வளமான லாபம் தரும் வால் கத்தரி!

உழுதவன் கணக்கு பார்த்தால் ஆழாக்கு கூட மிஞ்சாது என்பார்கள். அது தவறு. லாபம் இருந்தால்தான் எந்த தொழிலையும் செய்ய வேண்டும். விவசாயத்தை மட்டும் ஏன் லாபம் இல்லாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி லாபம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கும் கேள்விக்கு சரியான விடை தருகிறார் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த முருகன். இவர் தனது 3 ஏக்கர் நிலத்தில் வால் கத்தரியைப் பயிரிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கிறார். அவரது கத்தரி வயலுக்கு சென்றிருந்தோம். பணிகளுக்கு இடையே நம்மிடம் உரையாடினார்.“எனக்குச் சொந்தமாக 3 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வால் கத்தரிக்காயை சாகுபடி செய்து வருகிறேன். ஒருமுறை வால் கத்தரியைப் பயிர் செய்தால், அடுத்தமுறை மஞ்சள் சாகுபடி செய்வேன். இவ்வாறு மாற்றி மாற்றி சாகுபடி செய்து வருகிறேன். இந்த ஆண்டில் கடந்த 70 நாட்களுக்கு முன்பு வால் கத்தரியை நடவு செய்தேன். நடவுக்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 40 டிப்பர் மாட்டுச் சாணமும், 5 முதல் 10 டிப்பர் வரை கோழிக் கழிவும் கலந்து உழவு ஓட்டினோம். அதன்பின்னர், 6 அடிக்கு ஒன்று என பார் அமைத்து சொட்டுநீர்க்குழாய்களை அமைத்தோம். ராயக்கோட்டையில் உள்ள ஒரு நர்சரியில் இருந்து வால் கத்தரி நாற்றுகளை, ஒரு நாற்று 40 பைசா வீதம் 12 ஆயிரம் நாற்றுகளை ₹6 ஆயிரத்திற்கு வாங்கினேன். அவற்றை 3 ஏக்கரில் ஒரு செடிக்கு செடி 2.5 அடி என்ற இடைவெளியில் நடவு செய்தோம். நடவு செய்த 75வது நாளில் காய்கள் அறுவடைக்குத் தயாராகும். இந்த முறை, முதல் அறுவடையில் 7.5 டன் காய்கள் கிடைத்துள்ளது.

இந்தக் காய்களை ஒரு கிலோ ₹40 என விற்பனை செய்தோம். கடந்த 3 மாதத்தில் ₹6 லட்சம் வரை செலவாகியிருக்கிறது. முதல் அறுவடையில் ₹3 லட்சம் வரை வருவாய் கிடைத்தது. விலை சராசரியாக ₹20க்கு குறையாமல் கொள்முதல் செய்யப்பட்டாலே போதும். இதில் லாபம் நிச்சயம். வாரந்தோறும் ஒரு அறுவடை நடக்கும். இது 9 மாதப் பயிர் என்பதால் அதிகபட்சமாக சுமார் 40 முதல் 50 முறை அறுவடை செய்யலாம். ராயக்கோட்டை வியாபாரிகளே நேரடியாக தோட்டத்திற்கு வந்து வால் கத்தரியை கொள்முதல் செய்து கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்புகிறார்கள். கேரளாவில் பொரியல், அவியல் என அனைத்திற்கும் வால் கத்தரிக்காயை பயன்படுத்துகிறார்கள். இதேபோல், கர்நாடகாவிலும், வட மாநிலங்களிலும் வால் கத்தரிக்காயை சமையலுக்கு பயன்படுத்துகிறார்கள். வட மாநிலங்களில் வால் கத்தரிக்காய் மூலம் தயாரிக்கப்படும் உணவான வாங்கிபாத் ரொம்ப ஃபேமஸ். கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையின்போது, வால்கத்தரிக்காயின் தேவை அதிகமாக இருக்கும். அப்போது ஒரு கிலோ ₹70 வரை கூட விலை போகும். அந்த சமயங்களில் நமக்கு நல்ல லாபம் கிடைக்கும். குறைந்த பட்சமாக ஒரு அறுவடைக்கு 5 டன் மகசூல் கிடைத்தாலே 40 அறுவடையில் 200 டன் மகசூல் கிடைக்கும். இதை சராசரியாக ரூ.20 என விற்பனை செய்வதன் மூலம் ரூ.40 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் செலவும் அதிகம். அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை செலவானால் கூட ரூ.20 லட்சம் லாபம் கிடைக்கும். சில சமயங்களில் குறைந்த விலை கிடைத்து குறைந்த லாபமும் கிடைக்கும். ஆனால் லாபம் என்பது உறுதியானது. இப்போது நான் ஓரளவு பொருளாதாரத்தில் சிறப்பான நிலையில் இருக்கிறேன். இதற்கு வால்கத்தரிக்காய்தான் காரணம்’’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
தொடர்புக்கு:
முருகன் – 99430 46933.

தக்காளி போல் கயிறு கட்ட வேண்டும்

வால் கத்தரி வளர ஆரம்பித்ததும் களைகளும் சேர்ந்து வளரும். இதனால் ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது களை எடுக்க வேண்டும். காய் பிடிக்க ஆரம்பித்ததும் செடி தரையில் படுத்துவிடும். இதனால் தக்காளிச் செடிக்கு கயிறு கட்டுவது போல், வால் கத்தரிக்கும் பந்தல் அமைத்து ஒவ்வொரு செடியையும் தனித்தனியாக தூக்கி நிறுத்தும் வகையில் கயிறு கட்ட வேண்டும். இதற்கு பந்தல் அமைக்க தனியாக ஒரு ஏக்கருக்கு ₹1 லட்சம் வரை செலவாகும்.

உர மேலாண்மை

கடலைப் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, புங்கம் புண்ணாக்கு, டிஏபி உரம் ஆகியவற்றை சம அளவில் வாங்கி, பெரிய பிளாஸ்டிக் டிரம்மில் கொட்டி அதில் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, இந்தக் கலவையை அடிக்கடி கிளறிவிட வேண்டும். மூன்று நாளில் அந்த உரக் கலவை நன்றாக பொங்கி நிற்கும். அந்த நீரை செடிக்குச்செடி ஊற்றிவிட்டால் பூச்சிகள் கட்டுப்படுவதோடு, செடிக்கு ஊட்டமாகவும் இருக்கும். இந்த உரம் தவிர, டிரிப் உரமாக அதிகாரிகள் கூறும் ரசாயன உரமும் கொடுக்கப்படுகிறது.

Related posts

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு

கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை வருகிற 30ம தேதிக்குள் அகற்ற வேண்டும் : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு உத்தரவு!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழிவறை கட்டும் பணிக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு