கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை ₹94.49 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகையாக ₹94.49 கோடி வழிவகை கடன் அனுமதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வேளாண்மை – உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டு அரவை பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் 2023-24 அரவை பருவத்தில் 15.06.2024 வரை 30.82 லட்சம் மெட்ரிக் டன் கரும்பை அரவை செய்து, 8.92 சதவிகித சர்க்கரை கட்டுமானத்தில் 2.75 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையை விற்பனை செய்து கரும்பு பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சர்க்கரை விற்பனை மூலம் கரும்பு பணம் முழுமையாக வழங்க இயலாத சூழ்நிலையில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் வழிவகை கடன் அனுமதிக்கப்பட்டு கரும்பு பணம் நிலுவையின்றி வழங்கி முடிக்கப்படுகிறது.

கடந்த 2020-21 அரவை பருவம் முதல் 2022-23 அரவை பருவம் வரை கரும்பு நிலுவை தொகை வழங்கவும், ஆலைகளின் நடைமுறை மூலதனத்திற்காகவும் தமிழ்நாடு அரசு ₹600.37 கோடி வழிவகை கடனாக அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு கரும்பு பணம் நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 2020-21 தமிழ்நாடு அரசு ₹191.85யும், 2021-22ம் ஆண்டு ₹252.91 கோடியும், 2022-23ம் ஆண்டு ₹155.61 என மொத்தம் ₹600.37 வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளால் நடப்பு 2023-24 அரவை பருவத்திற்கு வழங்க வேண்டிய ₹920.99 கோடியில் 15.06.2024 வரை ₹835.73 கோடி வழங்கப்பட்டு நிலுவையாக ₹85.26 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது. கரும்பு விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் கரும்பு பணம் விவசாயிகளுக்கு நிலுவையின்றி வழங்கிடவும் ஆலைகளின் நடைமுறை மூலதன செலவிற்காவும் ₹94.49 கோடி வழிவகை கடன் அனுமதித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு