பொது நூலகத்துறையில் நூல் கொள்முதல் செய்ய இணைய தளம் தொடக்கம்

சென்னை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பொது நூலக இயக்ககம் சார்பில் வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் செய்வதற்கான இணைய தளத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: பொது நூலகத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களுக்கும் தேவையான நூல்களை கொள்முதல் செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை என்பதற்காக நூல் கொள்முதல் கொள்கை உருவாக்கப்பட்டு அதன் பேரில் நூல் கொள்முதல் இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் மூலம் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் நூல் கொள்முதல் செய்வதற்கு தங்களை பதிவு செய்துகொண்டு நூல்களை பதிவுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். நூல் தேர்வுக் குழுவில், துறைசார் வல்லுநர்கள், நூலகர்கள் மற்றும் வாசகர் வட்ட உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

ஒவ்வொரு நூலகமும் ஒவ்வொரு ஆண்டில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மதிப்பிலான நூல்களை இணைய தளம் வழி தேர்வு செய்து பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் http:// bookprocurement.tamilnadupubliclibraries.org/என்ற இணைய தளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் தலைவர் மனுஷ்யபுத்திரன், இணை இயக்குநர் இளங்கோவன் சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல் இரவல் வழங்கும் சேவையையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சிறுவர் நூல்களும், தமிழ் நூல்களும் வாசகர்களுக்கு வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி யாக தேர்வான 2 மாவட்ட நூலக அலுவலருக்கு பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.

 

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை