மிரட்டல்களை தொடர்ந்து குடியிருப்பு சுவற்றில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: டெல்லி போலீசார் வழக்குபதிவு


புதுடெல்லி: தலைவர்களுக்கு அடிக்கடி மிரட்டல்களை விடுக்கும் காலிஸ்தான் தீவிரவாத தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு ஆதரவாளர்கள், டெல்லி குடியிருப்பில் சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுதியுள்ளனர். தலைநகர் டெல்லி சந்தர் விஹார் பகுதி குடியிருப்பு சுவர்களில், காலிஸ்தானுக்கு ஆதரவான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. அந்த வாசகத்தில், ‘குடியரசு தினமான வரும் ஜனவரி 26ம் தேதி டெல்லியில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட வேண்டும்’ என்று காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு அழைப்பு விடுக்கும் வகையிலான கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அதையடுத்து குடியிருப்பு சுவர்களில் எழுதப்பட்ட வாசகங்களை அழித்த போலீசார், மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக குர்பத்வந்த் சிங் பன்னு வெளியிட்ட வீடியோவில், ‘தனி காலிஸ்தான் நாடு கோரிக்கை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் காலிஸ்தான் கொடிகள் ஏற்றப்பட வேண்டும். எனது ஆதரவாளர்கள் இதனை செய்வார்கள். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை கொல்வோம். குடியரசு தினத்தன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானை எனது ஆதரவாளர்கள் தாக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தான்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை