திருப்பதி மகதி ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில் 2ம் கட்டமாக 1,703 தேவஸ்தான ஊழியர்களுக்கு பட்டா

*அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார்

திருமலை : திருப்பதி மகதி ஆடிட்டோரியத்தில் நேற்று 1703 தேவஸ்தான ஊழியர்களுக்கு 2ம் கட்டமாக வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதனை அறங்காவலர் குழு தலைவர் வழங்கினார். திருப்பதி மகதி ஆடிட்டோரியத்தில் நேற்று திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முதல்கட்டமாக தேவஸ்தான ஊழியர்களுக்கு வீட்டுமனை வழங்கப்பட்ட நிலையில் நேற்று இரண்டாம் கட்டமாக வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்கிக்கு செயல் அதிகாரி தர்மா தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்குவதை சிலர் விமர்சித்து வருகின்றனர். உலகில் எங்கும் இல்லாத வகையில் ஊழியர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் நன்மையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இந்த தன்னலமற்ற சேவை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நல்லதல்ல. ஆனால் சிலரும், சில ஊடக நிறுவனங்களும் இதனை விமர்சனம் செய்கின்றனர்.

17 ஆண்டுகளுக்கு முன்பு, நான் அறங்காவலர் குழு தலைவராக இருந்தபோது, ​​அப்போதைய முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகரிடம் ஊழியர்களுக்கான வீட்டுமனைப் பிரச்னை குறித்து பேசினேன். அப்போது, அவர் கொடுத்த அழுத்தத்தால் ஊழியர்களுக்கு வீட்டு மனைகளை வழங்கினோம். கடந்த 2009ம் ஆண்டு இதே மேடையில் முன்னாள் முதல்வரே அதனை கூறினார் என நினைவுபடுத்தினார்.

அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டு மனை வழங்கும் விவகாரம் குறித்து முதல்வர் ஜெகன்மோகனை தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​அனைத்து ஊழியர்களுக்கும் இலவசமாக வீட்டு மனைகள் வழங்கப்படும் என்றார். ஆனால், இதில் சட்டப்படி சில சிரமங்கள் இருப்பதால், அனைத்து ஊழியர்களுக்கும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் பெயரளவு விலையில் வீட்டுமனை பட்டா வழங்க முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இ.ஒ.தர்மா, கலெக்டர் வெங்கட ரமணா, ஜே.செயல் அதிகாரிக்கள் சதா பார்கவி, வீரபிரம்மம் மற்றும் இதர நிர்வாகக் குழுவினர் இத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். மேலும், ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் மற்ற ஊழியர்களுக்கும் வீட்டுமனை வழங்குவதற்காக மூன்றாம் தவணையாக ஏர்பேடு மண்டலம் பாகலியில் 350 ஏக்கர் நிலத்தை வழங்கிய கலெக்டர் வெங்கட ரமணாவின் முயற்சி பாராட்டுக்குரியது.

இதற்காக, அறங்காவலர் குழு கூட்டத்தில், ₹87 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதில், செயல் அதிகாரி தர்மா சிறப்பு கவனம் செலுத்தினார். ஊழியர்களுக்கான வீட்டுமனை பிரச்னையை பரிசீலிப்பதாக பல அரசுகள் கூறியது. ஆனால் ஒய்.எஸ்.ராஜசேகர் மற்றும் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ஆகியோர் மட்டுமே அதை செய்துள்ளனர். ஊழியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இதை எப்போதும் நினைவில் வைத்து நன்றியுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதனை தொடர்ந்து செயல் அதிகாரி ஏ.வி.தர்மா பேசுகையில், ‘வீட்டு மனைகள் தொடர்பாக ஊழியர்களுக்கு தவறான எண்ணம் தேவையில்லை. இது முழுக்க முழுக்க அரசு நிலம். தேவஸ்தானம் பணம் கொடுத்து வாங்கி ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது. எனவே நீதிமன்ற வழக்குகள் எதுவும் இருக்காது. ஏர்பேடு பகுதியில், இம்மாத இறுதிக்குள், அரசிடம் இருந்து, 450 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, மூன்றாவது தவணையாக, ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும். ஏழுமலையானுக்கு பக்தர்கள் மீது அதிக அன்பு இருக்கும் எனவே ஊழியர்கள் பக்தர்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு எவ்வளவு சிறப்பாக சேவையாற்றுகிறீர்களோ, அந்த அளவுக்கு இறைவனின் அருள் கிடைக்கும்’ என பேசினார்.

அதைதொடர்ந்து, வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு வீட்டு மனைகளை வழங்கிய பெருமை, முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன், தலைவர் பூமனா கருணாகர், செயல் அதிகாரி தர்மா ஆகியோரையே சாரும் என இணை செயல் அதிகாரி வீரபிரம்மம் தெரிவித்தார். மேலும் விரைவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்படும் என்றார்.

பின்னர், தலைவர் கருணாகர் மற்றும் செயல் அதிகாரி தர்மா ஆகியோர் 1,703 ஊழியர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இணை செயல் அதிகாரி சதா பார்கவி, முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், சட்ட அதிகாரி வீரராஜு, சி.இ. நாகேஸ்வரராவ் மற்றும் பல அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related posts

திறந்தவெளி அரங்கு உட்பட மதுரை கலைஞர் நூலகத்தில் ரூ12.80 கோடியில் கூடுதல் வசதி: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

அணையில் மூழ்கி இன்ஜினியர் பலி

போதையில் படுத்திருந்த திருடன் கார் ஏறியதில் தலை நசுங்கி பலி