மேலக்கோட்டையூர் காவலர் பொதுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்


திருப்ேபாரூர்: மேலக்கோட்டையூர் காவலர் உண்டு உறைவிட பொதுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நேற்று முதல் தொடங்கியது. மேலக்கோட்டையூரில் காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் ₹51 கோடி செலவில் அமைக்கப்பட்ட ‘காவலர் உண்டு உறைவிட பொதுப்பள்ளி’ செயல்பட்டு வருகிறது. இந்த, பள்ளியை கடந்த மே மாதம் 30ம்தேதி உள்துறை செயலாளர் அமுதா, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், வடக்கு மண்டல ஐஜி மகேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வினை தொடர்ந்து காவலர் பொதுப்பள்ளியை அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன், தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன், பள்ளி கல்வி இயக்குநர் அறிவொளி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, மாணவர்களின் சேர்க்கை எவ்வாறு அதிகப்படுத்துவது, பள்ளியில் என்ன வசதிகள் உள்ளது, பள்ளிக்கு தேவையான வசதிகள் என்னென்ன என்பது குறித்து கேட்டறிந்தனர். இதனையடுத்து, பள்ளியை இந்த கல்வியாண்டே தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை நேற்று முதல் தொடங்கியது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேற்று ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்க்க படிவங்களை பெற்று சென்றனர். மேலும், பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 8 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 52 மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். பள்ளி தொடங்கி நடைபெற்று வந்தாலும், வரும் ஜூலை மாதம் 1ம்தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறு, குறு நடுத்தர மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்த போலீஸ் பொதுப்பள்ளியை முறைப்படி தொடங்கி வைக்கின்றனர்.

Related posts

திருவான்மியூர் பாம்பன் சாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

மக்களவை தேர்தலில் வென்றவர்கள் 50.58% வாக்குகள் பெற்றுள்ளனர்: 2019 தேர்தலை விட 2% குறைவு, ஏடிஆர், தேர்தல் கண்காணிப்பகம் அறிக்கை

வங்கி ஆவணங்களை வழங்கக் கோரிய செந்தில் பாலாஜி வழக்கு 8ம் தேதிக்கு தள்ளிவைப்பு