தனியார் நிறுவனம் தொடங்கி மோசடி பெரியார் பல்கலை பதிவாளரின் 250 பக்க இ-மெயில் ஆவணங்கள் ஆய்வு: ஒன்றிய அரசு திட்டத்திலும் நிதி கையாடல்?

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் தொடங்கி மோசடியில் ஈடுபட்ட புகாரில் சிக்கியுள்ள பதிவாளரின் 250 பக்க இ-மெயில் ஆவணங்களை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக நிதியில் மோசடி செய்ததாக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய பதிவாளர் தங்கவேல் மற்றும் 2 பேராசிரியர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த மோசடி தொடர்பாக பல்கலைக்கழக அலுவலகம், வீடுகளில் சோதனை நடத்தி போலீசார் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

தொடர்ந்து, நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூட்டர் பவுன்டேசனுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல், பதிவாளரின் வங்கி லாக்கரும், அவரது மனைவி வெண்ணிலா முன்னிலையில் திறந்து பார்க்கப்பட்டது. இதனிடையே பதிவாளரின் இ-மெயிலை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பூட்டர் பவுண்டேசனுடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், தகவல் பரிமாற்றங்கள், வரவு, செலவு மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகள் என பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பான 250க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட விவரங்களை திரட்டி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் இளைஞர்களுக்கான ஒன்றிய அரசின் திறன்மேம்பாட்டு திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள் இதுகுறித்து கூறியதாவது: சேலம் பல்கலைக்கழகத்தில் தீன்தயாள் உபாத்தியாயா கிராமின் கவுசல்யா யோஜனா என்ற திட்டம் கடந்த 2021ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமப்புற இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காக ரூ.2.66 கோடி மதிப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் தலைவராக மோசடி புகாரில் சிக்கியுள்ள பதிவாளர் தங்கவேலு இருந்தார். பூட்டர் பவுண்டேசன் விவகாரத்தில் புரோக்கராக செயல்பட்டதாக கூறப்படும் சசிக்குமார் என்பவர், ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

திட்டத்தின் கீழ், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கு உணவு, தங்குமிடம், வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும். ஆனால் எந்த சலுகையும் வழங்கவில்லை. எந்தவித வசதியும் இல்லாத தங்குமிடம், தரமற்ற உணவுகளை மட்டுமே வழங்கினர். மேலும், மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் பெற்று தரவில்லை. ஆனால் மாணவர்களாக பெற்ற வேலையை பல்கலையின் பயிற்சி மூலமாக சேர்த்துவிட்டதாக தகவல்களை பரப்பினர். இந்த திட்டத்தின் நிதியிலும் பல வகைகளில் முறைகேடு செய்தனர். இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இதுதொடர்பாக விரைவில் புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் இந்த புதிய குற்றச்சாட்டை தெரிவித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது