குழந்தைகள் தின விழாவில் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

காஞ்சிபுரம்: புள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாநில பெண் குழந்தைகள் தினவிழாவில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட புள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் `ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில், மாநில பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி, பெண் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக வாலாஜாபாத் ஒன்றிய மேலாளர் கீதா வரவேற்புரையாற்றினார். `ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ முதுநிலை திட்ட மேலாளர் சரவணன், மாநில பெண் குழந்தைகள் தின முக்கியத்துவத்தையும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்டம் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

அப்போது மாணவிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகத்தை முழக்கமிட்டு, பலூனை வானத்தில் பறக்கவிட்டு, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மூலம் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய ஒன்றியங்களில் மாநில பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு, பல்வேறு விதமான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, மாணவிகளின் பாதுகாப்பு குறித்தும், அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், தற்பொழுது பொதுத்தேர்வு நெருங்கி வருவதால், கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்த்து கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டும் என்றும் மாணவ – மாணவிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றிய மேலாளர் நிஷா நன்றி கூறினார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு