கலக்கலான லாபம் தரும் கண்வலிக்கிழங்கு!

நமது கிராமப் பகுதிகளில் உள்ள ஓடைகளிலும், வனாந்திரங்களிலும் வேலிப்பயிராக வளர்ந்து நிற்கும் ஒரு செடி, மற்ற செடிகளைக் காட்டிலும் மிக அழகானதாக காட்சியளிக்கும். அதிலும் மஞ்சளும், சிவப்பும் கலந்த அதன் பூக்கள் காண்போரை மயக்கும் வகையில் பூத்து நிற்கும். இந்தப் பூக்களுக்கு நமது இலக்கியத்திலும், பண்பாட்டிலும் முக்கிய இடம் வழங்கப்பட்டு இருக்கிறது. செங்காந்தள் என்ற பெயர் கொண்ட இந்த மலர் நமது மாநில மலராக போற்றப்படுகிறது. பலர் இதன் மகத்துவத்தை உணராமலே இருந்து வருகிறார்கள். மருத்துவக் குணம் கொண்ட இந்தச் செடிகளை சில விவசாயிகள் வணிக ரீதியில் பயிரிட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள். இந்தச்செடியின் அடிப்பாகத்தில் உள்ள கிழங்கை கண்வலிக்கிழங்கு என அழைப்பார்கள். இதனால் இதை கண்வலிக்கிழங்குச் செடி என்றே அழைக்கிறார்கள். தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், சேலம், திருப்பூர், கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படும் இந்தப் பயிரை பஞ்சு மில்கள் மிகுந்த ராஜபாளையத்தில் சீரிய முறையில் பயிரிட்டு லாபம் பார்த்து வருகிறார் குமரேசன் என்ற விவசாயி.

குமரேசன் வசிப்பது ராஜபாளையம் நகரத்தில். ஆனால் அவரது நிலம் தென்காசி செல்லும் சாலையில் சற்றே உள்ளொடுங்கி காணப்படும் தெற்கு வெங்காநல்லூர் என்ற கிராமத்தில். ராஜபாளையத்தில் இருந்து தினமும் தெற்கு சென்று கண்வலிக்கிழங்குச் செடிகளை கண் போல பராமரித்து வருகிறார். ஒரு மாலை வேளையில் தெற்கு வெங்காநல்லூரில் உள்ள அவரது வயலுக்குச் சென்றோம். சுற்றிலும் மேற்குத் தொடர்ச்சி மலை சூழ்ந்திருக்க, அருகில் உள்ள வயல்களில் வேறு வேறு பயிர்கள் பயிரிடப்பட்டிருக்க, குமரேசனின் நிலத்தில் மட்டும் கண்வலிக்கிழங்குச் செடிகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. நிலத்தைச் சுற்றிக் காண்பித்தவாறே குமரேசன் பேச ஆரம்பித்தார். “ எங்கள் பகுதியில் நெல், பருத்தி போன்ற பயிர்களைத்தான் சாகுபடி செய்வோம். இதில் வேறு ஏதாவது மாற்றுப் பயிரை சாகுபடி செய்யலாமே என கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தோம். அப்போது கண்வலிக்கிழங்கு குறித்து கேள்விப்பட்டு ஒட்டன்சத்திரம், ஜெயங்கொண்டம் பகுதிகளுக்கு சென்று அந்தப் பயிர்களை சாகுபடி செய்யப்பட்ட வயல்களைப் பார்வையிட்டோம்.

இந்தப் பயிர் வறட்சியான செம்மண்ணில்தான் நன்றாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கும் நமது பகுதியில் வராது என நினைத்து அப்போது சாகுபடி செய்யாமல் விட்டுவிட்டோம். ஆனாலும் இதை சாகுபடி பார்க்கலாமே என அடிக்கடி நினைப்பேன். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது அரை ஏக்கர் நிலத்தில் பரீட்சார்த்த முறையில் கண்வலிக்கிழங்கை சாகுபடி செய்தேன். அந்த சமயத்தில் மழை குறைவாக பெய்ததால் நல்ல மகசூல் கிடைத்தது. விலையும் நன்றாக இருந்தது. நல்ல லாபம் கிடைத்ததால் மேலும் 1 ஏக்கரில் பயிர் செய்தேன். அதிலும் லாபம் கிடைத்ததால் 2 ஏக்கரில் கூடுதலாக பயிர் செய்தேன். சில நேரங்களில் மழை அதிகமாக பெய்து விளைச்சல் பாதித்தது. இந்தச் செடிக்கு தண்ணீர் தேங்கி நின்றால் ஆகாது. கிழங்கு அழுகல் நோய் வந்து செடி பாதித்து, விளைச்சல் குறையும். இருந்தபோதும் அடுத்தடுத்த ஆண்டுகளில் சீதோஷ்ண நிலை மாறி விளைச்சல் நன்றாக இருக்கும். ஒருமுறை கிழங்கு நட்டால் 5 ஆண்டுகளுக்கு பலன் கொடுக்கும். விதைக்கிழங்கின் விலை அதிகம். பந்தல் அமைக்கவும் செலவு ஆகும். எப்படியும் ஒருமுறை பயிரிட்டால் 5 லட்சந்தாண்டி செலவு பிடிக்கும். இதனால் மாற்றுப்பயிரை வைக்க முடியாது. இப்போது எனக்கு ஒரு ஆண்டில் விளைச்சல் குறைந்தாலும் மறு ஆண்டில் நன்றாக இருக்கிறது. இதனால் தொடர்ந்து பயிரிடுகிறேன்’’ என தனது வயலுக்கு கண்வலிக்கிழங்கு வந்த கதையைப் பகிர்ந்துகொண்ட குமரேசனிடம், அதன் சாகுபடி விவரங்கள் குறித்து கேட்டோம்.

“ கண்வலிக்கிழங்கைப் பயிரிட நிலத்தை நன்றாக 5 முறை ஏர் ஓட்டி, கடைசி உழவின்போது குப்பை எரு போடுவோம். பின்பு 5 அடி இடைவெளிகளில் மேட்டுப்பாத்தி அமைத்து, அதில் அரை அடிக்கு ஒன்று என விதைக்கிழங்கு ஊன்றுவோம். 2 அங்குலம் ஆழத்திற்கு லேசான குழியெடுத்து அதில் கிழங்கை நட்டு மண்ணை மூடுவோம். நடவுப்பணியை ஆடி மாதம்தான் செய்ய வேண்டும். அதுதான் பூக்கள் வர, காய்ப்பு காய்க்க தோதாக இருக்கும். ஆடி மாதத்தில் விதை நட்டால் ஆவணியில் செடிகள் முளைத்து வளர ஆரம்பிக்கும். கார்த்திகை மாதத்தில் பூக்கள் பூக்கும். இந்த மாதத்தில் பூப்பதால் இதை கார்த்திகைப்பூ என்றும் சொல்வார்கள். நிலத்தில் களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சொட்டுநீர்ப்பாசனம் சிறந்தது. தண்ணீர் தேங்கக்கூடாது. காய வைத்து காய வைத்து பாசனம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் வாரத்திற்கு ஒருமுறை பாசனம் செய்தால் போதும். வெயில் காலமென்றால் 3 நாளுக்கு ஒரு பாசனம் போதும். இது ஒரு விஷச்செடி என்பதால் பூச்சிகள் வராது. உரமிடுவது அவசியம். 19:19:19 உரத்தை சொட்டுநீரில் 4 கிலோ கலந்து விடுவோம். வாரம் ஒருமுறை உரமிடுவோம். ஒரு வாரம் இந்த உரத்தைக் கொடுத்தால் அடுத்த வாரத்தில் 20:20:20 உரம் கொடுப்போம். அதற்கடுத்த வாரத்தில் பொட்டாசியம் நைட்ரேட் கொடுப்போம். பூக்கள் பூத்து காய் காய்க்கும் சமயத்தில் மொக்குப்புழு வரும். அதற்கு கோரோஜன், டெலிகேட் போன்ற மருந்து களைத் தெளிப்போம். காய் முற்றும் வரை 10 நாளுக்கு ஒருமுறை சைட்டோசைம் வளர்ச்சியூக்கியை ஸ்பிரே செய்வோம். பூஞ்சாண நோய் வந்தால் கார்பண்டாசிம், மேங்கோசெப் கலந்து தெளிப்போம். இதுபோல் பராமரித்து வரும் நிலையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காய்கள் காய்த்து, முற்றி வெடிக்க ஆரம்பிக்கும். காய்களுக்குள் இருக்கும் விதைதான் நமக்கு மகசூல். அதை சரியான பதத்தில் அறுவடை செய்ய வேண்டும். வெடித்து கீழே கொட்டிவிடக் கூடாது.

வெடித்தவுடனே பறித்து வந்து ஈரம் காயும் அளவுக்கு 4 நாட்களுக்கு காய வைப்போம். அந்த சமயத்தில் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். இதற்கு நிலையான விலை இல்லை. ஆண்டுதோறும் ஒரு விலை இருக்கும். கடந்த ஆண்டில் ஒரு கிலோ ரூ.1500க்கு விற்பனையானது. இப்போது ரூ.3000 என வாங்கப்படுகிறது. சராசரியாக 1500 என விலை கிடைக்கும். ஒரு ஏக்கரில் 200 கிலோ விதைகள் மகசூலாக கிடைக்கும். இதன்மூலம் ரூ.3 லட்சம் வருமானம் கிடைக்கும். முதல் ஆண்டில் சாகுபடி செய்யும்போது அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை செலவாகும். இரண்டு ஆண்டுகளின் மகசூல் நமக்கு செலவைத்தான் ஈடுகட்டும். அதற்கடுத்த 3 ஆண்டுகளில் முழுக்க முழுக்க லாபம்தான். இதில் கூடுதல் விலை கிடைக்கும்போது முதல் 2 ஆண்டுகளிலேயே கூட லாபத்தைப் பார்த்துவிடலாம்’’ என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
தொடர்புக்கு:
குமரேசன்: 94430 13632.

*கண்வலிக்கிழங்கு சாகுபடியில் கைக்களைதான் எடுக்க வேண்டும். மண்வெட்டி பயன்படுத்தினால் கிழங்கு பாதிப்படைய வாய்ப்பு ஏற்படும். இதனால் செடிகள் சேதமாகிவிடும்.

*கண்வலிக்கிழங்குச்செடி மிக மெல்லிய செடி. காற்றில் ஒடிந்துவிட வாய்ப்பு அதிகம். இதனால் இரண்டரை அடி உயரம், 3 அடி அகலத்தில் பந்தல் அமைத்து அதில் சணல் மூலம் செடிகளை கட்டி வைக்க வேண்டும்.

*கண்வலிக்கிழங்கு விதையில் இருந்து புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இதற்காக இந்த விதைகளை வெளிநாடுகளுக்கு சில நிறுவனங்கள் ஏற்றுமதி செய்கின்றன.

*பந்தல் அமைப்பது, விதைக்கிழங்கு வாங்குவது என கண்வலிக்கிழங்கு சாகுபடியில் செலவு அதிகம் பிடிக்கும். ஆனால் ஒருமுறைதான் இந்த செலவு. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த செலவு இல்லை. ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் லாபம் பார்க்கலாம்.

Related posts

சென்னை, தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றம்: மாநகராட்சி அறிக்கை