2 வாரமாக நடந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: சமவேலைக்கு சமஊதியம் கேட்டு சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தமிழ்நாட்டில் உள்ள தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில் 2009 ஜூன் 1ம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய முரண்பாடுகள் இருந்து வருகிறது.

இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை இடைநிலை ஆசிரியர்கள் முன்வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் ஊதிய பிரச்னை சரி செய்யப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததன் பேரில் இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து, கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் சென்னை கல்லூரிச் சாலையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில், காலவரையற்ற போராட்டத்தை ஆசிரியர்கள் தொடங்கினர். இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர். ஆனால் அந்த ஆசிரியர்கள் சென்னையில் தங்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்த அவர்களின் போராட்டத்தை அடுத்து, பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடப்பதால், மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று இயக்குநர்கள் கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.

Related posts

ஊதிய உயர்வு கோரி சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.