நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி!

ஏர்போர்ட்டில் வேலை பார்ப்பது பலருக்கு கனவு. பல்வேறு நாடுகளுக்கு செல்லும் விமானங்களைப் பார்த்துக் கொண்டே ரசித்துக் கொண்டு இருக்கலாம் என நினைத்தே பலர் இந்த வேலைக்கு ஏங்குவதுண்டு. ஆனால் ஏர்போர்ட்டில் வேலை பார்த்த ஒருவர், அதுவும் சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் வேலை பார்த்த ஒரு இளைஞர் தனதுசொந்த ஊரில் தற்போது நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் லாபமும் பார்த்து வருகிறார். தருமபுரி மாவட்டம் நெக்குந்தி என்ற கிராமத்தில் வசிக்கும் சரவணக்குமார் என்பவர்தான் இப்படி நாட்டுக்கோழி வளர்ப்பில் அசத்தி வருகிறார். அவரைச் சந்திக்க ஒரு காலைப்பொழுதில் நெக்குந்தி கிராமத்திற்கு சென்றிருந்தோம். கோழிகளுக்கு தீவனம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருந்த சரவணக்குமார் நம்மை வரவேற்றுப் பேசினார். “ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் மெயிண்டனன்ஸ் வேலை பார்த்து வந்தேன். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு சொந்த ஊருக்கு வந்தேன். சிறிய வயதில் இருந்தே கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்ட நான் மீண்டும் கோழி வளர்க்கத் தொடங்கினேன். கொரோனா ஊரடங்கு காலம் அதிகரித்ததால் மீண்டும் சிங்கப்பூர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இங்குதானே இருக்கிறோம், முழுவதுமாக கோழி வளர்ப்பில் ஈடுபடலாமே என தோன்றியது. அதை செயல்படுத்தத் தொடங்கி விட்டேன்.

எனக்குச் சொந்தமான நிலத்தில் 12,500 சதுர அடி பரப்பளவில் கோழிகளுக்கான கொட்டகை அமைத்தேன். முதலில் பெரிய கோழிகளாக வாங்காமல் கோழிக்குஞ்சுகளாக வாங்க வேண்டும் என்று தீர்மானம் செய்தேன். கேரளாவில் இருந்து சோனாலி கோழிகளும், ஈரோட்டுக்கு அருகில் இருந்து பெருவிடைக் கோழிகளையும், தருமபுரியில் இருந்து வான்கோழிக் குஞ்சுகளையும் வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். முதன்முதலில் 500 சோனாலியும், 100 பெரு விடையும், 500 வான்கோழிக் குஞ்சுகளும் வாங்கி வந்து வளர்க்க ஆரம்பித்தேன். நான்கு வருடங்களுக்கு முன்பு 1 மாத சோனாலி கோழிக் குஞ்சுகளை ரூ.90 என்ற கணக்கில் வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். பெருவிடை நாட்டுக்கோழிகளை கிலோ ரூ.550 என்ற கணக்கில் வாங்கி வந்தேன். அதேபோல் வான்கோழியை ரூ.90 என்ற கணக்கிலும் வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினேன். இதற்கு மட்டும் எனக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் செலவானது. இதிலிருந்து கோழிகளை உற்பத்தி செய்ததன் மூலம் என்னிடம் தற்போது எட்டாயிரம் கோழிகள் உள்ளன. இதில் சோனாலியில் 800 தாய்க்கோழிகளும், பெருவிடையில் 380 தாய்க்கோழிகளும், வான்கோழியில் 450 தாய்க்கோழிகளும் உள்ளன. இவற்றை விற்பனை செய்வது கிடையாது. இதில் இருந்து கிடைக்கும் கோழிக்குஞ்சுகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறேன்.

கோழிகளைப் பொருத்தவரையில் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. காலநிலையைப் பொருத்து உணவு கொடுப்பது. தண்ணீர் வைப்பது, உரிய நேரத்தில் மேய்ச்சலில் விடுவது போன்றவற்றைக் கவனிக்க வேண்டும். காலையில் 6 மணிக்கு கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்துவிடுவோம். அதன்பிறகு 11 மணியளவில் கம்பு, ராகி, சோளம், கோதுமை, அரிசி என கோழிகளுக்கு தீவனமாக கொடுப்போம். பிறகு மதிய நேரத்தில் ஆடாதொடா, முருங்கைக் கீரை, கொத்தமல்லி, அழுகிய தக்காளி போன்றவற்றை கோழிகளுக்கு உணவாக கொடுப்பேன். மாலையில் அடைய வரும் கோழிகள் சரியான அளவில் தீவனம் எடுத்துக் கொண்டனவா? என்பதைக் கவனித்துக் கொள்வேன். அதேபோல் காலையில் கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்து விட்ட பின்பு கொட்டகையை சுத்தம் செய்துவிடுவேன். பண்ணையைச் சுற்றிலும் இயற்கை முறையில் விளைந்த மூலிகைச் செடிகள் இருப்பதால் கோழிகளுக்கு பெரிதாக உயிர்க்கொல்லி நோய்கள் வருவதில்லை.

பெருவிடைக் கோழிகள் மூலிகைச் செடிகளைச் சாப்பிட்டு வந்தாலும் அவைகளுக்கு சரியான தீவனத்தைக் கொடுப்பது கட்டாயம். ஊட்டமான தீவனத்தினைக் கொடுக்கவில்லை என்றால் ஒரு கோழி, மற்ற கோழிகளின் இறக்கைகளையே சாப்பிடத் தொடங்கிவிடும். இதனால் ஒவ்வொரு கோழியும் பாதிக்கப்படும். அதேபோல் கடைகளில் வாங்கி தீவனத்தைக் கொடுப்பதால் பெருவிடை கோழிகளுக்கு கொழுப்பு அதிகமாகி முட்டை இடாமல் போய்விடும். இதனை தவிர்ப்பதற்கு நாங்கள் பெருவிடைக் கோழிகளுக்கு மட்டும் கம்பு, மக்காச்சோளம், கடலைப் புண்ணாக்கு உள்ளிட்டவற்றைக் கொடுக்கிறோம். இதில் அதிக கொழுப்பு இல்லாமல் இருப்பதால் கோழிகளுக்கு கொழுப்பு பிரச்னை ஏற்படாது. அதையும் மீறி கோழிகளுக்கு கொழுப்பு பிரச்னை வந்தால் அவற்றிற்கு தினமும் கொடுக்கக்கூடிய உணவில் கால் பங்கு மட்டுமே கொடுப்போம். அதோடு குடிப்பதற்கு தண்ணீரும் தருவோம். மற்றபடி சோனாலி கோழிகளுக்கும், வான்கோழிகளுக்கும் கருவாட்டுத்தூள், மக்காச்சோளம், சோயா பீன்ஸ் ஆகியவற்றை அரைத்து தீவனமாக கொடுப்போம். இந்தத் தீவனம் எளிதில் ஜீரணமாவதோடு அதிக பிரச்சினைகளையும் தராது. சோனாலி கோழிகள் பெருவிடைக் கோழிகளோடு ஒப்பிடுகையில் அளவில் சிறியதாக இருப்பதால் கலப்புத் தீவனம் கொடுக்கும்போது கொழுப்பு சேருதல் உள்ளிட்ட எந்தவொரு பிரச்னையும் ஏற்படாது.

சோனாலி, பெருவிடைக் கோழிகள் 6லிருந்து 8 வது மாதத்தில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகிவிடும். சோனாலி கோழிகளைப் பொருத்தவரையில் 8 பெட்டைக் கோழிகளுக்கு ஒரு சேவல் என்ற அளவில் இனப்பெருக்கத்திற்காக வைத்துக் கொள்வேன். பெருவிடைக் கோழிகளில் 4 பெட்டை கோழிக்கு 1 சேவல் இருக்கும். அப்போது கோழிக்குஞ்சுகள் நல்ல ஊட்டமாக வரும். முட்டையின் அளவு பெரிதாக கிடைக்கும். கோழிகளின் முட்டைகள் சிறியதாக இருந்தால் கோழிக்குஞ்சுகள் தரமானதாக இருக்காது. சராசரியாக ஒரு பெருவிடைக் கோழி 12 லிருந்து 15 முட்டைகள் இடும். அனைத்து முட்டைகளையும் கோழிகளிடம் அடை வைத்துத்தான் பொரிக்க வைக்கிறேன். முட்டைகளைப் பொரிக்க வைக்க நான் ஒருபோதும் இன்குபேட்டர்களைப் பயன்படுத்துவது கிடையாது. அடை வைத்த 21வது நாளில் கோழிக்குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளியே வந்துவிடும். 22வது நாளில் ஒவ்வொரு முட்டையாக எடுத்து தட்டிப் பார்ப்பேன். கரு கூடி இருந்தால் முட்டைக்குள் இருக்கும் கோழிக்குஞ்சின் சத்தம் கேட்கும். இதனைத் தொடர்ந்து பெரியதாக உள்ள பகுதியில் மொபைல் போன் டார்ச்சை அடித்து பார்ப்பேன். வெளிச்சம் உள்ளே ஊடுருவினால் முட்டையில் கரு கூடவில்லை என்றும். முட்டையின் உள்ளே வெளிச்சம் ஊடுருவவில்லை என்றால் கரு கூடி உள்ளது என்றும் தெரிந்துகொள்வேன். சில நேரங்களில் முட்டை ஓடு மிகவும் அடர்த்தியாக இருந்தால் கோழிக்குஞ்சுகள் வெளியே வர சிரமப்படும்.

பொரித்து வந்த கோழிக்குஞ்சுகளுக்கு 7வது நாளில் எஃப் 1 மருந்தும், 14வது நாளில் ஐபீடி மருந்தும், 21வது நாளில் லெஸ்கோமா என்ற மருந்தும் கொடுப்போம். கோழிக்குஞ்சுகளை கொல்லும் நோய் என்றால் அது அம்மை நோய்தான். இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் நாம் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் வீணாகப் போய்விடும். இதற்கு 41வது நாளில் சிக்கன்பாக்ஸ் மருந்து கொடுப்பது மிக மிக அவசியம். கோழிக்குஞ்சுகளுக்கு உள்ளுறுப்புகளில் ஏதேனும் பிரச்னை வந்தால் அவைகளுக்கு கழிச்சல், சளித்தொல்லை, சுருக்கம் நோய் போன்றவை வரக்கூடும். இதுபோன்ற நோய்கள் வந்தாலோ அல்லது கோழிகள் நல்ல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என நினைத்தாலோ கொரைசா மருந்தினை கோழிக்குஞ்சுகளுக்கு கொடுக்கலாம். சோனாலி கோழிகள் வருடத்திற்கு 200 முட்டைகள் வரை கூட இடும். ஆனால் நாங்கள் சோனாலி கோழிகளை முட்டைக்காக வளர்ப்பது கிடையாது. கோழிகளை ஒரு நாள் குஞ்சுகளாகவும், ஒரு மாத கோழிகளாகவும் விற்பனை செய்யவே வளர்க்கிறோம். ஆகையால் அவற்றை அடிக்கடி இனப்பெருக்கம் செய்ய விடமாட்டோம். உரிய கால அவகாசம் கொடுத்த பிறகே இனப்பெருக்கத்திற்கு விடுவோம். குறைந்தது பொரித்து வந்த கோழிகளை ஒரு மாதம் வரை தாய்க் கோழிகளுடன் வைத்த பிறகே தாய்க்கோழியை இனப்பெருக்கத்திற்கு சேவலுடன் விடுவோம்.

கோழிகளை நாங்கள் மூன்று பிரிவில் விற்பனை செய்து வருகிறோம். நாள் கோழிக் குஞ்சுகள். மாதக் கணக்கு கோழிக் குஞ்சுகள். ஒரு மாதத்திற்கு மேலான கோழிக் குஞ்சுகள் என்பதுதான் அந்த 3 பிரிவு. நாங்கள் இன்குபேட்டர்களை வைத்து முட்டைகளை ஹாட்சிங் செய்வது கிடையாது. இதனால் கோழிக்குஞ்சுகள் தரமானதாக இருப்பதால் வியாபாரிகள் நேரடியாக எங்களது பண்ணைக்கே வந்து கோழிக் குஞ்சுகளை வாங்கிச் செல்கிறார்கள். சேலம், ஈரோடு, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் மட்டும் இல்லாமல் சென்னை, பெங்களூர், கேரளா போன்ற பகுதிகளில் இருந்து கோழிகளை வாங்கிச் செல்கிறார்கள். அப்படி வாங்கிச் செல்லும் கோழிக்குஞ்சுகள் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதால் அவர்கள் தொடர் வாடிக்கையாளர்களாகவே மாறி விடுகின்றனர். தற்போது சோனாலி கோழிகளை ஒரு நாள் கோழிக் குஞ்சுகளாக ரூ.50க்கும், ஒரு மாத சோனாலி கோழிக் குஞ்சுகளை ரூ.100க்கும், 45 நாள் சோனாலி கோழிக்குஞ்சுகளை ரூ.130க்கும் விற்பனை செய்து வருகிறேன். பெருவிடைக் கோழிகளை ஒரு நாள் கோழிக் குஞ்சுகளாக ரூ.100க்கும், ஒரு மாத கோழிக்குஞ்சுகளை ரூ.250க்கும், 55 நாள் கோழிக் குஞ்சுகளை ரூ.300க்கும் கொடுத்து வருகிறேன். வான்கோழியை ஒரு நாள் கோழிக்குஞ்சுகளாக ரூ.100க்கும், 1 மாத கோழிக்குஞ்சுகளை ரூ.220க்கும், 45 நாள் கோழிக்குஞ்சுகளை ரூ.250க்கும் விற்பனை செய்கிறோம். மொத்தமாக ஒரு வருடத்திற்கு 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 கோழிக்குஞ்சுகள் வரை விற்பனை செய்கிறேன். இதன்மூலம் சுமார் ரூ.14 லட்சம் வருமானம் கிடைக்கிறது. இதில் ரூ.2 லட்சம் வரை செலவாகும். செலவு போக ரூ.12 லட்சம் லாபம் கிடைக்கும்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
சரவணகுமார்: 90037 74795.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி