புதுச்சேரியில் ட்ரீம்ஸ்-2024 திட்டம் துவக்கம் 1000 ஆசிரியர்களுக்கு டெங்கு தடுப்பு சிறப்பு பயிற்சிகள்

*முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி : புதுச்சேரியில் 1000 ஆசிரியர்களுக்கு டெங்கு தடுப்பு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகாரமளிக்கும் ட்ரீம்ஸ்- 24 திட்டத்தினை முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் துவக்கி வைத்தார். டெங்கு பயிற்சி வழிகாட்டியையும், அதற்கென வடிவமைக்கப்பட்ட டெங்கு இணைப்பு செயலியையும் (DENGUE CONNECT APP) அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் முதல்வர் பேசியதாவது: புதுச்சேரியில் பரவி வரும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி நலவழித்துறை, புதுச்சேரி நோயீனி கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம்(விசிஆர்சி), புதுச்சேரி பள்ளி கல்வி இயக்ககம்- மாநில பயிற்சி மையத்துடன் இணைந்து ட்ரீம்ஸ்- 24 திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் தலா இரண்டு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தம் 1000 ஆசிரியர்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சியை விசிஆர்சி வல்லுநர்கள் வழங்க உள்ளனர்.

இதில் சிறப்பாக பணியாற்றும் மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்படும். டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதை ஊக்குவிக்க இது உதவும். டெங்கு தடுப்பு குறித்த புரிதலை ஆசிரியர்களுக்கு வழங்குவதோடு, கொசு உற்பத்தியைத் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கவும் உதவும். டெங்கு குறித்த விழிப்புணர்வு மற்றும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதிலும், புதுச்சேரியின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் அடுத்த தலைமுறையினரையும் தயார்படுத்துகிறோம். இதனால் மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்பு கணிசமாகக் குறையும். கொசு உற்பத்தி இடங்களை அழிப்பதற்கும் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கும் சமூகம் சார்ந்த இந்த திட்டம் ஊக்குவிக்கிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம், எம்எல்ஏக்கள் கேஎஸ்பி ரமேஷ், ராமலிங்கம், சுகாதாரத்துறை செயலர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், சுகாதாரத்துறை பொறுப்பு இயக்குநர் செவ்வேள், விசிஆர்சி இயக்குநர் மஞ்சு ரஹி, கல்வித்துறை சிறப்புப் பணி அலுவலர் சுகுணா சுகிதாபாய், மலேரியா உதவி இயக்குநர் வசந்தகுமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு