பொது இடத்தில் குப்பை வீசுவோர் குறித்து தகவல் கொடுத்தால் ₹2500 பரிசு: கேரள அரசு அதிரடி

திருவனந்தபுரம்: கேரளாவில் பொது இடங்கள், நீர்நிலைகள், தனியாருக்கு சொந்தமான இடங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் குப்பைகளை வீசுவது அதிகரித்து வருகிறது. கொச்சி, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பொது இடங்களில் குப்பைகளை வீசுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் தான் பெரும்பாலும் குப்பைகளை வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அதிகாரிகளால் அவர்களை பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில் கேமரா வைக்கப்பட்டுள்ள போதிலும் எந்த பலனும் ஏற்படவில்லை.

ஆகவே இது போன்ற நபர்களை பிடிப்பதற்காக கேரள அரசு புதிய திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. அதன்படி குப்பை வீசுபவர்கள் குறித்த விவரங்களை போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன் அளிப்பவர்களுக்கு ₹2500 அல்லது குப்பைகள் வீசுபவர்களிடருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகையில் 25 சதவீதம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்பின் செயலாளர்களுக்கு வாட்ஸ் ஆப் அல்லது இமெயில் மூலம் அனுப்பி வைக்கலாம். ஆதாரங்களை அளிப்பவர்களின் பெயர், விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும், இவர்களுக்கான பரிசுத்தொகை 30 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது.

Related posts

மதுரை ஏர்போர்ட் இன்றுமுதல் 24 மணி நேரமும் செயல்படும்: விமான நிலைய இயக்குநர் தகவல்

ஏகனாபுரம் கிராமத்தில் 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கணவனை சம்மட்டியால் தாக்கிய மனைவி