தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனங்களின் சான்றிதழ் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு செல்லாது என்ற அரசாணைக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், வழக்கமான பள்ளி வகுப்புகளுக்கு செல்ல இயலாது என்ற காரணத்தால், மத்திய அரசு, தேசிய திறந்தநிலைப் பள்ளியை அமைத்தது. இந்தப் பள்ளியில் படித்து பெறும் சான்றிதழ்கள் தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புக்கோ அல்லது பதவி உயர்வுக்கோ செல்லாது என்று அறிவித்து தமிழக அரசு கடந்த 2023 டிசம்பர் 21ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து தேசிய திறந்தநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் திருவள்ளூரைச் சேர்ந்த விஷ்ணு, சந்தோஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தேசிய திறந்தநிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வி படிப்பதற்கு அனுமதிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க தடை விதிப்பது சட்டவிரோதமானது.

தேசிய திறந்தநிலைப் பள்ளியின் கல்வித்தரம், மாநில பாடத்திட்டத்தை விட குறைந்தது அல்ல. சிபிஎஸ்இ நடத்தும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு இணையானது. தமிழக அரசின் இந்த அரசாணை பொது வேலைவாய்ப்பில் பங்கேற்பதை தடுக்கும் வகையில் உள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதுபோல தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

 

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு