மாநில உரிமைகளை காப்பதுதான் இந்தியாவை காப்பது இந்தியா கூட்டணி ஆட்சியின் தொடக்க மாநாடாக சேலம் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: மாநில உரிமைகளைக் காப்பது தான் இந்தியாவைக் காப்பது. இந்தியா கூட்டணி ஆட்சியின் தொடக்க மாநாடாக சேலம் மாநாடு அமையப் போகிறது. சேலத்தில் சந்திப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இளைஞரணி மாநாட்டுக்கு வருக வருக. நெருப்பின் பொறிகளே, நீங்கள் தான் தேவை என்று சொன்னார் கலைஞர். அத்தகைய கனல் தெறிக்கும் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே, இளைஞரணியின் எழுச்சிமிகு இரண்டாவது மாநாடு சேலத்தில் 21ம் நாள் நடைபெற இருக்கிறது.

சேலத்துக்கு வர நான் தயாராகிவிட்டேன். நீங்கள் தயாராகிவிட்டீர்களா? என்னைப் பார்க்கும்போது உங்களுக்குள் எப்படி ஒரு உற்சாகமும் புத்தெழுச்சியும் பிறக்கிறதோ, அதேபோன்று உங்களைப் பார்க்கும் போது எனக்குள்ளும் உற்சாகமும், புத்தெழுச்சியும் பிறக்கிறது. திமுக உடன்பிறப்புகளான உங்களின் முகங்களைப் பார்ப்பதும், நீங்கள் எழுப்பும் கொள்கை முழக்கங்களைக் கேட்பதும் தான், எனக்கு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும் விஷயங்கள். இன்று நேற்று அல்ல. 1980ல் இருந்தே இது எனக்கு பழக்கமாகிவிட்டது.

எப்போது கலைஞரும், இனமானப் பேராசிரியரும் இளைஞரணியை உருவாக்கி, என்னிடம் ஒப்படைத்தார்களோ, அன்றில் இருந்து, தொண்டனுக்கு தொண்டனாக, உடன்பிறப்புகளுக்கு உடன்பிறப்பாகத் தான் செயல்பட்டு வருகிறேன். இன்றைக்குக் கூட, திமுக தலைவராக அல்ல, தலைமைத் தொண்டனாகத் தான் செயல்படுகிறேன். கொள்கை உறவு உடன்பிறப்புகளின் மாநாடு தான் சேலம் மாநாடு. 2007ம் ஆண்டு திக்கெட்டும் புகழும் திருநெல்வேலிச் சீமையில் இளைஞரணியின் முதல் மாநாட்டை நான் தலைமை வகித்து நடத்திக் காட்டினேன்.

இப்போது 2024ம் ஆண்டு சீர்மிகு சேலத்தில் இளைஞரணியின் இரண்டாவது மாநாட்டை இளைஞரணிச் செயலாளர் உதயநிதி சிறப்போடு ஏற்பாடு செய்து நம்மை எல்லாம் அழைத்திருக்கிறார். மாநாட்டின் நோக்கம் மாநில உரிமைகளை வென்றெடுப்பது என்று இளைஞரணிச் செயலாளர் உதயநிதி திட்டமிட்டிருக்கிறார். மாநில உரிமைகளைக் காப்பதுதான் இந்தியாவைக் காப்பது. அந்த வகையில் இளைஞரணி மாநாடு, இந்தியாவின் மாநாடு என்று சொல்லத்தக்க வகையில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.

இந்தியா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அமைய இருக்கும், இந்தியா கூட்டணியின் ஆட்சி, மாநில உரிமைகளை மதிக்கிற ஆட்சியாக அமைய வேண்டும், அமையும். இதற்கெல்லாம் தொடக்க மாநாடாகச் சேலம் மாநாடு அமையப் போகிறது. எனது உடன்பிறப்புகளே, திமுக உடன்பிறப்புகளே, கலைஞரின் உடன்பிறப்புகளே, சேலம் செல்ல நான் தயாராகிவிட்டேன். நீங்களும் தயாராகிவிட்டீர்களா? சேலத்தில் எனது கண்கள், உங்களது முகங்களைத் தான் தேடும். சேலத்தில் சந்திப்போம்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவருக்கு அரிவாள் வெட்டு

கட்டுமான தொழில் கடுமையாக பாதிப்பு; ஆந்திராவில் இருந்து மணல் எடுத்து வர அனுமதி: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கடிதம்

உமா குமரன் வெற்றி பெற்றதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து