சொத்து தகராறில் பெண்ணை படுகொலை செய்த தாய், மகன் உள்பட மூவருக்கு ஆயுள் சிறை

*தென்காசி கோர்ட் தீர்ப்பு

தென்காசி : வீட்டை எழுதிக் கொடுக்க மறுத்த சகோதரியை படுகொலை செய்த அக்காள், அக்காளின் மகன், மகள் ஆகிய மூவருக்கு ஆயுள் சிறை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.தென்காசி மாவட்டம், வீராணம் ராஜா தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் பேச்சியம்மாள். இவருக்கும், இவரது உடன் பிறந்த அக்காளான வீராணம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவரும் பிச்சையாவின் மனைவியான கருத்தாத்தாள் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. பேச்சியம்மாளின் வீட்டை கருத்தாத்தாள் தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு கேட்டதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் பேச்சியம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது மகன் கருப்பசாமி என்பவர் பணி நிமித்தம் வெளியூர் சென்றார்.

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு ஆக. 24ம் தேதியன்று கருத்தாத்தாள் அவரது கணவர் பிச்சையா, இவர்களது மகன் துரைமுத்து, மகள் மாரி என்ற மாரியம்மாள் ஆகிய 4 பேரும் பேச்சியம்மாளின் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த பேச்சியம்மாளை சிகிச்சைக்கு எனக்கூறி தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்ற இவர்கள் 4 பேரும் வீட்டை எழுதித்தருமாறு மீண்டும் கட்டாயப்படுத்தினர். அப்போது இதை பேச்சியம்மாள் ஏற்க மறுத்தபோது அவருக்கு பேய் பிடித்துள்ளதாகக் கூறி கட்டையால் தாக்கியதோடு நெற்றியில் சூடம் ஏற்றி தீக்காயம் ஏற்படுத்தினர்.

மறுநாள் வெளியூரில் இருந்து வந்த மகன் கருப்பசாமி நடந்த சம்பவங்களை கேள்விப்பட்டு பேச்சியம்மாளை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். மேலும் இதுகுறித்து வீராணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே ஆண்டு செப். 13ம் தேதி பேச்சியம்மாள் இறந்து விட்டார். இதையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்ட இவ்வழக்கு மீதான விசாரணை தென்காசி கூடுதல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, குற்றம் சாட்டப்பட்ட 4 பேரில் பிச்சையா இறந்து விட்ட நிலையில் கருத்தாத்தாள் (65), துரைமுத்து (40), மாரி என்ற மாரியம்மாள் (35 ) ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு சார்பில் கூடுதல் மாவட்ட அரசு குற்றத்துறை வழக்கறிஞர் வேல்சாமி ஆஜராகி வாதாடினார்.

Related posts

நோய் கொடுமையால் மூதாட்டி தற்கொலை; அதிர்ச்சியில் மகனும் தூக்கிட்டு சாவு : பூட்டிய வீட்டுக்குள் சைக்கோ போல் திதி கொடுத்த கொடூரம்

2 பேருக்கு வெட்டு இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள் உள்பட 7 பேர் இட மாற்றம்

மதுரை ஆதீனத்திற்கு எதிராக நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி