மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: மக்கள் நலப்பணியாளர்கள் பணித்திட்டம் தொடர்ந்து நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வராக கலைஞர் பதவி வகித்தபோது, வேலையில்லாமல் இருக்கின்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 13,500 ஆயிரம் பேர் மக்கள் நலப் பணியாளர்களாக 2.7.1990 அன்று நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 2011ம் ஆண்டில் 13,500 மக்கள் நலப்பணியாளர்களையும் பணியிலிருந்து நீக்கி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக மக்கள் நலப்பணியாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பணிநீக்கம் செய்யப்பட்ட 13500 மக்கள் நலப்பணியாளர்களையும் மீண்டும் பணியமர்த்த உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மக்கள் நலப்பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தவுடன் மக்கள் நல பணியாளர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.7500 ஊதியம் வரும் வகையில் வேலை உறுதித் திட்டப் பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் புதிய முடிவுக்கு எந்த தடையும் இல்லை என கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி உத்தரவிட்டது. இருப்பினும் மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரத்தில் அவர்களை நிரந்தரமாக பணி அமர்த்துவது குறித்த வழக்கின் தீர்ப்பை மட்டும் ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில்,‘‘தமிழ்நாட்டில் மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் தொடர்ந்து நீடிக்கும். அதாவது மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் இருக்கும் வரையில் அதுவும் இருக்கும். இதில் அரசியல் தலையீடு கூடாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் நலப்பணியாளர்கள் பணி தொடர்ந்து நீடிக்கும். இதில் குறிப்பாக இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தபோது, 6 மாத ஊதியத்தை ஒப்படைத்த மக்கள் பணியாளர்களின் சம்பளத்தை மீண்டும் அரசு அவர்களிடம் திருப்பித் தர வேண்டும்.மேலும் ஊதியம் வழங்கும் விவகாரத்தை பொறுத்தமட்டில் மாநில அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள் என தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது