தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி வழக்கில் 1,200 பக்க குற்றப்பத்திரிகை: விழுப்புரம் கோர்ட்டில் சிபிசிஐடி தாக்கல்

விழுப்புரம்: தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் நேற்று 1,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி பள்ளி வளாகத்தில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து, மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம், கலவரமாக மாறியதால், தனியார் பள்ளி வளாகம் சூறையாடப்பட்டது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுதொடர்பாக தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, விடுதி வளாகத்தில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகள், மாணவி இறப்பு தொடர்பான ஆய்வக அறிக்கைகள் உள்ளிட்ட 100 ஆவணங்களை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர். அதில், மாணவி கொலைக்கு முகாந்திரம் இல்லையென்றும், தற்கொலைக்கான முகாந்திரம் இருப்பதாகவும், அதேசமயம் பள்ளி நிர்வாகம் விடுதியை முறையாக பராமரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விரைவில் வழக்கை விசாரிக்கும் என்று தெரிகிறது.

Related posts

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு

ஜப்பான் நாட்டின் போனின் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய்