பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், ஓராண்டாக ஆவணங்களை கிடப்பில் போட்ட துணைவேந்தரை கண்டித்து உயர்கல்வித்துறைக்கு ஆசிரியர் சங்கம் கடிதம்..!!

சேலம்: பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், ஓராண்டாக ஆவணங்களை கிடப்பில் போட்ட துணைவேந்தரை கண்டித்து உயர்கல்வித்துறைக்கு ஆசிரியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. சேலம் கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் துணைவேந்தராக 2021ஆம் ஆண்டு முதல் ஜெகநாதன் பணியாற்றி வருகிறார். இவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக பணியாளர்கள் முன் வைத்தனர். குறிப்பாக, தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிதிகளை மோசடி செய்ததாக இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் புகாரின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் கருப்பூர் காவல்துறையினரால் ஜெகநாதன் கைது செய்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து, துணைவேந்தர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்யப்படாமல் துணை வேந்தராகவே தொடர்ந்தார். இதனையடுத்து, அவர் மீது தொடர்ந்து நிதி முறைகேடு புகார்கள் எழுந்து வந்ததால், ஜெகநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டுமென தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதை தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக் காலத்தை அடுத்த ஆண்டு மே 19ஆம் தேதி வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஜெகநாதனின் பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையாகியது. இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு வைத்தது. அதில், பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், ஓராண்டாக ஆவணங்களை கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. துணைவேந்தரின் நடவடிக்கையை கண்டித்து ஆவணங்களுடன் உயர்கல்வித் துறைக்கு ஆசிரியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிகளை பல்கலை கழக ஆசிரியர்களுக்கு வழங்காததற்கும் ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பல்கலை கழகத்தில் உள்ள 40 பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கடந்த ஓராண்டுக்கு முன் நேர்காணல் நடத்தப்பட்டது. கடந்த செப்டம்பரில் சிண்டிகேட்டில் வைத்து அதற்கு ஒப்புதலும் பெறப்பட்டது. பெரியார் பல்கலை. பதிவாளர் தேர்வில் விஸ்வநாதமூர்த்தியை பதிவாளராக்க சிண்டிகேட் ஒப்புதல் வழங்கவில்லை. சிண்டிகேட் ஒப்புதல் தராமல் விஸ்வநாதமூர்த்தி பதிவாளராக உள்ளது. ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்துக்கு எதிரானது. ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் உள்ள ஒருவரை பொறுப்பு பதிவாளராக நியமிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Related posts

மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்; நாளை ஒன்றிய பட்ஜெட் தாக்கல்.! 4 மாநில பேரவை தேர்தல் வருவதால் சலுகைகள் எதிர்பார்ப்பு

தமிழ்நாட்டை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா ஒன்பது குட்டிகளை ஈன்றுள்ளதாக வண்டலூர் பூங்கா அறிவிப்பு