புதுச்சேரியில் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமிக்கு அதிமுக செயலாளர் அன்பழகன் கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டே ஆட்சியை பிடிக்க பாஜக முயல்வதால் முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என அம்மாநில அதிமுக வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள நிலையில் சமீபகாலமாக முதலமைச்சர் ரங்கசாமிக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சுயேட்சைகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் முதலமைச்சர் ரங்கசாமிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்; ஒவ்வொரு முறை சட்டமன்றம் கூடும் போதும் சுயேட்சை மற்றும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாக கூறினார். சுழற்சி முறையில் அமைச்சரவையை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர்கள் மனுவும் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரை முழுமையாக நடத்த முடியுமா என்ற சந்தேகம் மக்கள் இடையே எழுந்துள்ளதாக அன்பழகன் தெரிவித்துள்ளார். அதிகாரிகள், துணைநிலை ஆளுநர் மற்றும் மத்தியில் ஆளும் பாஜக என அனைவரும் சேர்ந்து புதுச்சேரி அரசுக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், இதனால் ரங்கசாமி நிம்மதியற்ற முதலமைச்சராக இருப்பதாகவும் அவர் கூறினார். ரங்கசாமி அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களை கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

 

Related posts

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வரவேண்டிய 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பு

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு