தடை விலகியது

தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை, தமிழ்நாட்டை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது என தமிழ்நாடு தரப்பில் இருந்து குரல்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து மனு வழங்கினார். அப்போதும், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக இடம்பெற்றிருந்தது. ஓங்கி ஒலித்த தமிழ் மக்களின் குரல், பிரதமரின் செவிகளில் விழுந்து, அது தற்போது நிறைவேறியும் உள்ளது. ஆம்…சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்காக நிதி ஒதுக்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை பெருநகர மக்கள்தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் பெரிதாக இருந்து வருகிறது. இந்த பிரச்னைக்கு சின்ன ஆசுவாசத்தை கொடுத்தது மெட்ரோ ரயில்கள். இன்னும் அதை விரிவுப்படுத்தலாம் என்றபோதுதான் ஒன்றிய அரசின் ஒப்புதலும், நிதியும் கிடைக்காமல் சிக்கல் எழுந்தது. ஆனாலும், தமிழ்நாடு அரசு இந்த பணியை துணிச்சலுடன் தொடங்கி, செயல்படுத்தியும் வருகிறது. கூடவே, இந்த திட்டத்திற்கு, ஒன்றிய அரசு நிதிஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசு வைத்துக்கொண்டே இருந்தது. தற்போது அது கனிந்துள்ளது. அதாவது, நேற்று முன்தினம் நடந்த ஒன்றிய அரசின் அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட பாதைகளின் மொத்த நீளம் 118 கி.மீ. ஆகும். ஒன்று – மாதவரம் முதல் சிப்காட் – 50 ரயில் நிலையங்கள்; மொத்தம் 45.8 கி.மீ நீளம். இரண்டு – கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை – 30 ரயில் நிலையங்கள்; மொத்தம் 26.1 கி.மீ நீளம். மூன்று – மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் – 48 ரயில் நிலையங்கள்; மொத்தம் 47 கி.மீ என மூன்று தாழ்வாரங்களோடு அமைய உள்ளது. இதற்கான திட்டச்செலவு ரூ.63,246 கோடி. அதாவது, ஒன்றிய அரசின் பங்கு: ரூ.7,425 கோடி (முதலீடு மற்றும் துணை கடன் உள்பட), தமிழ்நாடு அரசின் பங்கு: ரூ.22,228 கோடி (முதலீடு மற்றும் துணை கடன் உள்பட), இருதரப்பு மற்றும் பன்முக பிரதான கடன்: ரூ.33,593 கோடி.
இத்திட்டத்தின் கீழ், மயிலாப்பூர், மாதவரம், பெரம்பூர், அடையாறு, கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், போரூர், பரங்கிமலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மெட்ரோ ரயில் வர உள்ளது.

இந்த திட்டம் 2027-ம் ஆண்டு முழுமையாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மெட்ரோ ரயில் திட்டம், வெறும் போக்குவரத்தை மட்டும் குறைக்காமல், பல வேலைவாய்ப்புகளை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமர் நரேந்திர மோடியுடனான, எனது கடைசி சந்திப்பின்போது, எங்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்காக, தமிழ்நாட்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமருக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் முத்தான மூன்று கோரிக்கையில் ஒன்று நிறைவேறியுள்ளது. அடுத்து – ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் (சமக்ரா சிக்ஷா) தமிழ்நாட்டுக்கு 2024-2025ம் கல்வியாண்டில் ரூ.3,586 கோடி நிதி ஒதுக்கீடு, மூன்றாவது – இலங்கை கடற்படையின் அட்டூழியம் காரணமாக, தமிழ்நாட்டு மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதார பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது என இவ்விரண்டையும் பிரதமர் நிறைவேற்ற வேண்டும்.

Related posts

9 மணி நிலவரம்: ஹரியானாவில் 9.53% வாக்குப்பதிவு

வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரிப்பு