வளமான வாழ்வருளும் வைகுந்தநாதர்

தென்னிந்தியாவின் சிறந்த நகரங்களில் ஒன்றாக, நகரங்களில் சிறந்ததாக, சங்க காலத்தில் `நகரேஷூ காஞ்சி’ என்று குறிப்பிடப்பட்ட காஞ்சி மாநகரில் உள்ள எல்லா ஆலயங்களுமே அற்புதமான அமைப்பும் சிற்ப வேலைப்பாடுகளும் கட்டுமானத்தின் உச்சமாகவும் திகழ்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த காஞ்சிபுரத்தில் உள்ள மங்களாசாசனம் பெற்ற 14 வைணவ திவ்ய தேசங்களில் கோயில்களில் ஒன்று `ஸ்ரீவைகுந்தநாதப் பெருமாள்’ ஆலயம்.

கோயிலைப் பற்றிக் குறிப்பிடும் பல்லவர் காலக் கல்வெட்டுச் சாசனங்கள், பரமேஸ்வர விண்ணகரம் என்றும், பரமேஸ்வர விஷ்ணுகிரஹம் என்றும் இந்தக் கோயில் குறித்து தெரிவிக்கின்றன. வைணவக் கோயில் ஒன்றுக்கு பரமேஸ்வரன் என சிவநாமம் அமைந்திருப்பது வியப்பைத் தருவதாக உள்ளது. இந்தக் கோயிலை எடுப்பித்தது, பல்லவமல்லன் எனும் இரண்டாம் நந்திவர்ம பல்லவ மன்னன். இவனைப் பற்றி வைகுந்தநாதர் ஆலயத்தில் உள்ள கல்வெட்டு, பல்லவ மன்னனான பரமேஸ்வரன் என்று குறிப்பிட்டு, அவனுடைய இயற்பெயர் பரமேஸ்வரன் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

இந்த மன்னன் கி.பி. 730-ல் துவங்கி 795 வரை சுமார் 65 வருட காலம் ஆட்சி செய்திருக்கிறான். அந்த காலத்தில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வார், இந்தக் கோயிலைப் பற்றிப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். அதில், பல்லவன் மல்லையர் கோன் பணிந்த பரமேச்வர விண்ணகரம் அதுவே என்று நந்திவர்மனின் புகழையும் குறிப்பிட்டுச் சொல்கிறார். அழகிய திருச்சுற்று, அதன் உட்புறம் சுவருடன் இணைந்த திருச்சுற்று மாளிகை எனும் மண்டபம். இந்த மண்டபத்தின் நான்கு பத்திகளையும் சிம்மங்களுடன் உள்ள தூண்கள் தாங்கி நிற்கிறது. ஒவ்வொரு சிம்மமும் உயிர்ப்புடன் நிற்பதான பிரமிப்பைத் தருகின்றன.

மண்டப உட்புறச் சுவரில், இரண்டு அடுக்குகளாகத் தொடர் சிற்பக் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு காட்சிக்குக் கீழேயும் பல்லவ கிரந்த எழுத்தில், அந்தக் காட்சிக்கு உரிய விவரங்கள் குறிப்புகளாக, கல்வெட்டு களாக பொறிக்கப்பட்டுள்ளன. திருச்சுற்றுக்கு நடுவே பிரதான ஆலயமான பரமேஸ்வர விண்ணகரம் எனப் போற்றப்படும் வைகுந்தநாதப் பெருமாள் கோயில், கம்பீரமாகக் காட்சி தருகிறது. கருவறைக்கு மேலே ஒன்றன் மேல் ஒன்றாக, மூன்று தளங்களில் மூன்று மூலஸ்தானங்கள் உள்ளன.

கீழ்த்தளத்தில், ஸ்ரீவைகுந்தநாதர் மேற்கு நோக்கிய படி காட்சி தருகிறார். அதையடுத்து, மேலே அமர்ந்த கோலத்திலும் அடுத்து கிடந்த கோலத்திலும் காட்சி தருகிறார். கருவறையின் புறச்சுவர் முழுவதும் திருமாலின் பல்வேறு திருக்கோலங்கள், காட்சிகளாக, புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. பல்லவர், சோழர் அல்லது பாண்டியர் படைத்த எந்த வைணவ ஆலயத்திலும் இந்த அளவுக்குப் பேரழகு கொண்ட, பிரமிக்கத்தக்க சிற்பக் காட்சிகளைத் தரிசிப்பது அரிது. ஸ்ரீவிமானத்து மூன்று திசைகளிலும் உள்ளே சிறிய வாயில்கள் உள்ளன. இவை, கருவறையைச் சுற்றியுள்ள சாந்தாரம் எனும் சுற்று அறைக்குக் காற்றும் வெளிச்சமும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.

கருடாழ்வார் தோளில் திருமால் அமர்ந்திருக்க, அருகே ஸ்ரீதேவி நிற்பது, சங்கு- சக்கரம் ஏந்திய திருமால் அமர்ந்திருக்க, அடியார்களும் தெய்வங்களும் தொழுது நிற்பது, ஐந்து தலை நாகரின் கீழ் பரமபத நாதன் அமர்ந்திருக்க, திருமகள் வணங்கிப் போற்றுவது, தாமரை மலர் மீது மாலவன் நிற்க, இருபுறமும் சூரிய- சந்திரர் கையுயர்த்தி போற்றவும், கீழே முனிவர்கள் நால்வர் அமர்ந்திருப்பது, விஷ்வக் சேனனுக்கு திருமால் மாலை சூட்டுவது, இரணியனை மடியில் கிடத்தி, உடல் பிளக்கும் நரசிங்கர் வடிவம் என கருவறையின் புறச்சுவர் முழுவதும் அழகு வாய்ந்த சிற்பக் காட்சிகள் உள்ளன.

மாமல்லபுரத்தைப் போன்று கவினுறு சிற்பங்கள் இக்கோயிலின் உட்புறச் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. பல்லவ மன்னர்களின் குடவரைக் கோயில் அமைப்பின்படி இத்தலத்தின் கருவறையும் அதைச் சுற்றியுள்ள பிரகாரம் மற்றும் தூண்கள் யாவும் ஒரே பாறையில் குடையப்பட்டதாகும். பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மன் தனது அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவல்களிலும், தான் போர் மேற் செல்வதற்கும், இப்பெருமாளையே வழிபட்டு வெற்றிமேல் வெற்றி கண்டான். இவன் பாண்டியனை வென்றதை திருமங்கையாழ்வார் தனது பாடலில்.

‘‘தேர்மன்னு தென்னவனை முனையில் செறுவில்
திறல் வாட்டிய திண் சிலையோன்
பார் மன்னு பல்லவர் கோன் பணிந்துவரும் – பரமேச்சுர விண்ணக ரமதுவே

என்று குறிப்பிடுகிறார்.

திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களில் பாடல் பெற்றுள்ளது. பிள்ளைப் பெருமாளையங்கார், மணவாள மாமுனி, ராமானுஜர் ஆகியோரும் இத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர். பரமேஸ்வரவர்மனின் பிறப்பைச் சித்தரிக்கும் சிற்பங்கள், அவனுக்கு இறைவன் நீதிகளைப் போதித்த நிலையிலான சிற்பங்கள் போன்றன இத்தலத்தின் உட்பிரகாரத்தில் வெகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் மேல் மாடியில் இரணியனை வதம் செய்யும் நரசிம்மன், நரகாசுரனை வதம் செய்யும் கிருஷ்ணன், வாலியை வதம் செய்யும் ராமவதாரம் போன்ற காட்சிகள் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள மூலவர் சந்நதிக்கும், முன் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் (இடைகழியில்) சுரங்கப் பாதை இருப்பதை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தோண்டிக்காண முனைந்த போது, இவ்வூர் பொதுமக்களும், இப்பெருமான் மீது பேரன்பு கொண்ட இஸ்லாமிய பக்தர் அலி முகம்மதுகான் என்பவரும், இச்சுரங்கத்திற்கு கோயிலிலிருந்து செல்லக்கூடிய வழியினை மூடி அதன்மேல் படிக்கட்டுக்கள் அமைத்து மூலவர் சந்நதிக்கு நடந்து செல்லக் கூடிய பாதையாக மாற்றிவிட்டனர். இவ்வாறு மூடப்பட்டு கல்பாலம் இடப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.

இங்கிருந்து மாமல்லைக்கும், கைலாச நாதரின் கோயிலுக்கும் பரமேஸ்வரவர்மனின் அரண்மனைக்கும் சுரங்கப்பாதை இருந்ததாக நம்பிக்கை. கிருஷ்ண தேவராயர் இத்தலத்திற்கு ஆற்றிய பெருந்தொண்டின் நினைவாக இங்கு அவருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்ய இரண்டு (ராஜ தர்பார்கள்) நடன சாலைகள் இருந்தன. அவைகள் இன்று சாதாரண மண்டபங்களாக விளங்குகின்றன.

மேலும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கும் வைகுண்ட நாதனாக விளங்குகிறார். ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட பெருமாள் பக்தர்கள் சுகவாழ்வுக்காக சொர்க்க வாசலை திறந்து வா.. வா.. வா.. என்று அழைக்கும் அழகோ அழகு தான்… பக்தர்களை அரவணைக்கும் சிறப்போ சிறப்பு தான்…

படங்கள்: எம்.பாஸ்கரன்

தொகுப்பு: கே.சுதாகேசவன்

Related posts

சிலர் வீடுகளில் ஸ்டிக்கர் கோலம் ஒட்டி இருப்பது சரிதானா?

துலாம் ராசி குழந்தை

ஜாதகத்தில் விவாகரத்தை கண்டுபிடிக்க முடியுமா?