரு வீதி, காந்தி வீதி பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு அங்கிருந்து புதுச்சேரியின் முக்கிய சாலையான காமராஜர் சாலை, அண்ணாசாலை பகுதிகளில் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மறியலில் 500கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டதால் புதுச்சேரி நகரப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து முன்னிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 100கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பின்பு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை மறியலை கைவிடமாட்டோம் என்று தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசார் வலுக்கட்டாயமாக வியாபாரிகளை அப்புறப்படுத்த முயன்றனர். இரு தரப்புக்கு தள்ளுமுள்ளு, வாக்குவாதம் முற்றியது. மார்க்கெட் நிர்வாகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதை அடுத்து போலீசாருக்கும், மீனவ பெண் வியாபாரிகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தைக்கு முதலமைச்சரிடம் அழைத்து செல்கிறோம் என்று கூறி அவர்களை சட்டப்பேரவைக்கு போலீசார் அழைத்து செல்லவுள்ளனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நேரு வீதியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பரபரப்பாக உள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு