காவிரி விவகாரத்தில் இன்று கர்நாடகா முழு அடைப்பு பெங்களூருவில் 144 தடை உத்தரவு: விமானம், ரயிலை மறிக்க கன்னட அமைப்பு திட்டம்

பெங்களூரு: தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு நடத்தப்படுகிறது. மாநிலத்தின் தென்மாவட்டங்களில் முழு அடைப்பிற்கு முழு ஆதரவு கிடைத்திருப்பதால் தென்மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. விமானம், ரயிலை மறிக்க கன்னட அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு காவிரி நீர் திறந்துவிடுவதை கண்டித்து மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டுவரும் நிலையில், கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் இந்த முழு அடைப்பிற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. பெங்களூரு டவுன் ஹாலிலிருந்து சுதந்திர பூங்கா வரை மாபெரும் கண்டன ஊர்வலம் நடத்தப்படுகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், டோல் கேட், ரயில் மற்றும் விமான சேவைகளை நிறுத்தவும் முயற்சிக்கப்படும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்குள் வரும் ரயில்களை மறித்து போராட்டம் செய்யப்படும். தமிழ்நாட்டிலிருந்து பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் மற்ற பகுதிகளுக்கு இடையேயான பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசு பேருந்துகள் இயங்கும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் போராட்டக்காரர்கள் பேருந்து இயக்கத்தை தடுப்பார்கள் என்பதால் மாநிலத்திற்குள்ளான சாலை போக்குவரத்தும் பாதிக்கப்படும்.

பெங்களூரு, மைசூரு, மண்டியா, குடகு, சிக்கபள்ளாபூர், ஷிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், துமகூரு, ராம்நகர், சாம்ராஜ்நகர், தாவணகெரே, சித்ரதுர்கா ஆகிய தென்மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் முழு ஆதரவு தெரிவித்திருப்பதால் மாநிலத்தின் தென்மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். நேற்று மாலையிலிருந்தே போராட்டத்தை முன்னெடுக்கும் கன்னட அமைப்புகளின் முக்கியமான தலைவர்களும் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். மாநில அரசு நேற்றிரவு முதலே பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவை ஆகிய சேவைகள் வழக்கம்போல இருக்கும். அரசு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் பெங்களூரு மாநகரில் பிஎம்டிசி பேருந்துகள் இயங்கும். அரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும் என்று தெரிகிறது.

Related posts

விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு