ஒரு ஏக்கரில் ரூ.14 லட்சம் லாபம் :மாற்றி யோசிக்கும் மலர் விவசாயி

நெல், கரும்பு போன்ற வழக்கமான பயிர்களை சாகுபடி செய்பவர்கள்தான் பெரும்பாலும் விவசாயத்தில் லாபம் இல்லை என்பார்கள். ஆனால் சில மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்து வெற்றி கண்டவர்களோ இன்று லட்சத்தில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை கேள்விப்படுகிறவர்கள் நம்புவதற்கே சற்று சிரமப்படுவார்கள்தான். ஆனால் அவர்கள் முன்பு வெற்றியாளர்களாக வலம் வந்துகொண்டிருப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி ரசுலாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி மகாலிங்கம் என்பவர் இந்த விசயத்தில் மாபெரும் வெற்றியாளராக திகழ்கிறார். பிஎஸ்சி பட்டதாரியான இவர் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ரோஜா, சம்பங்கி என பல மலர் வகைகளை சாகுபடி செய்து வருகிறார். அதில் ஏக்கருக்கு பல லட்சங்களை லாபமாக பார்த்து வருகிறார். இவரைப் பார்த்து லத்தேரி பகுதியில் பல விவசாயிகள் மலர் விவசாயிகளாக மாறி இருக்கிறார்கள்.சுற்றிலும் மலைகள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் பின்னணியில் அமைந்திருக்கிறது லத்தேரி. இந்தப் பகுதியில் எங்கு பார்த்தாலும் மல்லிகை, முல்லை என மலர்த்தோட்டங்கள் நிரம்பியிருக்கின்றன. ஒரு காலைப்பொழுதில் மகாலிங்கத்தை சந்தித்தோம்.

‘’ நான் நெல், கரும்பு பயிரிட மாட்டேன். பல்வேறு மலர் வகைகளை சாகுபடி செய்கிறேன். கொய்யா, மஞ்சள் போன்ற பயிர்களை சாகுபடி செய்கிறேன். இதில் நிச்சய லாபம் பார்க்கிறேன். ஓர் ஆண்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து சுமார் 1 லட்சமாவது லாபமாக கிடைக்க வேண்டும். அப்படி இல்லாத பயிரை ஏன் சாகுபடி செய்ய வேண்டும்?’’ என தடாலடியான கேள்வியோடு ஆரம்பித்தார் மகாலிங்கம். தொடர்ந்து அதே ஸ்டைலில் பேசினார். 1975ம் ஆண்டில் வேலூர் ஊரீசுக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் படித்தேன். பாரம்பரிய விவசாயக்குடும்பம் என்பதால் நானும் விவசாயத்திற்கு வந்துவிட்டேன். 1986ம் ஆண்டில் அப்போதைய ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தை சேர்ந்த (திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர்) சில விவசாயிகளை ஒருங்கிணைத்து மலர் சாகுபடியில் இறங்கினோம்.

நாங்கள் வெயிலிலும், மழையிலும் கஷ்டப்பட்டு விளைவித்த மலர்களை விற்பதற்கு எடுத்து சென்றால் இடைத்தரகர்கள் 15 சதவீத கமிஷன் கேட்டார்கள். கமிஷன் தொகையைக் கொஞ்சம் குறைவாக வாங்க முடியுமா? என கேட்டதையே அவர்கள் ஏற்கவில்லை. இதனால் நாங்கள் ஒரு முடிவெடுத்தோம். நாங்களே வியாபாரிகளாக மாறி மலர்களை வாங்கி வெளியில் விற்பனை செய்ய ஆரம்பித்தோம். இதன்மூலம் எங்களுக்கு கூடுதல் விலை கிடைத்தது. நாங்கள் மலர் சாகுபடி செய்வதோடு, மற்ற விவசாயிகளின் உற்பத்தியையும் வாங்கி மார்க்கெட் செய்ததைப் பார்த்து எங்கள் பகுதியின் பல விவசாயிகள் மலர் சாகுபடி பக்கம் திரும்பினார்கள்.

இப்போது லத்தேரி மலர் சாகுபடி மண்டலமாக மாறியுள்ளது. லத்தேரியில் எனக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது. அதைத்தவிர்த்து அருகில் உள்ள நிலங்களை குத்தகைக்கு எடுத்திருக்கிறேன். தற்போது மொத்தமாக 15 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக முல்லை, மல்லி, கனகாம்பரம், ரோஜா, சம்பங்கி போன்ற மலர்களை சாகுபடி செய்து வருகிறேன். தற்போது 4 ஏக்கரில் முல்லை பயிரிட்டு இருக்கிறேன். இதில் ஆண்டிற்கு ஒரு ஏக்கரில் இருந்து குறைந்தது 4,500 கிலோ மகசூல் கிடைக்கிறது. ஒரு கிலோ பூவுக்கு சராசரியாக ரூ.120 விலை கிடைக்கிறது. இதன்மூலம் ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. உரம், மருந்து, ஆள் கூலி என 3 லட்சம் செலவானாலும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது.

60 சென்ட் நிலத்தில் பிரிஜ்வால் ரக சம்பங்கியைப் பயிரிட்டிருக்கிறேன். இதற்கு முன்பு அதிகளவில் சாகுபடி செய்தேன். இப்போது 60 சென்ட் நிலத்தில் மட்டும் பயிரிட்டிருக்கிறேன். இதில் ஆண்டிற்கு 3 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கிறது. ஒரு கிலோவுக்கு சராசரியாக ரூ.80 விலை கிடைக்கிறது. இதன்மூலம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலவு போக 1 லட்சம் லாபமாக கிடைக்கிறது. தற்போது ஒன்றரை ஏக்கரில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்திருக்கிறேன்.

இதில் தற்போது சிறிய அளவில் பூக்கள் வருகிறது. போகப்போக மகசூல் அதிகரிக்கும். பன்னீர் ரோஜாவில் தினமும் மகசூல் எடுக்கலாம். ஒரு மாதத்திற்கு எப்படியும் 2400 கிலோ மகசூல் கிடைக்கும். இதில் சராசரியாக கிலோவுக்கு ரூ.80 விலை கிடைத்தாலும் ரூ.1 லட்சத்து 92 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். ஆண்டுக்கு 23 லட்சத்து 4 ஆயிரம் வருமானம் கிடைக்கும். இதில் பாதிக்கு பாதி செலவானாலும் ரூ.11 லட்சம் லாபமாக கிடைக்கும். மலர் சாகுபடியில் இருந்து ஏக்கருக்கு ஓர் ஆண்டில் குறைந்தது ரூ.14 லட்சம் லாபமாக பார்க்க முடிகிறது. இது தவிர 2 ஏக்கர் நிலத்தில் மஞ்சள் சாகுபடி செய்திருக்கிறேன். இதில் 80 கிலோ கொண்ட 96 மூட்டை மகசூல் கிடைக்கிறது. தற்போது ஒரு குவிண்டால் மஞ்சள் (100 கிலோ) ரூ.6 ஆயிரம் என விற்பனையாகிறது.

டன்னுக்கு 60 ஆயிரம் கிடைக்கிறது. ஏழரை டன் மகசூலில் இருந்து ரூ.நான்கரை லட்சம் வருமான கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதில் இரண்டரை லட்சம் செலவு போனாலும் 2 லட்சம் லாபமாக கிடைக்கும். இதுபோக கொய்யாவும் பயிர் செய்திருக்கிறேன். அதன்மூலமும் ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கும். இதுதவிர லத்தேரி மெயின்ரோட்டில் பூக்கடை, மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறேன். பூக்கள் அனைத்தையும் ஆந்திரா மாநிலத்தின் சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறேன். பல ஆண்டுகளாக தொடர்பில் இருப்பதால் விற்பனை செய்யும் பூக்களுக்கான தொகை உடனுக்குடன் கிடைத்து விடுகிறது. இதனால் மலர் விவசாயம் எனக்கு மகிழ்ச்சியான விவசாயமாக இருக்கிறது’’ என்கிறார் மகாலிங்கம்.

தொடர்புக்கு…
விவசாயி: மகாலிங்கம்
செல்: 94434 87770

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை