வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை அறிவிப்பில் வழக்கறிஞர்களை சேர்த்ததை திரும்ப பெற வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் வழக்கறிஞர் சங்கம் கோரிக்கை

சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்களையும் சேர்த்ததை திரும்பப் பெற போக்குவரத்து காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சொந்த வாகனங்களில் பிரஸ், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர் என்று ஸ்டிக்கர் ஒட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின் 198வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் வழக்கறிஞர்கள் பற்றிய குறிப்பை திரும்பப் பெற சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் எஸ்.அறிவழகன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்களுக்காக அவர்களின் பதிவு எண்ணுடன் கூடிய வழக்கறிஞர்களுக்கான வாகன ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றன. நடைபாதைகளில் விற்கப்படும் வழக்கறிஞர்கள் ஸ்டிக்கரை வாங்கி சிலர் தவறாக பயன்படுத்தலாம். போக்குவரத்து போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பிரிவு, குறைபாடான நம்பர் பிளேட் சம்பந்தமானது. அது ஸ்டிக்கர்களுக்கு பொருந்தாது. அதனால், சரியான சட்டப்பிரிவை குறிப்பிட வேண்டும். வழக்கறிஞர்கள் பற்றி அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ள குறிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்