புதுப்பாக்கம் அரசு சட்டக்கல்லூரியில் மாதிரி நீதிமன்ற போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு: உயர்நீதிமன்ற நீதிபதி வழங்கினார்


திருப்போரூர்: புதுப்பாக்கம் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்ற தேசிய மாதிரி நீதிமன்ற போட்டியில் வென்றவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகளை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் வழங்கினார். புதுப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில், தேசிய மாதிரி நீதிமன்ற போட்டிகள் கடந்த 8ம் தேதி தொடங்கின. இந்த போட்டிகளில் தமிழ்நாடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள சட்டப் பல்கலைக்கழகங்கள் மற்றும் சட்டக்கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இதற்கான நிறைவு விழா நிறைவு விழாவும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் விழாவும் நேற்று நடைபெற்றது.

சட்டக்கல்வி இயக்கக இயக்குநர் விஜயலட்சுமி இதில் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜெயகௌரி வரவேற்றார். இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் பங்கேற்று, மாதிரி நீதிமன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி பாராட்டினார். போட்டியில் முதலிடத்தை கோவை அரசு சட்டக் கல்லூரியும், 2ம் இடத்தை வேலூர் அரசு சட்டக் கல்லூரியும் பிடித்தது. பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன், சென்னை மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன், சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் அம்புரோஸ், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக டீன் முருகதாஸ், கிரசண்ட் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் விஜயலட்சுமி ராமலிங்கம், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் உதவிப் பேராசிரியர் தேவி நன்றி கூறினார்.

Related posts

வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிவு