சேப்பங்கிழங்கில் செம்ம லாபம்!

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் கலசப்பாக்கத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் மிகவும் இயற்கை எழில் வாய்ந்தவை. இங்குள்ள விண்ணுவாம்பட்டு என்ற கிராமம் இன்னும் கூடுதலான பசுமையோடு காட்சி அளிக்கும். செய்யாற்றங்கரையின் ஈரம் இந்தப் பகுதியை எப்போதும் செழிப்பாக வைத்திருக்கும். நெல், கரும்பு, சோளம், வேர்க்கடலை என எங்கு திரும்பினாலும் பல விதமான பயிர்கள் இங்குள்ள நிலங்களில் நிரம்பி இருக்கும்.

இந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை மட்டுமே முதன்மைத் தொழிலாக நம்பி இருக்கிறார்கள். இதனால் விவசாயம் சார்ந்த முன்னெடுப்புகள் அதிகமாக காணப்படுகிறது. பாரம்பரிய விதைகள் மையம் எனும் அமைப்பையும் இந்த ஊர் விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். இதன்மூலம் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் ஒன்றுகூடி விதை பரிமாற்றமும் செய்துகொள்கிறார்கள். இத்தகைய விண்ணுவாம்பட்டு கிராமத்தில் சேப்பங்கிழங்கு விவசாயத்தில் செழிப்பான லாபம் பார்த்து வருகிறார் கோவிந்தராஜ் எனும் விவசாயி. தனது சேப்பங்கிழங்கு வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கோவிந்தராஜை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். எங்களை வரவேற்று, வயல் முழுவதையும் சுற்றிக் காட்டியபடியே பேசத் தொடங்கினார்.

“எங்கள் ஊரில் பெரும்பாலான நபர்களுக்கு விவசாயம்தான் தொழில். நானும் அவர்களில் ஒருவன்தான். எனக்கும் சிறு வயதில் இருந்தே விவசாயம்தான் தொழில். இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் நெல், கரும்பு, காய்கறிப் பயிர்கள் என பயரிட்டு வந்தேன். இப்போது நெல் பயிரிட்டாலும் கிழங்கு வகைப் பயிர்களை விளைவிப்பதில் ஆர்வம் இருக்கிறது. அதனால், கடந்த பத்து வருடங்களாக கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு விவசாயமும் செய்து வருகிறேன். கடந்த போகத்தில் கருணை போட்டிருந்தேன். இப்போது சேம்பு போட்டிருக்கிறேன். எனக்கு சொந்தமாக இடம் இருந்தபோதிலும் குத்தகைக்கு மூன்று ஏக்கர் எடுத்து அதிலும் விவசாயம்தான் செய்து வருகிறேன். இப்போது எனது நிலத்தில் நெல், வேர்க்கடலையைத் தொடர்ந்து சேப்பங்கிழங்கும் பயிரிட்டு இருக்கிறேன். ஐம்பது சென்ட் நிலத்தில் சேப்பங்கிழங்கு பயிரிட்டு இருக்கிறேன். இப்போது பாதி வளர்ந்த நிலையில் உள்ள சேப்பங்கிழங்கு இன்னும் மூன்று மாதத்தில் அறுவடைக்கு தயாராகும். சேம்புவைப் பொருத்தவரை இரண்டு வகையான கிழங்குகள் இருக்கின்றன. ஒன்று பால் சேம்பு, இன்னொன்று குண்டு சேம்பு. பால் சேம்புவை கேரளாவில் பயிரிடுவார்கள். நமது ஊர்ப்பக்கம் குண்டு சேம்புதான்.

50 சென்ட் நிலத்தில் சேப்பங்கிழங்கை நடுவதற்கு குறைந்தபட்சம் 350 கிலோ விதைக்கிழங்குகள் தேவைப்படும். எனக்குத் தேவையான விதைக் கிழங்குகளை கடந்த வருட விளைச்சலில் இருந்தே எடுத்துக் கொண்டேன். இதனால், விதைக்கிழங்கு வாங்குவதற்கான செலவு எனக்கு மிச்சம்தான். கிழங்கு பயிரிடுவதற்காக தேர்ந்தெடுத்த நிலத்தை நன்றாக ஆழ உழ வேண்டும். அதன்பின், நிலத்தை சமன்படுத்தி ஐம்பது சென்டிற்கு ஐந்து டிப்பர் தொழுவுரத்தைக் கொட்டி உழ வேண்டும். இந்தக் கிழங்கிற்கு தொழுஉரம் முக்கியம். அதன்பின், நிலத்தில் நன்றாக தண்ணீர் பாய்ச்சி ஈரமாக்கி அந்த ஈரத்திலேயே விதைக்கிழங்குகளை நட வேண்டும். அதாவது, சேப்பங்கிழங்கை விதைப்பதற்கு ஒரு வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் இடைப்பட்ட தூரம் இரண்டரை அடி இருக்க வேண்டும். அதேபோல, ஒரு கிழங்கிற்கும் அடுத்த கிழங்கிற்கும் இடைப்பட்ட தூரம் ஒரு அடி இருக்க வேண்டும். இந்த இடைவெளியில் விதைகளை நட்டால்தான் கிழங்குகள் நன்றாக வளர்ந்து கூடுதல் மகசூல் கொடுக்கும்.

விதைக்கிழங்குகள் நட்ட பத்தாவது நாளில் கிழங்கில் இருந்து தண்டு வளர்ந்து வெளியே தெரியத் தொடங்கிவிடும். அதேபோல, கிழங்கு நட்டு மூன்றாவது நாளில் கண்டிப்பாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். அப்படி மூன்றாவது நாள் கொடுக்க வேண்டிய நீரை உயிர்நீர் என்பார்கள். சேம்பு வளர்வதற்கு நீர் மிக மிக அவசியம். வயலில் ஈரம் அதிகமாக இருந்தால் நீர் தேவையில்லை. அதாவது நிலத்தை எப்போதும் காய விடக்கூடாது. மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கொடுப்பது நல்லது. இது ஆறு மாத பயிர் என்பதால் நிச்சயமாக ஒரு சீசனுக்கு மூன்றுமுறை களை எடுக்க வேண்டும். இலை சுருட்டல் நோய், மஞ்சள் வாடை நோய் என எப்போது வேண்டுமானாலும் சேப்பங்கிழங்குச் செடியை நோய் தாக்கலாம். இதனால், கவனமான முறையில் கிழங்குச் செடிகளைப் பாதுகாக்க வேண்டும். நல்ல பராமரிப்பில் சரியாக ஆறுமாதம் முடிந்தவுடன் அறுவடை செய்தோம் என்றால் ஐம்பது சென்ட் நிலத்தில் ஐந்து டன் சேப்பங்கிழங்கு அறுவடை செய்யலாம். ஒரு கிலோ கிழங்கு இப்போது முப்பது ரூபாய் வரை போகிறது. அந்த வகையில் ஐந்து டன் கிழங்குகளின் மூலம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வரை வருமானம் எடுக்கலாம். நான் எனது நிலத்தில் விளைகிற கிழங்குகளை நேரடியாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அனுப்பி விடுகிறேன். இதனால் எனக்கு விற்பனை செய்வதும் எளிதாதாக இருக்கிறது.

அதேபோல, சேப்பங்கிழங்கு விவசாயம் செய்வதற்கு செலவும் அதிகம் தேவைப்படும். விதைக்கிழங்குகள் வாங்குவதில் இருந்து நிலத்தை உழவு செய்ய, கிழங்குகள் நடவு செய்ய, களை எடுக்க என நிறைய செலவு ஆகும். அதேபோல, நோய்த் தாக்குதல் வரும்போது மருந்து செலவு இருக்கும். தொழுவுரம் வாங்குவதற்கான செலவும் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் ஐம்பது சென்ட் நிலத்தில் போடப்பட்ட சேப்பங்கிழங்கிற்கு 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு ஆகும். மகசூலாக கிடைக்கும் 5 டன் கிழங்கை விற்பனை செய்வதன் மூலம் எங்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் கிடைக்கும். அதில் ரூ.40 ஆயிரம் செலவு போக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் லாபமாக கிடைக்கும். செலவுக் கணக்கில் விதைக்கிழங்கு வாங்குவதற்கான செலவை சேர்க்கவில்ல. என்னிடம் ஏற்கனவே விதைக் கிழங்குகள் இருந்ததால் அதனையே பயன்படுத்திக் கொண்டேன். இந்த கிழங்குச் சாகுபடியைப் பொருத்தவரை லாபம் உறுதியாக கிடைக்கும். கடந்த சீசனில் கருணைக்கிழங்கு விதைத்து அதில் இருந்தும் நல்ல வருமானம் பார்த்தேன். கடந்த பத்து வருடங்களாகவே கிழங்கு விவசாயம் எனக்கு நன்றாக கை கொடுக்கிறது. மற்ற விவசாயிகளும் இந்த மாதிரி கிழங்கு விவசாயத்தைத் தொடர்ந்தால் நல்ல வருமானம் பார்க்கலாம்
என்கிறார் கோவிந்தராஜ்.
தொடர்புக்கு:
கோவிந்தராஜ்: 90250 77765.

Related posts

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: SETC மேலாண் இயக்குநர் தகவல்!

வரும் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கி மீட்கப்பட்ட 30 தமிழர்கள் இன்று டெல்லி திரும்புகின்றனர்: தமிழக அரசுக்கு பாராட்டு