பொது சுவர்களில் ஓவியங்கள் – கலக்கி வரும் சமூக சேவகர் ப்ரியா ஜெமிம்மா..!!

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது” என்கிற திருக்குறளுக்கேற்ப எந்தப் பிரதிபலனும் கருதாமல் ஏழை எளியோருக்கு தேவையான ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் ஜியோ பவுண்டேஷன் அமைப்பினை சேர்ந்த பிரியா ஜெமிம்மா. கல்வி மற்றும் மருத்துவ சேவைகளோடு, பெண் கல்வி, சுகாதாரம், அவர்களின் வேலைவாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை பின்தங்கிய கிராமப்புற பெண்களுக்கு ஏற்படுத்தி தருகிறார். சென்னையின் பொது இடங்களில் உள்ள சுவர்களை அழகுபடுத்துவதில் இவரின் பங்கு ஏராளம். அரசு பள்ளிகள் முதல் இரயில் நிலையங்கள் வரை காணும் இடமெங்கும் இவரது சுவரோவியங்கள் காண்போரை வியப்படைய செய்கிறது. ஏழைப் பெண்களுக்காக இலவச தொழிற்பயிற்சிகளை நடத்தி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்து தரும் சமூக சேவகி பிரியா ஜெமிம்மா அவர்களை நேர்காணல் செய்தபோது..

சேவைகள் மீதான ஆர்வம் உங்களுக்கு ஏற்பட்டது எப்போது?

சிறுவயதிலேயே எனது தாய் தந்தை இருவரையும் இழந்துவிட்டேன். பிறகு நானும் எனது தம்பியும் ஆசிரமத்தில்தான் வளர்ந்தோம். அங்கேயே தங்கி எனது பள்ளிப்படிப்பினை முடித்தேன். அதன் பிறகு DTP யில் வேலை செய்தேன். பிறகு பெண்கள் விடுதியில் சேர்ந்து கல்லூரிப் படிப்பினை முடித்தேன். படித்து முடித்தபின் வேலையும் கிடைத்தது. அதன் பிறகு பணியில் சேர்ந்து சம்பாதிக்க துவங்கிய போது எனக்கு கிடைத்த ஆதரவு மற்றும் உதவிகள் என்னை மாதிரி உள்ள பல பேருக்கும் கிடைக்க வேண்டும் என நினைத்து துவங்கியது தான் இந்த சேவை அமைப்பு. எங்களது பவுண்டேஷன் மூலமாக தற்போது பல்வேறு இலவசநலத் திட்டங்களுடன் கிராமப்புற, பழங்குடியின ஏழை மக்களுக்கு பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகிறோம்.

உங்களது சுவர் ஓவியங்கள் குறித்து…

எங்களின் சமூக அக்கறையின் ஒரு பகுதியாக எங்கள் ஜியோ இந்தியா பவுண்டேஷன் சார்பில் பொது இடங்களில் உள்ள சுவர்களில் ஆங்காங்கே வரையப்பட்ட ஓவியங்கள் ஏராளம். எங்களது பவுண்டேஷன் மூலம் அந்த சுவர்களை அழகுபடுத்தும் பல்வேறு ஓவியங்களை வரைந்து வருகிறோம். இதுவரை 68 அரசு பள்ளிகளில் உள்ள சுவர்களில் ஓவியங்கள் வரைந்துள்ளோம். அதே போல் 12 மெட்ரோ இரயில் நிலைய சுவர்களிலும் அழகுற ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளோம். பெசண்ட் நகர் கடற்கரைப் பகுதியில் உள்ள சுவர்களில் எங்கள் பவுண்டேஷனால் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அதேபோன்று வேளச்சேரி முதல் நங்கநல்லூர் வரை உள்ள 83 பில்லர்களில் எங்களது சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த சுவரோவியங்களை பார்த்து பலரும் எங்களை பாராட்டி வருகின்றனர்.

உங்களது கிராமப்புற சேவைகள் குறித்து சொல்லுங்கள்?

எங்களது பவுண்டேஷன் மூலம் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் உள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறோம். ஆதரவற்ற பெண்களுக்கு தள்ளுவண்டி கடைகளை வைத்து தந்துள்ளோம். மேலும் மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கு என வொக்கேஷ்னல் தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். அதன் மூலம் பயனடைந்த பெண்கள் ஏராளம். எங்களது கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலவச தையற்கலை பயிற்சிகள், கணினி பயிற்சிகள், அழகுக்கலை போன்ற தொழிற்பயிற்சிகளை அளித்து சுய வேலைப்பினை உருவாக்கி தருகிறோம். இதே போன்று மலைக் கிராம பழங்குடியின மக்களுக்கும் தொழிற்பயிற்சிகளை அளித்து சுய வேலைவாய்ப்பு வசதிகளை செய்து தருகிறோம். அதேபோல் கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். எங்களது பவுண்டேஷன் மூலம் நர்சிங் போன்ற கல்விகளையும் அவர்களுக்கு வழங்கி உள்ளோம்.

கல்வி குறித்த உங்கள் சேவைகள் என்ன?

எங்களது கல்விச் சேவை 2017 ஆண்டு ஒரே மாணவருடன் துவங்கியது. தற்போது 600 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவி வருகிறோம். மேற்படிப்பு படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கி அவர்கள் படிக்க விருப்பமுள்ள படிப்பினை தேர்ந்தெடுத்து படிக்க, தேவையான உதவிகளை எங்கள் ஜியோ இந்தியா பவுண்டேஷன் மூலம் நிறைவேற்றி தருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மாணவர்களுக்கு 100% இலவச கல்வி உதவி மற்றும் தங்கும் இடம் உணவு அனைத்தும் அவர்கள் படிப்பை முழுவதுமாக முடிக்கும் வரை இலவசமாக கிடைக்க வழி வகை செய்து வருகிறோம். மாணவர்கள் பகுதிநேர வேலை பார்க்கவும் அதற்கேற்ற ஊதியங்கள் கிடைக்கவும் போதிய ஏற்பாடுகளை செய்து தருகிறோம். எங்களது பிள்ளைகளில் 156 பேர் பிரபல கார்பரேட் கம்பெனிகளில் வேலைகளில் உள்ளனர். தற்போது 453 பிள்ளைகள் 12 வெவ்வேறு கல்லூரிகளில் எங்களால் படித்து வருகின்றனர். மேலும் இந்த வருடம் 250 மாணவர்களுக்கு உதவ திட்டமிட்டிருக்கிறோம்.

உங்களது மற்ற சேவைகள் குறித்து..

கோவிட் காலத்தில் எங்களது அமைப்பின் மூலம் ஆங்காங்கே நாங்கள் உணவுகள் வழங்கியது பலரது பாராட்டுகளையும் பெற்று தந்தது. பல்வேறு ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக மளிகைப் பொருட்களை வாங்கித் தந்துள்ளோம். ஒரு மருத்துவமனைக்கு தேவையான ஆக்ஸிஜன் ப்ளாண்ட் வசதியை கூட எங்களது பவுண்டேஷன் மூலம் செய்து கொடுத்தோம். இதனை தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம்களை எங்களது பவுண்டேஷன் மூலம் நடத்தி வருகிறோம். அதனுடன் பல்வேறு மருத்துவ சேவைகளையும் இலவசமாக செய்து வருகிறோம். இதனால் ஏராளமான ஏழை எளிய மக்கள் எங்களது இலவச மருத்துவ சேவைகள் மூலம் பெரும்பயன் பெற்றுவருகிறார்கள். மழை, வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கைப் பேரிடர்களின் போதும் இலவச உணவினை தயாரித்து வழங்கி வருகிறோம். வீடில்லாத சாலையோர ஏழை மக்களுக்கும் இலவச உணவினை தயாரித்து வினியோகம் செய்து வருகிறோம். மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு தேவையான இலவச புத்தகங்களையும் வழங்கி வருகிறோம். அதேபோன்று முதியோர் இல்லங்களுக்கு தேவையான மருந்துகளையும் கொடுத்து வருகிறோம்.

இலவச நாப்கின்கள் மற்றும் வென்டிங் மெஷின்கள் குறித்து..

எங்கள் அமைப்பின் மூலம் பல கிராமப்புற பெண்களுக்கு மாதவிடாய் சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கிராமப்புற பெண்களுக்கு இதுவரை 3.5 லட்சம் சானிடரி நாப்கின்கள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் சானிடரி நாப்கின்களை பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதே போன்று 250 சானிடரி வென்டிங் மிஷினையும் இலவசமாக வழங்கியுள்ளோம். அவையெல்லாம் சென்னை மெட்ரோ இரயில் நிலையத்திலும், தென்னக இரயில்வே நிலையத்திலும், சென்னை மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களிலும், ஒன்பது அரசு மருத்துவமனையிலும், முக்கியமாக பெண்களுக்கான சிறை களிலும் இந்த சானிடரி வென்டிங் மிஷின்களை வழங்கி உள்ளோம்.

உங்களது சேவைகளுக்கு கிடைத்த கௌரவங்கள் பாராட்டுகள் குறித்து சொல்லுங்கள்?

எனது சேவைகளை பாராட்டி பல்வேறு அமைப்புகளும் பல்வேறு விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. அப்துல் கலாம் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் “கிரீன் வாலண்டியர்” என்கிற விருதினை வழங்கியது. கலசலிங்கம் கல்லூரி எனக்கு சிறந்த சமூக சேவகர் என்கிற விருதினை வழங்கியது. லார்சன் அன்ட் டர்போ நிறுவனம் லீட் இன் வாலண்டியர் ஆக்டிவிட்டி என்கிற விருதினை வழங்கியதுஅகில உலக தமிழ்ப் பல்கலைக்கழகம் எனக்கு சிறந்த சமூக சேவகர் என்கிற விருதினை வழங்கியது. வேல்ட் யூத் பெடரேஷன் அமைப்பு அப்துல் கலாம் சமூக சேவகர் விருதினை வழங்கியது. அதேபோன்று சிறந்த “வொண்டர் உமன் வாவ்” என்கிற விருதினை வழங்கியது. சிறந்த என்ஜிஓ என்கிற விருதினை பெற்றது பெரும் மகிழ்ச்சி. தான் பெற்ற உதவிகளை மனதில் கொண்டு தன்னைப் போல் பிறரின் துன்பங்களை உணர்ந்து கொண்டு அவர்களுக்கான கல்வி மற்றும் பல்வேறு உதவிகளை செய்துவரும் மோகனப்பிரியாவிற்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் சேர்ந்து தனது சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். சமூக சேவைகளோடு தனது குடும்பத்தின் தேவைகளையும் பூர்த்தி செய்து இரண்டையும் பேலன்ஸ் செய்து கலக்கிவரும் பிரியா ஜெமிம்மாவிற்கு இந்த சமூகத்திற்கு இன்னும் நிறைய நலத்திட்ட உதவிகளை செய்திட வேண்டும் என்கிற ஆசைகள் உண்டு. அதற்கென முறையான திட்டமிடலுடன் ஆர்வமும் முயற்சியுமாக களமிறங்கி உள்ளார். அவரது முயற்சிகள் வெற்றியடைந்து பலருக்கும் அவரது உதவிகள் போய் சேரவேண்டும் என வாழ்த்தி விடை பெற்றோம்.
– தனுஜா ஜெயராமன்

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது