ஊராட்சி செயலர்களை மாற்ற பிடிஓக்களுக்கு அதிகாரமில்லை: மாறுதல் உத்தரவுகள் ரத்து ஐகோர்ட் கிளை அதிரடி

 

மதுரை: ஊராட்சி செயலர்களை இடமாறுதல் செய்ய பிடிஓக்களுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மாறுதல் உத்தரவுகளை ரத்து செய்தது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் சிலர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஊராட்சி செயலர்கள் ஊராட்சித் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். எழுத்தர்கள் இடமாறுதல் உள்ளிட்டவைக்கு ஊராட்சித் தலைவர்களிடம் அனுமதி பெற வேண்டும் என ஊராட்சி சட்டம் கூறுகிறது. ஆனால், எழுத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கி கடந்த 9.7.2013ல் உத்தரவிடப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு தற்போதும் அமலில் உள்ளது.

தடை உத்தரவு விலக்கப்படாத நிலையில், ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்து காளையார்கோவில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த ஆக.31ல் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார் பிறப்பித்த உத்தரவில், ஊராட்சி செயலர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உள்ளதா? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான ஒரு வழக்கில் தடை உத்தரவும் உள்ளது. ஊராட்சி செயலர்களை இடமாறுதல் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இல்லாவிட்டாலும், இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால், இடமாறுதல் உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என கூறியுள்ளார்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்