கலக்கல் வருமானம் பார்க்கும் காரமடை விவசாயி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான காரமடை, புங்கம்பாளையம், வெள்ளியங்காடு, தோலம்பாளையம், சிறுமுகை, லிங்காபுரம், பாலப்பட்டி, வச்சினம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழை சாகுபடி பிரதான சாகுபடியாக இருந்து வருகிறது. இத்தகைய வாழையால் இந்தப் பகுதி விவசாயிகள் குறிப்பிட்ட அளவில் வருமானம் பெற்று வருகிறார்கள். அதேவேளையில் தொடர்மழை, சூறாவளிக்காற்று உள்ளிட்ட பல்வேறு இயற்கைப் பேரிடர்கள் நிகழும் சமயங்களில் கடுமையான சிக்கலை விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற சூழல்களில் விவசாயிகளை நிச்சயம் காப்பாற்ற ஒரு வழி இருக்கிறது. அது மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதுதான். வாழையில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் தயாரித்து மாதம் சுமார் ரூ.1.5 லட்சம் வரை வருமானம் ஈட்டலாம் என்கிறார் காரமடை அடுத்துள்ள பெள்ளாதி அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் சம்பத்குமார் என்ற விவசாயி.

டிப்ளமோ இன் டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்துள்ள சம்பத்குமாரின் குடும்பம் பாரம்பரியமாக விவசாயத்தில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி இவருக்கும் தனது பள்ளிப்பருவத்தில் இருந்தே விவசாயத்தில் ஈடுபாடு. இதனால் இவருக்கு 30 ஆண்டு அனுபவம் இருக்கிறது. தந்தையுடன் விவசாயத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவரது தந்தை இறந்து விடவே இப்போது முழுநேர விவசாயியாக மாறிவிட்டார். இவருக்குச் சொந்தமாக 9 ஏக்கர் நிலம் இருக்கிறது. கூடுதலாக 11 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்து வருகிறார். சீசனுக்கு ஏற்ப கத்தரி, மிளகாய், பாகற்காய், புடலங்காய் போன்ற பயிர்களைப் பயிரிட்டு வரும் சம்பத்குமார் அந்தப் பயிர்களை முழுக்க முழுக்க இயற்கை முறையில் விளைவித்து வருகிறார். இதில் வாழையை மதிப்புக்கூட்டி பல்வேறு பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறார். இதன்மூலம் மாதத்திற்கு குறைந்தது ரூ.1 லட்சம் வருமானம் பார்க்கிறார்.

இவரைச் சந்தித்துப் பேசினோம்.“ விவசாயத்தில் எப்போதும் அதிக சவால்கள் இருக்கும். சவால்களை சமாளித்துதான் நாம் வெற்றி பெற வேண்டும். விவசாயத்தில் பெரும்பாலும் சந்தைப்படுத்துவது முக்கியமானது. அதில்தான் நமது உழைப்புக்கான அங்கீகாரம் இருக்கிறது. அதை நாம் சரியாக செய்ய வேண்டும். இதற்கு மதிப்புக்கூட்டுதல்தான் சிறந்த தீர்வாக இருக்க முடியும். ஒரு பொருளை மதிப்புக்கூட்டினால் நிச்சயம் லாபம் கிடைக்கும் என்பதை விட பல மடங்கு லாபம் கிடைக்கும் லாபம் கிடைக்கும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் நான் வாழையை மதிப்புக்கூட்டு சந்தைப்படுத்துகிறேன்’’ என சந்தைப்படுத்துதலில் முக்கியத்துவம் குறித்து பேசிய சம்பத்குமார் மேலும் தொடர்ந்தார்.

நான் எந்தப் பயிரைச் சாகுபடி செய்தாலும் முதலில் நிலத்தை நன்றாக பக்குவப்படுத்துவேன். அதற்காக தொழுவுரமிட்டு பல்வேறு தானியப்பயிர்களைச் சாகுபடி செய்வேன். அந்தப் பயிர்களை 40 முதல் 50 நாட்களில் (அதாவது பூ பூக்கும் பருவத்தில்) நிலத்தில் மடக்கி உழவு செய்வேன். வாழைக்கும் அப்படித்தான். இவ்வாறு மடக்கி உழவு செய்த நிலத்தில் 6 அடிக்கு ஒரு கன்று என வாழைக்கன்றுகளை ஊன்றுவோம். வரிசைக்கு வரிசை 13 அடி இடைவெளி விடுவேன். 6 அடியில் ஒரு கன்று நடும்போது அதைச்சுற்றி முக்கோண வடிவில் ஒரு அடி இடைவெளியில் அடர்நடவு முறையில் 3 கன்றுகளை நடுவோம். இதன்மூலம் முதல் ஆண்டில் ஒருமுறையும், இரண்டாவது ஆண்டில் ஐந்து முதல் ஆறு முறையும் வாழைத்தார்களை அறுவடை செய்வோம். இடையில் தக்காளி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து அதன்மூலமும் வருமானம் பார்ப்போம்.

நேந்திரன், கதலி உள்ளிட்ட வாழை ரகங்களை ஆறு அடிக்கு ஒன்று என்றே நடவு செய்வோம். தேன் வாழை, செவ்வாழை, பூவன், மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்களை மேற்சொன்ன அடர் நடவு முறையில் நடவு செய்வோம். இவ்வாறு அடர் நடவு செய்வதன் மூலமாக வாழையடி வாழையாக என்பது போல் ஐந்து ஆண்டுகளுக்கு வாழை அறுவடை செய்யலாம். வாழை சாகுபடியில் பெரும்பாலும் ஒருமுறை தார் வெட்டி விட்டால் மரத்தை அழித்துவிடுவார்கள். நாங்கள் அதுபோல் செய்வதில்லை. வாழைத்தார்களை வெட்டிய பிறகு அதில் இருந்து வடியும் நீர், அருகில் வளர்ந்துவரும் வாழைக்கு நல்ல உரமாக இருக்கும்.

இதனால் தார் நல்ல திரட்சியாக வருகிறது. நுண்ணுயிர் உரங்களான பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனஸ் விரிடி, வேப்பங்கொட்டைக் கரைசல், பூண்டுக் கரைசல், வேப்பம் புண்ணாக்கு உள்ளிட்டவற்றையும் வாழை மரங்களுக்கு பயன்படுத்தி வருகிறோம். தோட்டத்தில் வளர்த்து வரும் தென்னை மரங்களின் தேங்காய்களை பறித்து, அந்த தேங்காய் நீருடன் கரும்புச் சக்கரை, மாட்டுக்கோமியம், ஆட்டுக்கோமியம் உள்ளிட்டவற்றையும் உரமாக பயன்படுத்திவருகிறேன்.

இந்த முறையில் விளைவிக்கப்படும் வாழைத்தார்கள் திரட்சியாக இருந்தபோதும், இவற்றை நான் வியாபாரிகளுக்கு கொடுப்பதில்லை. அதற்குப் பதிலாக வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்துவிடுவேன். மீதமாகும் வாழைத்தார்களில் இருந்து எடுக்கப்படும் காய் மற்றும் பழங்களை வைத்து டிரை ஃப்ரூட்ஸ், ஜாம், பவுடர், சிப்ஸ் உள்ளிட்ட மதிப்புக்கூட்டுப் பொருள்களாக தயாரித்து விற்பனை செய்கிறேன். இங்குள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து காரமடையில் அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழு என்ற குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குழுவில் உள்ள விவசாயிகள் வாடிக்கையாளருக்கு விற்பனை செய்தது போக மீதமுள்ள காய் மற்றும் பழங்களை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து வேளாண் உதவிகளையும், ஆலோசனைகளையும் காரமடை வேளாண் அறிவியல் நிலைய தலைமை விஞ்ஞானி குமார வடிவேலு தலைமையிலான விஞ்ஞானிகள் வழங்கி வருகிறார்கள்.

வேளாண்துறை சார்பாக வாழையில் இருந்து மதிப்புக்கூட்டுப் பொருள்களை உற்பத்தி செய்யத் தேவையான இயந்திரங்களையும் எங்களுக்கு மானியத்துடன் வழங்கி ஊக்குவித்து வருகிறார்கள். இந்த மதிப்புக்கூட்டுப் பொருட்களில் நார்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு வகை சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோய் உள்ள நோயாளிகள் கூட இதனை தாராளமாகப் பயன்படுத்தலாம். வாழையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு வரும் மதிப்புக்கூட்டுப் பொருள்களை கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக விடுதியில் விற்பனை செய்ய கோவை வேளாண் அறிவியல் நிலையம் ஏற்பாடு செய்திருக்கிறது. மேலும் உழவர் சந்தைகளிலும் விற்பனை செய்ய மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் அனுமதி அளித்திருக்கிறார்கள்.

தற்போது அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் குழு மற்றும் சில அமைப்புகள் இணைந்து மதிப்புக்கூட்டுப் பொருள்களை கடைகளில் வைத்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்துவருகிறார்கள். அதற்கான வேலைகள் முழுவீச்சில் நடந்துவருகிறது. திருமணம், கல்லூரி விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின்போது வாழை மதிப்புக்கூட்டுப் பொருட்களுக்கான ஆர்டர்கள் வருகின்றன. தேவைக்கேற்ப அவர்களுக்கு மொத்தமாகவும் விற்பனை செய்து வருகிறோம்.

இயற்கை விவசாயம் செய்யத் துவங்கிய மூன்று ஆண்டுகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.1 முதல் 1.5 லட்சம் வரை மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்வதன் மூலமாக வருவாய் வருகிறது. இதை இன்னும் 2 ஆண்டுகளில் பலமடங்காகப் பெருக்கிக் காட்டுவோம்’’ என நம்பிக்கை பொங்க பேசுகிறார்.
தொடர்புக்கு:
சம்பத்குமார்: 95971 16339.

Related posts

அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை பற்றி அவதூறாக பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது

சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்: கோயில்களில் திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு

பிஎன்ஒய் மெலன் வங்கி அலுவலர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: வங்கி சேவைகள் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை