தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு சின்னங்களை பயன்படுத்துவதை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? அரசு அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் ‘G’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், ‘இந்திய அரசு’, ‘தமிழ்நாடு அரசு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலமனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அரசு சின்னங்களையும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசு என்று வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தனியார் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.

இதை கேட்ட தலைமை நீதிபதி, விதிமீறல்களுக்கு எதிராக ஆர்டிஓ தான் விசாரணை கோர முடியும் என்று தெரிவித்தார். இதையடுத்து, மனுவில் கோரிக்கையை திருத்தி மீண்டும் தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள, இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு